நீதிமன்றத் தடை ஆணையை மீறி திருச்சி, திருவானைக்கோயிலிலுள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை இடிப்பதா? – சீமான் கண்டனம்
திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, திருவானைக்கோயில் அருகே திருவரங்கம் பாலத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலின் முன்பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்துள்ள செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது. பள்ளிவாசலை இடிக்கக்கூடாது எனப் பள்ளிவாசல் சார்பாக நீதிமன்றத் தடையாணையைப் பெற்றுள்ளபோதும் அதனைப் பொருட்படுத்தாது இடித்துச் சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாது, பள்ளிவாசல் நிர்வாகிகளைக் காவல்துறையினர் தாக்கியும் இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத அதிகாரிகள், பள்ளிவாசல் முன்பகுதியை மட்டும் இடித்துத் தரைமட்டமாகியிருப்பதன் மூலம் மிகப்பெரும் அதிர்வலைகளை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினரின் துணையோடு வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் தடையாணையையும் மீறி, முன்பகுதி இடிக்கப்பட்டுள்ளது சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்ற மிகப்பெரும் அநீதியாகும். எளிய மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே, நீதிமன்ற உத்தரவை சிறிதும் மதியாது தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வதும், உணர்வுப்பூர்வமான இவ்விவகாரத்தில் மூர்க்கமான அணுகுமுறையைப் பின்பற்றுவதும் வெட்கக்கேடானது.
சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் மேலோங்கி மதம் கடந்து மனிதம் போற்றும் தமிழ் மண்ணில் நடந்தேறும் இதுபோன்ற செயல்கள் தேவையற்ற சலசலப்பையும், சச்சரவையும் உருவாக்கி வருவது மதத்துவேச அரசியல் செய்து, பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் வாக்குவேட்டையாட முற்படும் மதஅடிப்படைவாதிகளின் அரசியலுக்கே வலுசேர்க்கும். அவரவர் மதம் அவரவருக்கு உயர்ந்தது. உங்கள் மதம் உயர்ந்ததென்றால், நீங்கள் வழிபடுங்கள். அவர்கள் மதம் அவர்களுக்கு உயர்ந்தது; வழிவிடுங்கள் என்ற மாண்போடு செயல்பட வேண்டிய தமிழக அரசு இதுபோன்ற கொடுஞ்செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
ஆகவே, இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இடிக்கப்பட்ட பள்ளிவாசலின் முன்பகுதியை மீண்டும் கட்டித்தர வேண்டுமெனவும், அத்துமீறி பள்ளிவாசலை இடித்துத் தாக்குதல் தொடுத்திட்ட அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி