தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வெடி விபத்துக்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

114

தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வெடி விபத்துக்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 தமிழர்கள் உயிரிழந்த 48 மணி நேரத்திற்குள், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள வெற்றியூரில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.

கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், தற்போது மேலும் 25 தமிழர்கள் பலியாகியுள்ளனர். தில்லையாடி விபத்துக்குப் பிறகாவது திமுக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள பட்டாசு மற்றும் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலைகளில் முறையான சோதனைகள் செய்திருந்தால், அரியலூரில் வெடி விபத்து நிகழாமலே தடுத்திருக்க முடியும். திமுக அரசின் அலட்சியப்போக்கே தற்போது அரியலூர் வெடிவிபத்தில் பலர் பலியாக முக்கியக் காரணமாகும். அடுத்தடுத்து வெடிவிபத்துக்களில் சிக்கி மனித உயிர்கள் மலிவாகப் பலியாவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் அவ்வப்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிவிபத்துக்கள் நிகழ்வதும், அவை ஒரு நிமிட செய்தியாவதும், தமிழ்நாடு அரசும் தனது கடமைக்கு சொற்பத் தொகையை இழப்பீடாக வழங்கிவிட்டு கடந்து செல்வதும் தொடர்கதையாகிவிட்டது. அதனை நிரந்தரமாக தடுக்க இன்று வரை தமிழ்நாடு அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பட்டாசு உரிமையாளர்கள் உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும், அடிப்படை விதிகளையும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும், பட்டாசு விபத்துகளின் வீரியம் தெரிந்தும் அதனை கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்வதற்கு அடிப்படை காரணங்களாகும்.

பட்டாசு – நாட்டுவெடி தயாரிக்கும் ஆலைகள், சேமிப்பு கிடங்குகள், பட்டாசு விற்பனைக் கடைகள் ஆகியவற்றில் சீரான இடைவெளியில் முறையான சோதனை நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழ்நாடு அரசு இன்றுவரை அதற்கு செவிமடுக்காது அப்பாவி தமிழர்களின் உயிருடன் விளையாடி வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இனியாவது விழிப்புற்று தமிழ்நாடு அரசு முறையான ஆய்வினை மேற்கொண்டு பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது அவர்களுக்கு பாதுகாப்பான மாற்றுத் தொழில் வாய்ப்பினையாவது தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அரியலூர் மற்றும் அத்திப்பள்ளி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் துயர்துடைப்பு நிதியாக தலா 10 லட்ச ரூபாய் வழங்குவதோடு, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமென்றும், படுகாயமடைந்தவர்களுக்கு உயரிய மருத்துவம் அளித்து விரைந்து நலம்பெறச்செய்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1711380958643892588?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇந்துத்துவ அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அன்புத்தம்பி நாசர் மீண்டும் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமுழுமையான பாலஸ்தீன விடுதலையே அமைதிக்கான நிரந்தரத் தீர்வு! – சீமான் வலியுறுத்தல்