சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

191

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கல்லுவழி கிராமத்தில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்பு இளவல் ஜேக்கப் பாரி அவர்களின் வீடு புகுந்த கொள்ளையர்கள் கடந்த 26ஆம் தேதி அதிகாலையில் அவரது குடும்பத்தினரை அரிவாளால் வெட்டி, நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சாதிய வன்முறைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வரும் கொடுமையான சூழல் நிலவுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற ஒன்று தமிழ்நாட்டில் செயல்படுகிறதா என சந்தேகப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு என்பதே முற்றாக சீரழிந்துள்ளது. வேங்கைவயல் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை, ஆதித்தமிழ்க்குடி பெண்ணை கொடுமைபடுத்திய பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க தனிப்படை, கன்னியாகுமரியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி அன்புத்தம்பி சேவியர் குமாரை கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை என்ற வரிசையில் தற்போது அன்பு இளவல் ஜேக்கப் பாரி அவர்களின் வீடு புகுந்து தாக்கி கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடி பிடிக்கவும் புதிதாக ஒரு தனிப்படை என ஒவ்வொரு முறையும் தனிப்படை அமைக்கப்படுகிறதே ஒழிய குற்றவாளிகளைப் பிடித்தபாடில்லை. இதுவரை அமைக்கப்பட்ட தனிப்படைகளைத் தேடி பிடிக்க ஒரு தனிப்படை அமைக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை.

ஆகவே, காவல்துறையைத் தமது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்படுத்த வேண்டுமெனவும், சிவகங்கை கல்லுவழி கிராமத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஜேக்கப் பாரி அவர்களின் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

கொள்ளையர்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அப்பா சின்னப்பன், அம்மா உபகாரமேரி, தங்கை அரசி, மகள் ஜெர்லின், மகன் ஜோபின் ஆகியோர் விரைந்து நலம்பெற்றுத் திரும்பிட விழைகிறேன். அன்புத்தம்பி ஜேக்கப் பாரி அவர்கள் மனத் துணிவுடன் தற்போதைய இக்கட்டான சூழலிருந்து மீண்டுவர எனது அன்பையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

https://x.com/Seeman4TN/status/1752211095731716568?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘புரட்சி தீ’ – தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஇந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப மறுப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்