காக்கைகள் மாநாட்டில்
கண்டனத் தீர்மானம்
பாரதியே…
எப்படிப் பாடினாய்
‘காக்கை குருவி
எங்கள் சாதி’ என்று?
எங்களில்
ஒருவர் இறந்தால்
ஊரே கூடி அழுவோம்…
ஊரே இறந்துகிடந்தபோதும்
உங்களில்
ஒருவர்கூட அழவில்லையே…
இனியும்
காக்கை சாதி
எனச் சொல்லி
எங்கள் இனத்தை
களங்கப்படுத்தாதே பாரதியே…
– இது கவிதை அல்ல… ஒவ்வொரு தமிழனின் தலையிலும் காக்கைகள் இட்ட எச்சம்!
இன உணர்வும் மன உணர்வும் இற்றுப்போய்க்கிடப்பவர் களைப் பார்த்து காக்கைகள் காறித்
|
துப்புவதில் தப்பு இல்லையே. இத்தனை மொழிகள் வாழும் என் தாய்த் திருநாட்டில் மலையாளத் தீவிரவாதி என எவனாவது மாட்டி இருக்கிறானா? ஆந்திரத் தீவிரவாதி என யாரேனும் அலறி இருக்கிறார்களா? கன்னடத் தீவிரவாதியைக் கண்டுபிடித்து இருக்கிறார்களா? மராட்டியத் தீவிரவாதியை எங்கேயாவது தேடி இருக்கிறார்களா? மொழிவாரியாய் வேறு எங்கேயும் இல்லாத தீவிரவாதிகள் ‘தமிழ்த் தீவிரவாதிகளாக’ இந்தத் தாய் மண்ணில் மட்டும் தேடப்படுகிறார்களே… மொழிக்காகப் போராடுபவர்களைத் தீவிரவாதிகளாக இட்டுக்கட்டும் துயரங்களை வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா தோழர்களே?
தனித்த பெருமைகளைத் தடுப்பதற்காகவே ‘இந்தியன்’ என்கிற கட்டுக்குள் எங்களைக் கட்டிய புத்திமான்களே… எங்கள் இனத் துயரத்துக்கு மலையாள மண் என்றைக்காவது மனம் வருந்தி இருக்கிறதா? ஆந்திர தேசம் என்றைக்காவது எங்களுக்காக அழுது இருக்கிறதா? கர்நாடகம் என்றைக்காவது எங்களுக்காகக் கதறி இருக்கிறதா? என் மீது விழுந்த அடி எவனுக்குமே வலிக்கவில்லை. சக மனிதனாகக்கூட என் கவலையில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் எதற்கடா எங்களுக்கு இந்தியன் என்கிற அடையாளம்?
ஈழமே இறந்து கிடந்தபோதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்காத தமிழகம், ஆந்திரத்தின் முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மறைந்தபோது, பக்கத்து மாநிலம் எனப் பதறி ஒரு நாள் அரசு விடுமுறையை அறிவித்ததே… அது தவறு என எந்தத் தமிழனாவது தடுத்தானா?
தமிழ்த் தேசிய உணர்வுக்குள் எங்களைத் தள்ளிவிட்டதே நீங்கள்தானே… மலேசியாவில் தமிழர்கள் துரத்தப்பட்டபோது, அங்கே இருந்த மலையாளிக்கோ, தெலுங்கருக்கோ வலிக்கவில்லை. காவிரிக்காக கருணை காட்டாதவர்கள் – முல்லை பெரியாறு விவகாரத்தில் முறுக்கிக் கொண்டு நிற்பவர்கள் – ஒகேனக்கல் விவகாரத்தில் எங்களை ஒதுக்கிவைப்பவர்கள் – பாலாறு விவகாரத்தில் கோளாறுகொள்பவர்கள் ‘இந்தியர்’ என்கிற அடையாளத்தில் மட்டும் நம்மோடு இணைவது சாத்தியமா தமிழர்களே? இதைச் சொன்னால் இன வெறி… இறையாண்மை மீறல்… தேசிய பாதுகாப்புக்குப் பங்கம்… தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம்!
மராட்டிய மண்ணில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் பேருந்து ஒன்றைக் கடத்துகிறான். மராட்டியக் காவலர்கள் அவனைச் சுட்டு வீழ்த்துகிறார்கள். அடுத்த கணமே கட்சி வேறுபாடுகளை தூக்கி வீசிவிட்டு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், லல்லு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பஸ்வானும், ‘எங்கள் மாநிலத்தானை எப்படிச் சுடலாம்?’ என மராட்டிய மண்ணையே உலுக்கினார்களே… தீவிரவாதச் செயல் செய்த ஒருவன் கொலையானதற்கே, அந்த மாநிலத் தலைவர்கள் குலைநடுங்கக் கொதித்தார்களே… ஆனால், கொத்துக் கொத்தாய் ஆயிரமாயிரம் தமிழர்கள் செத்து வீழ்ந்தபோதும் இந்தத் தாய்த் தமிழகம் கொதிக்கவில்லையே அய்யா? நிதீஷ் குமாரும் லல்லுவும் கொதித்தால்… அது இன உணர்வு. நான் கொதித்தால் மட்டும் இன வெறியா?
எப்போதுமே காங்கிரஸின் எதிரி… அதோடு, பாரதிய ஜனதா கட்சியை மட்டுமே நிலையான கூட்டாகக் கொண்டவர் மராட்டிய மண்ணின் தலைவர் பால் தாக்கரே. குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்களை அறிவித்தபோது, அவர் ஆதரித்தது காங்கிரஸ் வேட்பாளரைத்தான். காரணம், அம்மையார் பிரதீபா பாட்டீல் மராட்டிய மண்ணுக்குச் சொந்தக்காரர். ‘மண்ணுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்’ என்று நினைத்த பால் தாக்கரே எங்கே… ‘கூட்டணிக்குப் பிறகுதான் குடிமக்கள்’ என்று நினைக்கும் நம் தலைவர்கள் எங்கே?
‘எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்!’ எனச் சொன்னதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சி, ஐந்து மாதங்கள் என்னை சிறையில் அடைத்தவர்களிடம் கேட்கிறேன். ராமர் பாலம் விவகாரத்தின்போது, ‘கருணாநிதியின் தலையை வெட்டுவேன்’ என வேதாந்திரி சாமியார் வெறிக் கூச்சல் போட்டாரே… ‘தமிழகத்தின் முதல்வரை வெட்டுவேன் எனச் சொல்வது தேசியப் பாதுகாப்புக்குப் பங்கமாகிவிடாதா?’ என அந்தச்சாமியாரை யாருமே கேட்காதது ஏனய்யா? அடிப்பேன் என்றதற்காக என்னை அடைத்தவர்கள், வெட்டுவேன் என்றவரை விட்டுவிட்டார்களே… தமிழனை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; யார் வேண்டுமானாலும் வெட்டலாம் என்கிற விதியை தமிழகத்தை ஆளும் தலைவர்களே உருவாக்கிவிட்டதுதான் சொரணையைச் சுண்டும் துயரம்!
நாகசாகி நச்சு எங்களின் தலைமுறையைத் தாக்கியது. சோமாலியாவின் பசி எங்களின் வயிற்றை எரித்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பு எங்களை அலறவைத்தது. ஆப்கானின் துயரம்எங்களின் அடிமடியை நொறுக்கியது. ஈராக்கில் விழுந்த இழவு எங்களில் ஈரக்குலையை நடுக்கியது. சதாம் உசேனின் தூக்குக் கயிறு எங்கள் குரல்வளையையும் இறுக்கியது. பெனாசிர் பூட்டோவின் முடிவு எங்களையும் பேதலிக்கவைத்தது. உடலில் எங்கே அடிபட்டாலும் கண் அழுவதைப்போல, இந்த உலகத்தில் எங்கே துயரம் நிகழ்ந்தாலும் என் மண் அழுதது. ஆனால், என் மண் அழுதபோது, அதற்காக உலகில் எவருடைய கண் அழுதது? எல்லாவற்றுக்காகவும் அழும் எங்களைப் பார்த்து, எதற்காகவும் அழாதவர்கள் ‘இன வெறி’ என்கிறீர்களே… இது வரலாற்று வஞ்சனையாக இல்லையா?
பந்தங்களுக்காகப் பதறுவதையும், சொந்தங்களுக்காகத் துடிப்பதையும் இன வெறி எனப் பரப்புகிறார்களே… இதில் இருக்கும் மறைமுக அடக்குமுறையை படித்த தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்களில்சிலரேகூட இணையதளத்தில் ‘இன வெறியன்’ என எனக்கு அடையாளம் ஏவுகிறார்கள். இணையத்தில் ‘சீமான்’ என்கிற வார்த்தையை வைத்து விளையாடப்படும் விமர்சனங்களைப் படிக்கையில், சினம் வருவதற்குப் பதிலாக சிரிப்புத்தான் வருகிறது.
பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த ஒருவனிடம், ‘உனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கிடைத்தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டார்களாம். ‘தங்கத்தில் திருவோடு செய்து சிங்கப்பூருக்குப் போய் பிச்சை எடுப்பேன்!’ எனச் சொன்னானாம் அவன். விஞ்ஞானம் என்னும் வரப் பிரசாதத்தை நம் இளைய தலைமுறையும் அப்படித்தான் பயன்படுத்துகிறது. வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்… இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து ‘அவன் அப்படி… இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே… நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!
அதையும் தாண்டி இந்த அரசாங்கத்தைப்போலவே, இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதனை பெருமை பொங்க ஏற்றுக்கொள்கிறேன். நல்ல தமிழ்த் தாய்க்கும் நல்ல தமிழ்த் தகப்பனுக்கும் நான் பிறந்திருக்கிறேன் என்பதை ‘இன வெறியன்’ என்கிற வார்த்தை மூலமாக உறுதி செய்து கொடுத்தமைக்கு நன்றி!