கேரளாவில் தொடர்வண்டி மோதிய விபத்தில் பணியின்போது உயிரிழந்த தூய்மைப்பொறியாளர்கள் நால்வரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு தொகை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

13

கேரள மாநிலம், பாலக்காடு அருகில், சோரனூர் தொடர்வண்டி பாதையில் கடந்த 02.11.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தூய்மைப்பொறியாளர்களான அ.லட்சுமணன், வள்ளி, ராஜம்மாள், இரா.லட்சுமணன் ஆகியோர் மீது கேரள விரைவு தொடர்வண்டி மோதிய விபத்தில் நால்வரும் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்பு உறவுகளை இழந்து மீளவியலா இப்பெருந்துயரத்தில் தவிக்கும் நால்வரின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

உயிரிழந்த தூய்மைப்பொறியாளர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு தலா 3 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக அறிவித்துள்ளது போதுமானதன்று. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கே 10 இலட்ச ரூபாய் வழங்கும் திராவிட மாடல் அரசு, சிறிதும் மனச்சான்று இன்றி தூய்மைப்பொறியாளர்களின் குடும்பத்திற்கு வெறும் 3 இலட்ச ரூபாய் மட்டும் வழங்குவது எவ்வகையில் நியாயமாகும்?

ஆகவே, தூய்மைப்பொறியாளர்கள் நால்வரும் பணியின்போது உயிரிழந்ததைக் கருத்திற்கொண்டு அவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு தலா 25 இலட்ச ரூபாயும், விபத்து நிகழ்ந்த கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு தலா 25 இலட்ச ரூபாயும், இந்திய ஒன்றிய அரசின் தொடர்வண்டித்துறை தலா 50 இலட்ச ரூபாயும் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

உயிரிழந்த அன்பு உறவுகள் அனைவருக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1853342659353432321

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழீழ அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது!
அடுத்த செய்திமும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்