தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை! – சீமான் கடும் கண்டனம்

31

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும், தற்கொலை முன் பேசிய ஒலிப்பதிவுகளும் மனச்சான்றுள்ள ஒவ்வொரு மனிதரின் இதயத்தையும் நொறுங்க செய்தது.

ரிதன்யா தற்கொலைக்கு காரணமான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது அரசியல் அழுத்தம் காரணமாக முறையாக பிரிவுகளின்கீழ் வழக்கு பதியவில்லை எனும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகள் மூவர் மீதும் எளிதில் பிணையில் வரக்கூடிய வழக்கு பதிந்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி வேறுவழியின்றி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை. இந்த நூற்றாண்டிலும் வரதட்சணைக் கொடுமைகளினால் பெண் பிள்ளைகள் மரணிக்கும் கொடுமைகள் நிகழ்ந்தேறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலமாகும். வரதட்சணை கொடுமைகளுக்கு பலியாகிய பெண்களில் தங்கை ரிதன்யாவின் மரணமே இறுதியானதாக இருக்கட்டும்!

ஆகவே, தங்கை ரிதன்யாவின் மரணத்திற்கு காரணமான மூவர் மீதும் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து, எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆட்படாமல் கடுந்தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திநியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் தாக்குதல்: நடப்பது மக்களாட்சியா? வளவேட்டையர்களுக்கானக் காட்டாட்சியா? – சீமான் கேள்வி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி தாத்தா கலியபெருமாள் சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம்