மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் (பயிற்சி) பணியாளர்கள் என்ற வரையறையில் நேரடி பணி நியமனம் மூலம் 10000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 9613 நபர்கள் பணியேற்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் கேங்மேன் பயிற்சி முடித்த பின் கடந்த, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கேங்மேன் பணியாளர்களாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். கேங்மேன் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டபோது மின்வாரியத்தால் வேலை வரைமுறை வழங்கப்பட்டிருந்த போதும், அந்தப் பணிகளைத் தவிர்த்து மற்ற பணிகளையும் அவர்களைச் செய்ய சொல்லி வற்புறுத்தி மின்வாரியத்தில் 9613 கேங்மேன் பணியாளர்களும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கேங்மேன் பணியாளர்களுக்கு அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலையைத் தவிர்த்து மற்ற வேலைகளைச் செய்யப் பணித்ததன் விளைவாக மின் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை 40க்கும் மேற்பட்ட கேங்மேன் பணியாளர்கள் உயிர் இழந்துள்ள கொடுமைகள் நிகழ்ந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்ட கேங்மேன்கள் கை, கால் உறுப்புகள் இழந்து பெருந்துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். கேங்மேன் பணியாளர்களுக்கு அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலையை மட்டுமே வழங்க வேண்டுமென நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் வாயிலாகவும், தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் வாயிலாகவும் மின்வாரியத்திற்குப் பலமுறை கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 06.11.2023 அன்று கோவை /வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட அன்னுர் / வடக்குப் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்த அன்புத்தம்பி கேங்மேன் செங்கோட்டையன் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் அல்லாத மற்ற மின்வாரிய பணிகளை மேற்கொள்ளப் பணிக்கப்பட்ட போது மின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள துயரம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக அன்று மாலையே தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மூலமாக அவருடைய உயிரற்ற உடலை வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பொழுது காவல்துறையை வைத்து தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களும் மேற்படி இறந்துபோன கேங்மேன்.செங்கோட்டையன் அவர்களின் பெற்றோர்களும் மிரட்டப்பட்டு உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதோடு, மின்வாரியத்தின் சார்பாக எவ்வித இழப்பீடும் இன்றுவரை வழங்கப்படாமலேயே அவரது உடல் எரியூட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 29.11.2023 அன்று காலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை நங்கநல்லூர் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் அன்புத்தம்பி கேங்மேன் ஜெகதீசன் தனக்கு ஒதுக்கப்பட்ட பணி அல்லாத மற்ற மின்வாரிய பணிகளைச் செய்ய பணிக்கப்பட்டபோது, மின் தாக்குதலுக்கு இலக்காகி இறந்துள்ளார். அவரது உடலை சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வைத்து கேங்மேன் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆகவே, மின்விபத்துகளால் கேங்மேன்கள் தொடர்ச்சியாகப் பலியாவதைத் தடுக்க கேங்மேன் தொழிலாளர்களை அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், கேங்மேன் பணியாளர்கள் வாய்ப்புகளின் அடிப்படையில், தங்கள் சொந்த மாவட்டத்திற்குப் பணிமாறுதல் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவையும் வழங்குவதோடு, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களில் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்றம் செய்து அறிவிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.