தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள செவிலியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

215

தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள செவிலியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தமிழகமெங்கும் தங்களின் வாழ்வாதார உரிமைக்கானப் போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு சீரிய கவனமெடுத்து நிறைவேற்றித்தர வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 13000 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனோ நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்தில் மேலும் 4000 செவிலியர்கள் பெருந்தோற்றுத் தடுப்புப் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுக்கு உறுதியளித்தபடி பணிநிரந்தரம் செய்யாமல் இழுத்தடிப்பது அரசின் மீதான நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் செயலாகும். இரவு-பகல் பாராது மக்களின் இன்னுயிர் காக்கும் அரும்பணியில் அயராது ஈடுபட்டு வரும் செவிலியர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்திருப்பது அரசின் கொடுங்கோன்மை மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

பணியில் சேர்ந்து ஆறாண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாது ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்திருப்பது மட்டுமின்றி, அரசுப் பணியாளர்களுக்கான எவ்வித உரிமையோ, சலுகையோ வழங்காமல் மிகக்குறைந்த ஊதியமாக மாதம் ரூபாய் 7,700 மட்டுமே வழங்கி கொத்தடிமை போல் நடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒப்பந்த செவிலியர்கள் தங்களது வாழ்வாதார உரிமைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் அரசு இவர்களைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேல், ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படுவதைபோல இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய செவிலியர்களுக்கு, அரசு அறிவித்த ஒரு மாத ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்த செவிலியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் தொகுப்பூதிய முறையை அறவே ரத்து செய்வதுடன் மத்திய அரசின் செவிலியர்களைப் போல் காலமுறை அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் தமிழக அரசு ஒப்புக்கொண்ட பதவி பெயர் மாற்ற அரசாணை ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.

ஆகவே, 17000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களின் நீண்டகால நியாயமான இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்து, மக்களுக்கான மருத்துவ சேவை தடைபடாமல் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். தங்களின் வாழ்வாதார, அடிப்படை உரிமைக்காகப் போராடும் போற்றுதலுக்குரிய செவிலியர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கி, கோரிக்கைகள் வெல்லும்வரை துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திசிங்காநல்லூர் தொகுதி – துண்டறிக்கை தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை