முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்” என்று முழங்கி, தாய்த்தமிழையே தான்…

0

“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கி, தாய்த்தமிழையே தான் வாழும் தேசமென கொண்டாடிய தன்மானத்தமிழர்..!

"பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற சாதியப் பாகுபாடு கூடவே கூடாது” என்று போதித்த சமத்துவ நாயகர் தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் தோன்றிய திருநாள் இன்று!

அடிமை வாழ்வினைவிட விடுதலைச்சாவு மேலானது; விடுதலை அல்லது வீரமரணம் என முடிவெடுத்து, தம் இளம் வயதிலேயே போராட்டக் களம் கண்ட விடுதலைப்போராளி..!

கைரேகை வைக்க வேண்டும் என்ற இழிநிலையைச் சுமப்பதற்குப் பதிலாகக் கட்டைவிரலை வெட்டி எறியலாம் என்று கிளர்ச்சி செய்த புரட்சியாளர்..!

"தவறுகள் நடப்பது தீயவர்களால் அல்ல; அதை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் நல்லவர்களால்தான்!" என்றும்,

"நான் யாரையும் எதிரியாகக் கருதுவபவனில்லை; தவறுகள் நடப்பதைக் கண்டிக்கும் என்னை எதிரியாகப் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!" என்றும்,

"தான் வாழ, பதவி தேவை என்று எண்ணுபவர்களிடம் உண்மைக்குப் புறம்பானவற்றைத்தான் எதிர்பார்க்க முடியும்!" என்றும்,

"பதவியை ஒரு சேவையாகக் கருதுபவர்களிடம் ஆட்சி இல்லாமல் போனால், மக்களுக்கு நலன் என்பது வெறும் பகல் கனவுதான்" என்றும்,

எக்காலத்திற்கும் பொருந்தும் அரசியல் மொழிகளை அருள்மொழிகளாக அள்ளித்தந்த கால ஞானி..!

“தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ – ஆயுதமோ இல்லை!” என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர்..!

“எனக்கு பாய்தான் தெரியும், பஞ்சு மெத்தை தெரியாது; பதுங்கத் தெரியும், பயம் கொள்ளத் தெரியாது; விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது!” என்று வாழ்ந்த எளிய மகன்..!

"பணத்திற்கு மயங்கி வியாபார அரசியலுக்கு இடம் கொடுத்துவிடாது; விவசாய அரசியலை அமைத்து, நாட்டின் பண்பாட்டையும், ஏழை மக்களின் நல்வாழ்வையும் பாதுகாக்க வேண்டும்!" என்று முழங்கிய மக்கள் தலைவர்..!

"உண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரைப் பேசு! நீயே உண்மையான வீரன்..!" என்று கற்பித்த பெருந்தகை..!

"மலர்மாலைக்கு ஒருவன் கழுத்தை நீட்டுவதைப்போல, மரணக் கயிற்றுக்கு எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவன்தான் வீரன்!" என்று எங்களைப் போன்ற தமிழிளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டிய வீரத்தமிழ்மகன்..!

"தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென" வாழ்ந்து, தீரமிக்க விடுதலைப் போராளிகளைத் தாயக விடுதலைக்குத் தந்த தன்னிகரற்ற தலைவன்..!

தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களினுடைய திருப்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!

மதிப்புமிக்க நமது தாத்தா தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
பைந்தமிழ் இனத்தில்
பசும்பொன் நிலத்தில் பிறந்த
பாரதம் காக்க
படை கட்டி சிறந்த
எங்கள் தாத்தா
தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவருக்குப்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!

பேரப் பிள்ளைகள் பெருமையோடு செலுத்தும்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!

குற்றப் பரம்பரை சட்டத்தை உடைத்த
கொற்றப் பரம்பரை வரலாற்றை படைத்த
தேசத்தின் விழியே!
தெய்வீக ஒளியே!
தென்னாட்டு புலியே!
தீந்தமிழ் மொழியே!

எதிர்காலத் தலைமுறை எங்களின் வழியே!
உங்களுக்கு எங்களின் புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!

தென்பாண்டி நாட்டின் முத்தே!
விடுதலைப் போரின் வித்தே!
வீர மறவர்களின் சொத்தே!

சத்தியத்தின் பிறப்பே!
அறத்தின் சிறப்பே!
மாவீரன் நேதாஜியின் மறுவுருவே!
தெய்வத்தின் திருவுருவே!
உங்களின் திருப்புகழ் போற்றி
பேரப் பிள்ளைகள் நாங்கள்
பெருமையோடு செலுத்தும்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!

உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!
தீய அரசியல் ஒழிய!
தூய அரசியல் மலர!
கேடு கெட்ட பணநாயகம் ஒழிய!
மாண்புமிக்க ஜனநாயகம் மலர!
உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!

தெய்வத்திருமகன் நமது தாத்தா
தேவர் பெருமகன் பெருமை போற்றி
உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!

உங்கள் மொழியே! எங்கள் கீதை!
உங்கள் வழியே! எங்கள் பாதை!
உங்கள் நினைவைச் சுமந்து,
கனவை நோக்கி
எங்கள் பயணம்!

புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
உங்களுக்கு எங்களின் புகழ் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர், பள்ளி…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத்…