முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர் ஐயா மன்னர் மன்னன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

384

அறிக்கை: புரட்சிப்பாவலர் பாரதிதாசன் அவர்களின் மகனும், முதுபெரும் தமிழ்ப்பேரறிஞருமான ஐயா மன்னர் மன்னன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி

தனது எழுச்சிமிக்க பாக்களால் தமிழ்ச்சமூகத்திற்கு இனப்பற்றை மூட்டி, உணர்ச்சியூட்டிய பெரும்பாட்டன் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் அவர்களின் மகனும், முதுபெரும் தமிழ்ப்பேரறிஞருமான ஐயா மன்னர் மன்னன் அவர்கள் மறைவுற்ற கொடுஞ்செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயா மன்னர் மன்னன் அவர்களை புரட்சிப்பாவலரின் மகன் எனும் அடையாளத்தோடு சுருக்கிவிட இயலாது. பெருங்கவிஞர், ஈடு இணையற்ற எழுத்தாளர், தன்னிரகற்ற பேச்சாளர், மொழிப்போர் செயல்வீரர், விடுதலைப்போராட்டத் தியாகி எனத் தனது தனித்துவமிக்க செயல்பாடுகளால் தனிப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர். 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். புரட்சிப்பாவலர் பாரதிதாசனின் வரலாற்றை எழுதி வெளியிட்டுள்ளார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பல்வேறு ஆண்டுகள் பொறுப்பிலிருந்து அதற்குச் சொந்தக்கட்டிடம் கட்டித் தந்துள்ளார். இது மட்டுமல்லாது, பொது வாழ்க்கையில் பங்கு கொண்டு பல்வேறு அமைப்புகளிலும் முக்கியப் பொறுப்புகளில் அங்கம் வகித்திருக்கிறார். தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது, கலைமாமணி உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். பெருந்தலைவர் காமராசர், ஐயா பெரியார் உள்ளிட்ட எண்ணற்றத் தலைவர் பெருமக்களுடனும், அறிஞர் பெருந்தகைகளுடனும் நட்புறவு கொண்டு விளங்கியிருக்கிறார். இவ்வாறும் தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதே தனது அருந்தவப்பயனென வாழ்ந்து மறைந்த ஐயா மன்னர் மன்னன் அவர்களின் மறைவு என்பது தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு என்றால், அது மிகையில்லை! ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் அறிவுலகத்திற்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன போராட்டம் – பாபநாசம்
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி