முழுமையான பாலஸ்தீன விடுதலையே அமைதிக்கான நிரந்தரத் தீர்வு! – சீமான் வலியுறுத்தல்

195

முழுமையான பாலஸ்தீன விடுதலையே அமைதிக்கான நிரந்தரத் தீர்வு! – சீமான் வலியுறுத்தல்

இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ‘ஹமாஸ்’ நடத்திய தாக்குதல்களும், அதனைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா சிறுநிலத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களாலும் இருதரப்பிலும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

போரினால் மக்கள் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதையும், போர் மட்டுமே நிரந்தரத் தீர்வில்லை என்பதையும் உலகில் வேறு எந்த மக்களையும் விட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தாயக விடுதலைப்போரில் இலட்சக்கணக்கான இன உறவுகளை இழந்து நிற்கும் தமிழின மக்களாகிய நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், அடிமையாய் வாழ்வதை விடவும் போராடிச் சாவது மேலானது என்பதுதான் வரலாறு காட்டும் விடுதலைக்கான பெரும் தத்துவம். அன்றைக்கு ஆயுதம் தாங்கிய ஈழ மக்கள் இராணுவமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கம் என்று உலக நாடுகள் முத்திரை குத்தி ஈழ விடுதலைப்போராட்டத்தை எப்படி நசுக்கியதோ, அதைப்போலவே தற்போது ஹமாஸையும் வெறும் பயங்கரவாத இயக்கமாக மட்டுமே உலக நாடுகள் சித்தரித்து வருகின்றனவே அன்றி அதன் போராட்டத்தின் நியாயத்தை எவரும் உணரவில்லை.

இன்றைக்கு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் உலக வல்லாதிக்க நாடுகள், உலகப் பெரும் தலைவர்கள், பன்னாட்டு அமைப்புகள் பாலஸ்தீனத்தின் மீது பல ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலைக் கண்டிக்காது அமைதி காத்தது ஏன்? இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகள் எவ்வளவு? அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட 1993க்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அகதிகளாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்த பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எத்தனை? 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு 50,000 குழந்தைகள் உட்பட 1,50000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேல் அரசால் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றையெல்லாம் பற்றி ஏன் உலக நாடுகள் வாய்திறக்கவில்லை? இதோ இந்த நொடியில் கூடத் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் கொத்து குண்டுகளைப் போட்டு அப்பாவி பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் இஸ்ரேலை உலக நாடுகள் இதுவரை தடுத்து நிறுத்தாதது ஏன்?

“என் ஒரு கையில் துப்பாக்கி இருக்கிறது, மறு கையில் அமைதியைக் குறிக்கும் ஆலிவ் இலை இருக்கிறது; எதைத் தூக்க வேண்டுமென்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று ஐ.நா. மன்றில் தோன்றி உலகத்தின் முன் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேருரையை ஆற்றிய பாலஸ்தீன தந்தை விடுதலைப் போராளி, புரட்சியாளர் யாசர் அராபத்திற்கு உலக நாடுகள் முன்னிலையில் அளித்த உறுதிமொழியைக் காலில் போட்டு மிதித்து, பாலஸ்தீன விடுதலைக் கனவை நசுக்கிய இஸ்ரேல் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட பாலஸ்தீன தந்தை யாசர் அராபத்திற்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இஸ்ரேல் அரசு செய்த பச்சைத் துரோகமே ஹமாஸை பாலஸ்தீனியர்களின் பெரும்பான்மை ஆதரவுப்பெற்ற விடுதலை இயக்கமாக உருவெடுக்கச் செய்தது. இன்றைக்கு இஸ்ரேல் எதிர்கொள்ளும் அத்தனை தாக்குதல்களும், கடந்த காலங்களில் இஸ்ரேல் செய்த தீவினைக்கான எதிர் வினைகளே. எப்பொழுதும் அடிப்பதுதான் வன்முறை; திருப்பி அடிப்பது என்பது ஒருபோதும் வன்முறை ஆகாது. அதுதான் அடிமைத்தளையை அறுத்தெறியும் விடுதலைக்கான பெருவழி.

எப்படி சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தன் பிடரியில் துப்பாக்கியால் தாக்கியபோது ஏற்பட்ட வலி குறித்து, ஒரே ஒரு நிமிடம் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி சிந்தித்திருந்தால் அமைதிப்படையை அனுப்பி ஈழ விடுதலையை அழிக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டாரோ, அதுபோல உலகம் முழுவதும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இனப்படுகொலைக்கு ஆளாகி பேரழிவைச் சந்தித்த யூத இனம், உலகம் தனக்குச் செய்ததை தாம் இன்னொரு இனத்திற்கு செய்திடக் கூடாது என்று ஒரே ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால், தங்களை அரவணைத்து, ஆதரித்து, அடைக்கலமளித்து அதனால் நிலங்களையும் இழந்த பாலஸ்தீனத்தை, அதன் மக்களை ஒருபோதும் இஸ்ரேல் சிதைத்து அழித்திருக்காது.

பேரழிவை ஏற்படுத்தும் போர் கூடவே கூடாததுதான். உலகம் முழுவதும் அமைதியும், சமாதானமும் வேண்டும்தான். ஆனால் உண்மையான அமைதி என்பது முழுமையான பாலஸ்தீன விடுதலையில்தான் இருக்கிறது என்பதை உலக நாடுகள் உணர்வதுதான் அமைதிக்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்!

https://x.com/Seeman4TN/status/1711634731505225952?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

“Complete” Liberation of Palestine is the Permanent Solution to Peace!

It is deeply saddening to learn that more than 1,000 civilians have been killed so far on both sides due to the attacks carried out by the Hamas on Israel and the Israeli military’s subsequent attacks on the Gaza Strip in Palestine.

We, the Tamil people, who have lost hundreds of thousands of our people in the struggle for Eelam homeland liberation for more than 30 years, are aware of the fact that the people will suffer great losses due to the war and that war alone is not a permanent solution. But the great philosophy of freedom that history shows is that it is better to fight and die than to live as a slave. Just as the world crushed the Eelam liberation struggle by branding the Liberation Tigers of Tamil Eelam (LTTE), the armed Eelam people’s army at that time, as a terrorist organization, the world is now portraying Hamas only as a terrorist organization, and no one realizes the rationale of its struggle.

Why did the world powers, world leaders, and international organizations that condemn the attack on Israel remain silent without condemning Israel, which has been attacking Palestine for years? Israel has occupied how many Palestinian territories? What is the number of Palestinians killed by Israel in the last 30 years since 1993, when the peace deal was signed? How many have been made refugees? How many schools and hospitals were destroyed by the Israeli army? More than 1,50,000 Palestinians, including 50,000 children, have been killed by the Israeli government since 2008. Why don’t the nations of the world utter a word about all of them? Why have the world’s countries not stopped Israel from destroying innocent Palestinians by dropping banned phosphorus cluster bombs, even at this very moment?

What action have been taken so far by the world countries against Israel, which has trampled on the peace promise made to Yasser Arafat, the ‘Father of Palestine’, Revolutionary leader, who said “I have a gun in one hand and an olive leaf in the other; It’s up to you to decide what to take”, during his historical speech in front of the UN Council.

It was the Israeli state’s blatant betrayal, which led Palestine to sign a peace deal with Israel, that led Hamas to emerge as a liberation movement supported by the majority of Palestinians. All the attacks that Israel faces today are counter-reactions to what Israel has done in the past. Hitting back is never violence; it is the great way to freedom that breaks the shackles of slavery.

Just as the then Prime Minister Rajiv Gandhi would not have taken the decision to destroy the Tamil Eelam liberation by sending a peacekeeping force if he had thought about the pain inflicted by the Sinhalese soldier when he was hit by a rifle on his back, the Jewish race, which has suffered genocide and devastation all over the world, had thought for just one minute that they should not do what the world had done to another race that embraced, supported, and sheltered. Israel would never have destroyed Palestine and its people.

A war that causes devastation Is never needed. There is a need for peace and tranquility all over the world. But the only permanent solution to peace is for the nations of the world to realize that true peace lies in the complete liberation of Palestine!

முந்தைய செய்திதீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வெடி விபத்துக்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி“Complete” Liberation of Palestine is the Permanent Solution to Peace!