சமூகநீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது? – ‘திராவிட மாடல்’ திமுக அரசுக்கு சீமான் கேள்வி

59

சமூகநீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது?

நாட்டிலேயே முதன் முறையாக குடிவாரியாக கணக்கெடுப்பினை வெற்றிகரமாக நடத்தி முடித்து அதனை அனைத்து மக்களும் அறியும் வகையில் பொதுவெளியில் வெளியிட்டுள்ள பீகார் மாநில முதலமைச்சர் உண்மையான சமூகநீதிக் காவலர் ஐயா நிதீஷ் குமார் அவர்களுக்கு அன்பு நிறைந்த பாராட்டும், வாழ்த்துகளும்.

அனைத்து மக்களுக்கும் சரியான சமமான நீதியை வழங்குவதே
உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும். அதற்கு அடித்தளமாக விளங்கும் குடிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதன் மூலம்
இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார்.
சமூகநீதிக்கான நெடும் பயணத்தில் ஐயா நிதிஷ்குமார் நிலைநாட்டியுள்ள புதிய மைல்கல் என்றென்றும் அவரது புகழை அழியாதுப் போற்றும் வரலாற்று பெருஞ்சாதனையாகும்.

குடிவாரி கணக்கெடுப்பு மூலம் பீகாரில் 63 % உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் வெறும் 27% இட ஒதுக்கீட்டையும், மாறாக வெறும் 15 % மட்டுமே உள்ள முன்னேறிய வகுப்பினர் 10% இட ஒதுக்கீட்டையும் பெற்று வரும் சமூக அநீதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று திராவிடத்திற்கு புதிதாக ஒரு பொழிப்புரையை வழங்கி வரும் திராவிட ஆட்சியாளர்கள் எப்போது குடிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறார்கள்?

எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச்செய்வதல்ல சமூகநீதி; எல்லார்க்கும் எல்லாம் சரியான அளவில், சமமான அளவில் கிடைக்கச்செய்வதே உண்மையான சமூகநீதி என்பதை எப்போது உணரப்போகிறது ‘திராவிட மாடல்’ திமுக அரசு?

சமுகநீதி மண் என்று சொல்லிக்கொள்ளாத பீகார் மாநிலம் குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்து உண்மையான சமூகநீதிக்கான முதல் அடியை எடுத்துவைத்து முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது.

ஆனால் சமூக நீதி மண், பகுத்தறிவு பூமி, பெரியார் மண், அண்ணா மண் என்றெல்லாம் தற்புகழ்பாடும் திராவிடத் திருவாளர்கள் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்த எப்போது முன்வரப் போகிறார்கள்?

https://x.com/Seeman4TN/status/1709164342564786294?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: அக். 08, காவிரி நதிநீர் உரிமையை மீட்க சென்னை எழும்பூரில் சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்