இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அன்புத்தம்பி நாசர் மீண்டும் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

95

இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அன்புத்தம்பி நாசர் மீண்டும் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்தவர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அன்புத்தம்பி தமிழ் நாசர் அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் கல்வியைத் தொடர பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுப்பது வன்மையானக் கண்டனத்துக்குரியது. தாக்குதல் நடத்தியவர்களை வி்ட்டுவிட்டு, தாக்குதலுக்கு உள்ளான மாணவர் நாசரை தண்டிப்பது என்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

அறிவை செதுக்கும் கலைக்கூடங்களான பல்கலைக்கழகங்களை, இந்துத்துவ அமைப்புகள் மதவெறிக் கூடங்களாக மாற்றி நிறுத்தியுள்ளன. இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த மாணவர்கள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மதவெறி கும்பல்களைத் துணைக்கு அழைத்து வந்து படிக்கும் மாணவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கல்வி வளாகத்திற்குள் பாரதிய வித்யார்த்தி அமைப்பினரின் இத்தகைய சட்டவிரோத வன்முறைச் செயல்களை எவ்வித தடையுமின்றி அனுமதித்து வேடிக்கைப் பார்க்கும் பல்கலைக்கழக நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதென்பது எவ்வகையில் நியாயமாகும்? யாருடைய தூண்டுதலில், யாருக்கு பயந்து நீதிக்கு புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கின்றது?

இந்திய ஒன்றியத்தை ஆளும் மதவாத பாஜக அரசின் அதிகார பலம், அதனை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலம் ஆகியவையே பாரதிய வித்யார்த்தியைச் சேரந்த மாணவர்கள் அச்சமின்றி குற்றச்செயல்களில் ஈடுபடவும், பல்கலைக்கழக நிர்வாகம் தவறான முறையில் நடவடிக்கை எடுக்கவும் முதன்மையான காரணமாகும்.

படிக்கும் மாணவர்களின் மனதினைச் சிதைத்து, மதவெறுப்பு நஞ்சினை விதைத்து, அவர்களிடையே பிரிவினையை வளர்த்து, வருங்காலத் தலைமுறையினரை உருவாக்கும் கல்வி நிலையங்களை வன்முறை கூடங்களாக மாற்றி நிறுத்தியிருக்கும் இந்துத்துவ அமைப்புகளின் செயல் இந்திய நாட்டை மிகப்பெரும் அழிவுப்பாதைக்கே அழைத்துச் செல்லும். அதற்கு உலக அளவில் நன்கு அறியப்பட்ட பெருமை வாய்ந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகமும் துணைபோவது மிகுந்த வேதனையையும், கோவத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆகவே, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வருங்காலத் தலைமுறையினர் நம்பிக்கை இழந்துவிடாமல் இருக்க, தற்போது தவறாக தண்டிக்கப்பட்டுள்ள மாணவர் அன்புத்தம்பி நாசர் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, தொடர்ந்து கல்வி பயில பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென்றும், தாக்குதல் நடத்திய இந்துத்துவ அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1711237806343827610?s=20

  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திசுற்றறிக்கை: காவிரி நதிநீர் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டப விவரம்
அடுத்த செய்திதீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வெடி விபத்துக்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்