அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கப்பட்டாலும் ஆப்கானில் போரைக் கைவிடாத ஒபாமா – இதயச்சந்திரன்

36

சமஷ்டி நிர்வாகத்தின் அரைவாசிப் பகுதியை மூடிவிட்டு,  தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் அமெரிக்க அதிபர் சொன்ன செய்திதான் இக்கட்டுரையின் தலைப்பு.

அமெரிக்க அரசின் பெருமளவிலான நிர்வாகத்திற்கு காலவரையறையற்ற விடுமுறை.
சுமார் எட்டு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு. பனிப்பொழிவுக் காலம் வருமுன், மியாமி கடற்கரைக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்ளச் சொல்லும் வசந்த அழைப்பு அல்ல இது.
அமெரிக்காவின் நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லை (Debt ceiling)74 வது தடைவையாக   மீறப்படுகிறது. அதனால் உருவான பிரச்சினையே இது.

அமெரிக்க காங்கிரசிற்கும் செனட்சபைக்கும் ஒபாமாகெயாரில் (Obamacare ) முரண்பாடு வந்ததால் , அரசின் கட்டமைப்பே ஆட்டம் கண்டு விட்டதென எண்ணக்கூடாது.
இவ்வாறான தோற்றப்பாட்டினை உருவாக்கவே உலக மைய நீரோட்ட ஊடகங்கள் விருப்புகின்றன.

சந்தையை சமாதானப்படுத்த, முதிர்ச்சியடையும் கடன்களை ,’முறிகளை மீள வாங்கும் நிகழ்ச்சித் திட்டம்’ ஊடாக வாங்கும்போதே அமெரிக்காவின் வங்குரோத்து நிலைமை அம்பலமாகிவிட்டது.
ஒவ்வொரு மாதமும் இதற்காக $85 பில்லியன் டொலர்களை செலவிட்டார் சமஷ்டி கையிருப்பு மையத்தின் தலைவர் பென் பெர்னாங்கி.
இப்பணத்தில் திறைசேரி மற்றும் வீட்டுக்கடனிற்கு உத்தரவாதம் வழங்கும் பிணையங்கள் வாங்கப்பட்டது.

இத்தகைய  சொந்தக்கடனைத் தானே வாங்கும் விளையாட்டில் மாற்றம் ஏற்படப்போவதாக அறிவித்தல் வந்தவுடன், மீண்டும் அமெரிக்க திறைசேரி முறிகளை வாங்குவதற்கு உலகின் முதலீட்டு முதலைகள் பாய்ந்தோடிச் சென்றன. வட்டி வீதம் அதிகம் என்பதுதான் முக்கிய காரணம்.

நிதி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அல்லது கார்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அவற்றின் தலையாய நோக்கம் இலாபம்தான்.
‘இலாபம் என்பது கெட்ட வார்த்தையல்ல ‘ என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் கூறியதை சகல லண்டன் பத்திரிக்கைகளும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டதையும் நினைவிற் கொள்வோம்.

ஆகவே அவை செல்லும் போது சும்மா செல்லவில்லை. கூடிய இலாபத்திற்காக ஏற்கனவே முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முறிகளை, பிணையங்களை விற்றபின்பே அமெரிக்கா சென்றன.

அதேவேளை, இந்திய  நாணயத்தின் மதிப்பு ,அண்மைக்காலமாக தொடர்சரிவிற்கு உள்ளாகும் நிகழ்விற்கு இதுதான் முழுமுதற்காரணியென புதிய மத்திய வங்கித்தலைவர் ரகுராம் ராஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு பொருளாதாரப்பின்னடைவின் பின்னர் , தற்போது’அமெரிக்க அரசிற்கு மூடுவிழா’ என்று ஆரம்பித்திருக்கும் இப்பிரச்சினையால், $15.7 ட்ரில்லியன் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, 300 மில்லியன் டொலர்களை தினமும் இழக்குமென கணிப்பிடப்படுகிறது.

இதுவொரு சிறுதொகை என்றும், இதனையிட்டு ஏன் பங்குச் சந்தைக்காரர்கள் அச்சப்படவேண்டும் என்று கூறுவோரும் இருக்கின்றார்கள். இங்குள்ள பிரதான சிக்கல் என்னவென்றால், அமெரிக்கத் திறைசேரியின் கடன் வாங்கும் அளவின் எல்லையை திறைசேரி தொட்டுவிடும் நிகழ்வு அக்டோபர் 17இல் வருகிறது.

கடன் எல்லையை அதிகரிப்பதற்கு , எதிரணியான குடியரசுக்கட்சி இடையூறாக இருப்பதாக ஒபாமா கருதுகின்றார்.
இதனை நேரடியாகக் கூறாமல், தான் கொண்டுவரும் சுகாதார நலன்சார் சட்டத்திற்கு எதிராக குடியரசுக் கட்சியினர் போர்க்கொடி தூக்குவதாகவும், அதனால் அடுத்த ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்டத்தை எதிர்ப்பதாகவும், இதன் எதிர்வினையாக இலட்சக்கணக்கான அமெரிக்க கடும் உழைப்பாளர்களுக்கு குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய சுகாதார காப்புறுதியை இவர்கள்  தடுப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறுவது , அக்டோபர் 17 விவகாரத்தை திசைதிருப்ப மேற்கொள்ளும் முயற்சி என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இப்போது அமெரிக்க அதிபர் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை அரச கடன் எல்லையை நீடிக்கும் விவகாரமாகும்.
இதைச் செய்யாவிட்டால் செலவினைக்குறைக்க வேண்டும். ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி, $16.394 ட்ரில்லியன் என்கிற ,சட்டபூர்வமான கடன் வாங்கும் எல்லையின் விளிம்பினை திறைசேரி தொட்டுவிட்டது.

இதுவரை ஏதோவொரு வகையில் அதனைச் சமாளித்துகொண்டிருக்கிறது திறைசேரி. ஆனாலும் உள்நாட்டு நிதிக் கொடுப்பனவுகளுக்காக அதனால் புதிதாக கடன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் எதிர்க்கட்சியினால் வரவுசெலவு திட்டத்தில் மோதல் நிலை உருவாகியுள்ளது.
ஆனாலும், எதிர்க்கட்சியினர் எத்தனை இடையூறுகளை விளைவித்தாலும், சுகாதார நலன் திட்டத்தை தான் கைவிடப்போவதில்லை என்று இம்மாதம் 1 ஆம் திகதியன்று அதிபர் ஒபாமா தெளிவாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் ஒபாமாவின் சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு இழுத்தடிப்பதுதான் குடியரசுக்கட்சியினரின் திட்டமாகும்.

இவ்வாறான குடியரசு- ஜனநாயக கட்சி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், அமெரிக்க அரசியலமைப்பின் 14 வது திருத்தச் சட்டமானது, கடன் எல்லையை அதிகரிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்குமெனக் கூறப்படுகிறது. அது குறித்தான திறந்தவெளி உரையாடலுக்கு இடமிருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ‘கடன் வாங்கும் அளவின் உச்சவரம்பு’ என்றால் என்ன? அதனை எக்காரணிகள் தீர்மானிக்கின்றன? அந்த வரம்பினை மீறிச் சென்றால் என்ன நடக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனாலும் இப்பத்தி எழுத்தின் அவசியம் கருதி சில விளக்கங்களை முன்வைத்து நகரலாம்.

அமெரிக்காவில் இதன் வரலாறு 1917இல் இருந்து ஆரம்பமாகிறது. முதன்முதலாக $11.5 பில்லியன் டொலர் நிர்ணயம் செய்யப்பட்டது. இடையில் இரண்டாம் உலக யுத்த காலத்தில்,அதாவது 1940 இல் $43 பில்லியனாக உயர்த்தப்பட்டு 2011 இல் $16.7 ட்ரில்லியன் டொலர்களாக இந்தக் கடன் பெறும் அளவின் உச்ச நிலை அதிகரிக்கப்பட்டது.

மார்ச் 1962 இலிருந்து இற்றைவரை 74 தடவைகள் கடன் உச்சவரம்பு மாற்றப்பட்டாலும், இதனை சீராக வைத்திருக்கும் பொருண்மிய சூத்திரத்தை இந்த தாராளவாத உலகமயமாக்கல்வாதிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த  உச்சவரம்பு நிர்ணய விளையாட்டு இனி எமக்குத்தேவையில்லையென்று, கடந்த ஜனவரி மாதமளவில், சமஷ்டி கையிருப்பு நிதியத்தின் தலைவர் பென் பெர்னாங்கி அவர்கள் சலிப்போடு கூறுமளவிற்கு அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது.

ஆகஸ்ட் 2011இல் இது போன்ற சிக்கலான சூழல் ஒன்று  உருவாகியது. அமெரிக்கத் திறைசேரியானது நிர்ணயிக்கப்பட்ட கடன் உச்சவரம்பினைத் தொட்டுவிட, கடன் மதிப்பீட்டு முகவரமைப்பான ஸ்டான்டார்ட் அண்ட் புவர் (S &P ) , அமெரிக்காவின் கடன் பெறும் திறன் அளவினை ஒரு புள்ளியால் (notch)குறைத்து , சந்தை உலகில் பெறும் அதிர்வலைகளை தோற்றுவித்தது.
அமெரிக்காவின் திறைசேரிமுறிகளில் , உண்டியல்களில், பெருமளவு பங்கினை வாங்கிக் குவித்திருக்கும் சீனா போன்ற நாடுகள், கடன் மதிப்பீட்டு முகவரமைப்புக்களின் ( Credit Rating Agency) தரவுகளை நம்பியே முதலீடு செய்வார்கள் என்பது பொதுவான விதி.

ஆகவே ஒரு நாட்டின் கடன் அளவு உச்ச வரம்பிற்கும் (Debt Ceiling ) அந்நாட்டிற்கான கடன் மதிப்பீட்டிற்கும் (Credit Rating ) இடையே தீர்மானகரமான பொதுவான அம்சங்கள் இருப்பது புரிகிறது.
அதிலும் கடன் பெறும்  உச்ச வரம்பினைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக  அரசிறைப்பற்றாக்குறை , வரவு-செலவு பற்றாக்குறை , சென்மதி நிலுவை என்பவற்றைக் குறிப்பிடுவது சாலப்பொருந்தும்.

அரசின் அத்தியாவசியச் செலவுகள் என்று பார்த்தால், சமூகப்பாதுகாப்புக் கொடுப்பனவுகள், தனியார் நிறுவனங்களுக்கான கடன்கள், விற்ற முறிகளுக்கான (Bond ) வட்டியும் முதிர்ச்சியடையும் போது செலுத்தும் முழுத்தொகை, பாதீட்டுக்கு ஒதுக்கும் நிதி, என்பவற்றைக்
குறிப்பிடலாம்.

இருப்பினும் தனது  நிர்வாகங்களுக்கு மூடுவிழாவினை அமெரிக்க அரசு நடாத்திக் கொண்டிருக்கையில், ஆசிய பங்குச் சந்தை அதிர்ச்சியடையவில்லை. அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் ரூபாய் நாணய பெறுமதியும் உயர்ந்துள்ளது.
ஆனாலும் ஆப்கான் யுத்தத்தை அமெரிக்கா நிறுத்தப்போவதில்லை.

யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் என்பார்கள். ஆனால் ஏகாதிபத்தியங்கள் ஆளும் இவ்வுலகில், யுத்தம் என்பது அரசியல்- பொருளாதார நலன் சார்ந்தது. நவீன ஆயுத உற்பத்தியும் அதற்கான சந்தையும் யுத்தங்களால் வளர்ச்சியுறுகிறது.
சந்தைக்காக யுத்தங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஈரான் மற்றும் சிரியாவுடனான முறுகல்நிலை, சவூதி அரேபியா, குவைத் , கட்டார் , பஹ்ரேன் போன்ற நாடுகளின் நவீன ஆயுதக்கொள்வனவினை அதிகரிக்கும். பில்லியன் டொலர் கணக்கில் ஆயுத விநியோகம் நடக்கும்.

அண்மையில் ஈரான் காட்சிப்படுத்திய நவீனரக ஆளில்லா தாக்குதல் போர்விமானம், சவுதியின் படைத்துறையில் புதிய அமெரிக்க போர்விமானங்களின் வரவினை எதிர்பார்க்கும். ஆனால் அவை இஸ்ரேலுக்கு வழங்கிய தரத்தில் இருக்காது. அது அரசியல்.
பெரும்பாலான ஏற்றுமதி உற்பத்திப் பண்டங்களில் ஆசியாவோடு போட்டிபோட முடியாவிட்டாலும், நவீனரக போர்விமானங்கள் மற்றும் ஏனைய போர்த்தளபாட விநியோகத்தில் அமெரிக்காவை மிஞ்ச இவர்களால் முடியவில்லை.

உலக ஆயுதச் சந்தையில் அமெரிக்காவின் வகிபாகம் அந்தளவிற்கு பலமாக இருக்கிறது. அதன் படைத்துறை கைத்தொழில் வளர்ச்சியானது ,முதலாம் உலக யுத்த காலத்திலிருந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
ஆகவே அரச நிர்வாகம் மூடப்பட்டாலும் , இது இயங்கிக்கொண்டுதானிருக்கும்.

இருந்தாலும், ஏகாதிபத்தியங்கள் ஒன்றை ஒன்று விழுங்க முயன்று உதிர்ந்து போகும் என்கிற, புரட்சியாளர் லெனினின் கருத்துநிலை இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை, 75 வது தடவையாக கடன் எல்லையை உயர்த்தப்போகும் உலகநாயகனின் இன்றைய நிலை உணர்த்துகிறது.