என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே…
இன்று மாவீரர் நாள். தாய் மண்ணின் விடுதலை என்கின்ற உன்னத கனவிற்காக தன்னுயிரைத் தந்த மனித தெய்வங்களின் புனித நாள். சுற்றி சுழலுகிற இந்த பூமிப் பந்தில் தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்காக ஒரு நாடு அமைய வேண்டும் என்கிற இலட்சியத்திற்காக இறுதிவரை போராடி களத்திலேயே தன் இறுதி மூச்சை சுவாசித்த மானங்காத்த மறவர்களின் ஈகப் பெருநாள்.
என் உயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய திசையில் தமிழீழம் காண அலைகடல் போல ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் நினைவைப் போற்றுகின்ற திருநாள். வரலாற்றுப் பக்கங்கள் முழுக்க வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் இறையாண்மையோடு வாழ உதட்டில் நிறைந்த புன்னகையோடு மரணத்தை முத்தமிட்ட மகத்தான மாமனிதர்களின் பொன்னாள். எல்லோரையும் போல சாதாரண மனிதர்களாக பிறந்து தாயக விடுதலை என்கின்ற புனித நோக்கத்திற்காக மரணத்தை தொட்டு தன் வாழ்வையே சரித்திரம் ஆக்கிக் கொண்ட நம் நாயகர்களின் நினைவு நாள். தாய் நிலம் காக்க தன்னலம் மறுத்து உயிரைக் கொடையாக கொடுத்து விதையாக விழுந்த மாவீரர்களை வணங்கி நமக்குள்ளாக உறுதி ஏற்கின்ற உணர்ச்சி நாள்.
இந்தப் பூமியில் தோன்றிய முதல் மனிதன் பேசிய முதுமொழி நம் தாய்மொழி தமிழ் மொழி. உலகத்தில் தோன்றிய மற்ற இனங்கள் எல்லாம் நதிக்கரை ஓரம் நாகரீக எல்லைகளைக் கற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழர் என்கின்ற தேசிய இனம் தான் தனக்கென தனித்துவமான பண்பாட்டு விழுமியங்களோடு, மொழி இலக்கிய இலக்கண உச்சங்களோடு, தன் உணவைத் தானே விளைய வைத்து தயாரிக்கின்ற வேளாண்மை ஆற்றலோடு, விழிகளில் தோன்றும் காட்சியை எல்லாம் வியந்து பார்க்கின்ற மற்றவர் முன் அதை ஆராய்ந்து பார்க்கின்ற அறிவியல் திறனோடு, கொண்டிருக்கும் குணநலன்களில் அறம் என்கின்ற அதி உச்ச உயர்வோடு செம்மாந்து வாழ்ந்த இனம்.
பாய்ந்து வரும் கடல் அலையைப் பார்த்து மற்ற இனங்கள் எல்லாம் பதறிக் கொண்டிருக்கும்போது காற்றைக் கிழித்து கடலை அறுத்து சீறிப் பாய்ந்த தமிழரின் கணவாய்கள் கரைத்தொட்ட இடங்களில் எல்லாம் தமிழனின் கொடி பறந்தது.
பாட்டன் புலிக்கொடி பாரினில் பறந்தது என்றெல்லாம் நாம் பேசும் சொற்கள் வெறும் புனைவுக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட பெருமிதங்கள் அல்ல. நம் இனத்தின் மூத்தோர் கொண்டிருந்த வீரத்தைக் காட்டுகிற வரலாற்றுக் கண்ணாடியின் பிரதிபலிப்பு.
நம் இனத்தின் அடையாளங்களாக திகழ்கின்ற அருண்மொழிச் சோழனும், அவனது மகன் அரிசேந்திர சோழனும் களம் பல கண்டு படை பல நடத்தி பாரினில் புலிக்கொடி பறக்காத இடம் ஏதுமில்லை என்று தனது ஆற்றலால் நிரூபித்துக் காட்டினார்கள். கற்கால மனிதர்களாய் மற்ற இனத்தார் உலவிக் கொண்டிருந்த காலத்தில் தான், மலை உச்சியில் இருந்து பாய்ந்து வருகிற நதிநீரைத் தடுத்து நிறுத்தி அதை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற பேரறிவோடு காவிரியைத் தடுத்து கல்லணை கட்டி இந்த உலகிற்கு காட்டினான் நம் பாட்டன் கரிகால் பெருவளத்தான்.
இப்படி வாழ்ந்த வரலாறுகளில் பெருமையை மட்டும் சுமந்த நம் இனம் காலப்போக்கில் தனது பெருமிதங்களை மறந்து, வீரத்தை இழந்து அறிவினை துறந்து, வந்து போனவர்களுக்கெல்லாம் வளத்தை எல்லாம் வாரி கொடுத்து தனது பரந்த மனப்பான்மையால் தன் சொந்த நிலத்திலேயே மூன்றாம் தர குடிமக்களாக மாறிப்போன காலத்தில்தான், இந்தக் காரிருளை நீக்க, நம் களங்கத்தைத் துடைக்க, நம் இனத்தில் பிறந்தவர்கள் தான் மாவீரர் தெய்வங்கள்.
உலகம் வியக்க வாழ்ந்த ஒரு இனம் தாழ்வு மனப்பான்மையால் அடிமை இனமாக, உள்ளிருந்து கெடுக்கும் துரோகத்தினால் உதிரிச் சமூகமாக மாறிப்போனது வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட பெரும் கொடுமை. இந்த அவலத்தை அழிக்க நம் கண் முன்னே அதிசயமாய் உலவியவர்கள் தான் நம் மாவீரர்கள்.
இப்படி ஒரு தேசம் இந்த உலக வரைபடத்தில் உண்டா என்று விழி விரிய உலகத்தார் வியக்கும் அளவிற்கு எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஊழலற்ற, களவு, வன்கொடுமை இல்லாத, சாதிய மத வேறுபாடுகள் கடந்த, எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்று தமிழ் முழக்கம் முழங்குகிற வீதிகளைக் கொண்ட ஒரு கனவு தேசத்தை கட்டி எழுப்பினார்.
ஒரு தேசமாக உயிர்த்தெழ தமிழீழ நிலத்திற்கு அனைத்து தகுதிகளும் இருந்த காரணத்தினால் தான் நம் தேசியத் தலைவர் அவர்கள் தன் சொந்த மக்களையே படையாக உருவாக்கி, விடுதலைப் புலிகள் என்கின்ற நம் இனத்திற்கான மக்கள் இராணுவத்தைக் கட்டி வீரத்தையும் அறிவினையும் அதையெல்லாம் தாண்டி அறத்தினையும் சரிவிகிதத்தில் கலந்து இந்த உலகமே வியக்க மாபெரும் விடுதலைப் போரை எம் தமிழீழ மண்ணில் நடத்திக் காட்டினார். இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட எல்லா ஆயுதங்களையும் வைத்து போர் புரியலாம். அறிவியலின் ஆற்றலால் விளைந்த கருவிகளைக் கொண்டு சண்டை செய்யலாம். ஆனால் தன் உயிரையே ஒரு ஆயுதமாகக் கொண்ட கரும்புலிகள் என்ற படையணி தனி பிரிவாக செயல்பட்டது நம் இனத்தின் காவல் அரணான விடுதலைப் புலிகள் அமைப்பில் தான்.
உலகத்தில் தோன்றிய பல்வேறு புரட்சிகர இயக்கங்கள் அனைத்துமே பல்வேறு நாடுகளின் உதவிகளோடு பல்வேறு அரசியல் ராஜதந்திர சக்திகளின் துணை கொண்டு தான் போராடுவதற்கான துணிவு பெற்று நின்றிருக்கின்றன. ஆனால் எம் மக்களை காக்க எழுந்த மக்கள் படையான தமிழீழ தேசிய ராணுவம் விடுதலைப் புலிகளோ தங்களுக்கு எதிராக உலகமே ஒற்றை அலைவரிசையில் ஒன்று திரண்டு நின்ற போதும் கூட துணிவோடு களம் கொண்டு வீரத்திற்கு இலக்கணம் வகுத்தனர்.
அந்த மகத்தான புரட்சிப் போரை உலக வல்லாதிக்கங்கள் துணையோடு சிங்கள இனவாத அரசு ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் போர் நடக்கும் போது கூட பயன்படுத்த கூடாத தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அழித்து முடித்தது.
ஆனால் விடுதலைக்கான எங்களது உரிமை போர் என்பது எப்போதும் ஆளுகின்ற சிங்கள இனவெறி அரசோடு மட்டும்தானே ஒழிய,அப்பாவி சிங்கள மக்களோடு இல்லை என அறிவித்து, மறம் பேசும் போர்க்களத்தில் அறம் காத்து நின்ற காவல் தெய்வங்கள் நம் மாவீரர்கள்.
தனித் தமிழீழம் என்கின்ற எம் இனத்தின் புனிதக் கனவு உலக வல்லாதிக்க சூழ்ச்சிகளால் முறியடிக்கப்பட்டு ஏறக்குறைய 13 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் எம் இன அழிவிற்கான நீதி எமக்கு கிடைத்த பாடில்லை. ஐநா பெருமன்றம் உள்ளிட்ட உலகத்தின் அனைத்து கதவுகளையும் தட்டிப் பார்த்தும் கூட எந்த பலனும் ஏற்படவில்லை.
தமிழர்களின் தாய்நிலமாம் தமிழ் ஈழத்தில் போர் சூழலில் சிங்கள அரசால் வலிந்து பிடிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற்றார் உறவினர் வடிக்கின்ற கண்ணீர் இன்றளவும் தொடர்கதையாகி வருகிறது. எம் தேசத்தின் நிலம் போர் முடிந்து இத்தனை காலம் கழித்து கூட திறந்த வெளி பெருஞ்சிறையாக, பண்பாட்டுத் திணிப்புகளால் பாழ்பட்டு போன வெளியாக, சிங்கள குடியேற்றங்களால் சிதையும் நிலமாக சிறுக சிறுக அழிக்கப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தை நாம் வடிவமைக்க வேண்டும் என்பதுதான் சமகால உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிற சவால். தனது சொந்த நாட்டு மக்களையே இனப்படுகொலை செய்த சிங்கள அரசை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தி தனித்தமிழீழ சோசலிச குடியரசு நாட்டிற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றினை நிறைவேற்றுவதற்கான சூழல்களை ஏற்படுத்த தமிழ்த்தேசிய இனம் சகல வழிகளிலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தாயக தமிழகத்திலும் நாம் தமிழர் என்கின்ற இனமான நெருப்பு பெரும் தீயாக பரவி வருகின்ற சூழலில், நம்பிக்கையோடு தமிழர்கள் தங்கள் நகர்வுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு வெகுசன அரசியல் அமைப்பாக தன்னை வலிமைப்படுத்தி இருக்கிற நாம் தமிழர் கட்சி அதிகாரத்தை நோக்கி பெரும் பாய்ச்சலில் இலட்சிய உறுதியோடு பயணித்து வருகிறது. வருகின்ற நாட்களில் கட்டமைப்பு உறுதியோடு கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கும் மாபெரும் அமைப்பாக அது வடிவம் கொண்டு அதிகாரத்தை அடையும் போது வரலாற்றுப் பிழைகள் கொண்ட இந்திய பெருநாட்டின் வெளியுறவு கொள்கை மாற்றி வடிவமைக்கப்படும் என்பது உறுதி.
அதன் வாயிலாக தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு புதிய நாடு உருவாவதற்கான வாய்ப்புகள் வருங்காலங்களில் உருவாக தமிழினம் தனக்குள்ளாக இருக்கின்ற சாதி மத வேற்றுமைகளைக் கடந்து நாம் தமிழராக ஒருமை அடைவது மட்டுமே மாவீரர் கனவை நிறைவேற்றும் வழி.
என்னுயிர் அண்ணன் எம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் காட்டிய வழியில், எம் இனத்தின் ஆன்ம பலமாக திகழ்கின்ற மாவீரர்கள் சுமந்த கனவின் கனலில் எம் தமிழீழத் தாயகத்தின் விடுதலை ஒருநாள் மலர்ந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம்.
தாயக விடுதலை என்கின்ற புனித லட்சியத்தை தன் ஆன்மாவில் குறித்து தன் உயிரை இந்த இனத்திற்காக வழங்கிய மாவீரர்களின் சுவாசக் காற்று நம்மை வழிநடத்தட்டும்.
தாயக கனவுடன் தன்னுயிரை ஈந்த மாவீரர்கள் அனைவருக்கும் எனது
வீரவணக்கம்.
மாவீரர் சிந்திய குருதி
ஈழம் வெல்வது உறுதி.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி