வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தை நூதன முறையில் அபகரிக்கும் தனியார் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

66

தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித முன் அனுமதியும் பெறாமல் காப்பீடு என்ற பெயரில் சந்தா தொகையைத் தானாக எடுத்துக்கொள்வதோடு, அதற்கு ஜிஎஸ்டி வரியும் விதிப்பதென்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தனியார் வங்கிகளின் இத்தகைய பகற்கொள்ளையை வேடிக்கை பார்க்கும் இந்திய ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இந்திய ஒன்றியத்தில் இயங்கும் வங்கிகள் நவீன அறிவியல் சூழலில் பணப் பரிமாற்றம், பணம் எடுத்தல், செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளை எளிமைப்படுத்துவதாகக் கூறி இணையவழி வங்கி சேவை, அலைபேசி வழி சேவை என பலதரப்பட்ட வங்கி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், அவ்வாறான சேவைகளில் வாடிக்கையாளரின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தெரியாமலேயே வங்கி கணக்கிலிருந்து பணத்தை வங்கிகள் எடுத்துக்கொள்வதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

ஒற்றைத் தொடுதலில் வாடிக்கையாளர்களை, அவர்கள் விரும்பாத திட்டங்களில் வங்கிகள் இணைப்பதும், அதற்கான தொகையைத் தொடர்ச்சியாக அவர்களின் அனுமதியின்றி தன்னிச்சையாக எடுத்துக்கொள்வதும், அதனை ரத்து செய்ய மட்டும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களை அலையவிடுவதென்பதும் பெருங்கொடுமையாகும்.

குறிப்பாக சிட்டி யூனியன் பேங்க் உள்ளிட்ட தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் முன் அனுமதி பெறாமலேயே காப்பீடு போன்ற திட்டங்களை வாடிக்கையாளரின் கணக்கில் சேர்த்து அதற்கான தொகையைத் தன்னிச்சையாக எடுத்துக்கொள்வது வாடிக்கையாளர்களின் அடிப்படை உரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதென்பதும், காப்பீட்டுத் தொகைக்கு உரிமை கோரும்போது தர மறுப்பதென்பதும் அப்பட்டமான பகற்கொள்ளையாகும். இது குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் அது குறித்து விசாரித்துத் தொடர்புடைய வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஒன்றிய அரசு மறுத்து வருவது வங்கிகளின் கொள்ளைக்கு இந்திய ஒன்றிய அரசும் துணை போகிறதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆகவே, அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளை முறைப்படுத்தவும், வங்கியின் எந்தவொரு திட்டத்திலும் வாடிக்கையாளரை இணைக்க முறையான ஆவணங்களுடன் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதோடு, அவற்றைக் கடைப்பிடிக்க தவறும் வங்கிகளின் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1716132529399349478?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாத்திரு பகையே – கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திகிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!