இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்வதா? பாஜகவின் குரலை திமுக அரசு எதிரொலிப்பதா? – சீமான் கண்டனம்

308

இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்வதா? பாஜகவின் குரலை திமுக அரசு எதிரொலிப்பதா?
– சீமான் கண்டனம்

கால் நூற்றாண்டு காலமாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளான கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகியோர் தங்களது முன்விடுதலைக்காக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மதத்தைக் காரணமாகக் காட்டி, எதிர்ப்புத் தெரிவித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு பெரும் அதிர்ச்சி தருகிறது. இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம் என வாக்குறுதியளித்து, இசுலாமிய மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கே வேட்டு வைக்கும் திமுக அரசின் இரட்டை நிலைப்பாடு ஏற்கவே முடியாத மோசடித்தனமாகும்.

திமுகவின் ஆட்சியில் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலைசெய்வோம் எனக் கடந்த காலத்தில் கூறிய ஐயா ஸ்டாலின் அவர்கள், இன்றைக்கு அவர்களது விடுதலைக்கெதிராக வேலைசெய்வது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த இசுலாமிய மக்களுக்குச் செய்யும் படுபாதகமாகும். சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாய் சிறையில் வாடும் கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகிய இருவரும் முதுமையடைந்து, உடல்நலிவுற்ற நிலையில் எஞ்சிய காலத்தைக் குடும்பத்தோடு கழிக்க எண்ணி, நம்பிக்கைக் கொண்டு தொடுத்த வழக்கில் அவர்களுக்கெதிராக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து விடுதலையைத் தடுத்துக் கெடுத்திட முனையும் திமுகவின் மதவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மதச்சார்பற்ற கூட்டணியென்றும், சிறுபான்மையினரின் காவலரென்றும் தற்பெருமை பேசி, சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் வெட்கங்கெட்ட திமுக அரசு, அதிகாரம் கையிலிருந்தும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையைப் பெற்றுத்தர மறுப்பதோடு, அச்சிறைவாசிகள் நடத்தும் சட்டப்போராட்டத்திலும் முட்டுக்கட்டை இடுவது மன்னிக்கவே முடியாத கொடுந்துரோகமாகும்.

கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகிய இருவரும் வெளியே வந்தால் மதப்பதற்றம் உருவாகுமென்றும், இறந்துபோனவரின் குடும்பத்தினருக்கு ஆபத்துநேரிடுமென்றும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலென்றும் பிரமாணப்பத்திரத்தில் கூறி, வாழ்நாள் முழுமைக்கும் அவர்களை சிறையிலேயே வைக்கக்கூறும் திமுக அரசின் வாதங்கள் யாவும் அபத்தமானவை; வன்மையாக எதிர்க்கப்பட வேண்டியவையாகும். அம்மையார் லீலாவதி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் திமுகவினர் என்பதாலேயே, கடந்த காலத்தில் அவர்களுக்காக தனிச்சட்டம் இயற்றி, 8 ஆண்டுகளிலேயே அவர்களை விடுதலைசெய்த திமுக அரசு, கால் நூற்றாண்டானப் பிறகும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுப்பது மனிதத்தன்மையே அற்ற கொடுஞ்செயலாகும். அவர்கள் இருவரும் செய்த குற்றத்திற்குப் போதுமான தண்டனையை அனுபவித்து, கால் நூற்றாண்டு காலத்தை சிறைக்கொட்டடிக்குள்ளேயே கழித்துவிட்டு, சட்டத்தின்படி இருக்கும் தார்மீக உரிமையைப் பயன்படுத்தி முன்விடுதலை கோரும் நிலையில், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைக் காரணமாகக் காட்டி, அவர்கள் வெளியே வந்தால் குற்றச்செயலில் ஈடுபட்டு சமூக அமைதியைக் கெடுப்பார்கள் என்பது பாஜகவின் மதவாதக்குரல்! ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் வெறுப்பரசியல்! அதனை எதிரொலிக்கும் திமுகவின் செயல்பாடு மிக மிக இழிவானது. இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சியும், இசுலாமிய அமைப்புகளும், சனநாயகவாதிகளும், மனிதவுரிமை ஆர்வலர்களும் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்த நிலையில் எழுந்த அரசியல் நெருக்கடியினை மட்டுப்படுத்த ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்த திமுக அரசு, ஓராண்டைக் கடந்தும் அதற்குரிய எவ்வித ஆக்கப்பூர்வச்செயல்பாட்டையும் முன்வைக்காத நிலையில், தற்போது விடுதலைக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை வைத்து, கருத்துருவாக்கம் செய்வதும், எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதுமான நகர்வுகள் நம்பி நின்ற இசுலாமிய மக்களை ஏமாற்றிப் புறந்தள்ளும் கயமைத்தனமாகும்.

இசுலாமிய சிறைவாசிகளை விடுதலைசெய்ய ஆளும் திமுக அரசின் கைகளிலேயே முழுமையான அதிகாரமிருந்தும், ஆளுநருக்கு அனுப்பித்தான் விடுதலையைப் பெற வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது அப்பட்டமான பச்சைப்பொய்! பசப்பல் வாதம்! மாநிலத் தன்னாட்சிக்கு முழக்கமிட்டு, ஒன்றிய அரசின் அதிகாரங்களை ஆய்வு செய்ய வேண்டுமெனக் கடந்தகாலத்தில் கூறிய திமுக, இன்றைக்கு கைகளில் இருக்கும் அதிகாரத்தையே மறந்துவிட்டதா? வாழ்நாள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசிடம்தான் இருக்கிறது என்பதுகூட தெரியாதா முதல்வர் ஸ்டாலினுக்கு? சிக்கலைக் கடத்திவிட்டு, மடைமாற்றம் செய்ய வேண்டுமென்பதற்காக வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுவதா? அறிஞர் அண்ணாவின் பெயரைக்கூறி ஆட்சி நடத்திக்கொண்டு, மாநில அதிகாரத்தை ஆளுநருக்குத் தாரைவார்க்க முனைவதா? வெட்கக்கேடு! விடுதலைபெறாது தண்டனைக்காலத்திலேயே இறந்துபோன வாழ்நாள் சிறைவாசி தம்பி அபுதாஹீரின் மரணம் நிகழ்ந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கெதிராக வரிந்துகட்டியிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை கொடுங்கோன்மையின் உச்சமாகும்!

ஆகவே, இசுலாமிய சிறைவாசிகளான கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகியோரது முன்விடுதலை தொடர்பான வழக்கில், திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாணப்பத்திரத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும், போதிய தண்டனைக்காலத்தைக் கடந்தபோதிலும், தாங்கள் சார்ந்திருக்கிற மதத்தைக் காரணமாக வைத்து, விடுதலை மறுக்கப்பட்டு வரும் இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘புனித வெள்ளியை’ முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூடாதது ஏன்? – சீமான் கேள்வி
அடுத்த செய்திநீலகிரி தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும். – சீமான் வலியுறுத்தல்