#நூல்_பரிந்துரை 05
திராவிடம் குறித்த
மீளாய்வுக் கருத்தாடல்கள்
தொகுப்பாசிரியர்: மகாராசன்
தமிழ்ச் சமூகத்தின் அக வாழ்விலும், புற வாழ்விலும் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்வதோடு, கலை இலக்கிய அறிவுப் புலப்பாட்டுக் கருவியாகவும் வரலாற்று நெடுகிலும் வந்துகொண்டிருப்பது தமிழ் மொழி. தமிழரின் பண்பாட்டு முகமான தமிழ், உலகம் தழுவிய அறத்தையும் மானுட மேன்மைக்கான அறிவையும் கொண்டிருப்பது. தமிழராய் இணைவதற்கும், தமிழராய் எழுவதற்கும் தமிழ் அடையாளமே மீட்சிக்கான கருவியுமாகும்.
இத்தகைய எழுச்சியும் மீட்சியும் தமிழர் வாழ்விலும் பண்பாட்டிலும் அரசியலிலும் ஏற்படாத வண்ணம், தமிழ் அடையாளத்தை மறைக்கும் வகையில் பல்வேறு கருத்தாடல்களும் சொல்லாடல்களும் தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளன; சுமத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் 'திராவிடம்' என்பதுமாகும்.
தமிழ்ச் சமூகத்தின் மொழியியல், அரசியல், பண்பாட்டியல் தளங்களில் திராவிடம் எனும் சொல்லாடல், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்தச் சொல்லாடல் கட்டமைத்திருக்கும் பொருண்மைகள் குறித்தும், அடையாள நுண் அரசியல் குறித்தும் மீளாய்வுக் கருத்தாடல்களை முன்வைத்து, திராவிடம் எனும் அடையாளக் கற்பிதங்களை அறிவார்ந்த முறையில் எடுத்துரைத்திருக்கும் நோக்கில், பல்வேறு அறிஞர் பெருமக்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் எனதருமைத் தம்பியும் ஆய்வாளருமான மகாராசன்.
தாத்தா அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ஐயா ம.பொ.சிவஞானம், பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஐயா சி.பா.ஆதித்தனார், ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம், ம.சோ.விக்டர், பெ.மணியரசன், ஒரிசா பாலசுப்பிரமணியம், ஜெயபாஸ்கரன், தமிழ் முகிலன், தியாகு, குணா, மகாராசன் ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
தமிழ்த் தேசிய இனத்தின் அடையாள அரசியல் குறித்த பன்முக உரையாடல்களையும், திராவிடக் கற்பிதங்களையும் இந்நூலின் கட்டுரைகள் விரிவாக முன்வைத்திருக்கின்றன.
'திராவிடம்' எனும் அடையாளம், தமிழர் அல்லாதார் ஆள்வதற்கும் வாழ்வதற்கும் உகந்த வகையில், தமிழர் அடையாளம் என்பதாகத் திரித்து, தமிழர் மேல் திணிக்கப்பட்டு, தமிழ்ச் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவார்ந்த முறையில் தெரிந்துகொள்வதற்கு, தமிழர்கள் அனைவரும் இந்நூலைப் படிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



