குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

255

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

கொரோனா மூன்றாவது அலையில் உருமாறிய நோய்த்தொற்று குழந்தைகளை அதிகளவில் பாதிப்பதாகவும், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவிவருவதாக வரும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியளிக்கின்றன. கொரோனா இரண்டாவது அலையின் அதீதத் தாக்கத்தாலும், வீரியம் மிகுந்த பரவலாலும், தொற்றுப்பரவலின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போய்விட்டதன் மூலம் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அதிலிருந்து மீளப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், குழந்தைகளை அதிகளவில் தாக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவலினால் ஏற்படும் பாதிப்புகள் கற்பனைக்கும் எட்டாத அளவில் மிகப்பெரிய இழப்புகளைத் தரும் என அறிவியலாளர்கள் எச்சரிப்பது மக்களிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு எதிராகத் தொடரும் இந்நெடும்போரில் நம்முடைய அடுத்தத் தலைமுறையை இழந்துவிடாதிருக்க, மூன்றாவது அலை எனும் அபாயகர நிலைக்குச் செல்லாது நாட்டையும், மக்களையும் காக்க மத்திய, மாநில அரசுகள் மிகுந்த பொறுப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டியது தலையாயக்கடமையாகும். மேலும், மக்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டியதும், அரசு தகுந்த வழிகாட்டுதல்களை அவர்களுக்குச் செய்ய வேண்டியதும் பேரவசியமாகிறது. எனவே, மூன்றாவது அலை பரவாமல் தடுப்பதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மக்களிடத்தில் அது குறித்த விழிப்புணர்வையும் மத்திய-மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்றாம் அலை பரவிவரும் நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கான தடையை நீட்டிக்க முன்வரவேண்டும்.

கொரோனா இரண்டாவது அலையானது வடமாநிலங்களில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது, குறைவான தொற்று விகிதம் கொண்ட மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது இந்தியாவிலேயே அதிகப் பாதிப்புள்ள மாநிலமாக மாறியுள்ள சூழல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு உள்ளிட்டப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மாணவர்களின் எதிர்கால நலன்களைக் கவனத்திற்கொண்டு, தற்போதையப் பெருந்தொற்றுச்சூழலில் பொதுத்தேர்வுகளை நடத்த முனைவது அது பேராபத்தினை விளைவித்திடும் என்பதை உணர்ந்து, அவற்றிலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்குத் தொற்றுப்பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கி, அதைப் பொதுமக்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்கச் செய்ய அறிவுறுத்துவதும், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளைத் துரிதப்படுத்துவதும் அதை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவருவதும் இன்றியமையாததாகும்.

ஆகவே, மூன்றாவது அலை எனும் பேராபத்து நாட்டைச் சூழ்ந்துவிடாது தடுக்க விரைவாகவும், விவேகமாகவும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து செயலாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி