பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

305

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய GROUP–2 தேர்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்ந்து மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் – 2 முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில், அதில் தேர்வான 55,071 பட்டதாரிகளுக்களுக்கான முதன்மைத் தேர்வு சென்னை உட்பட தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் அமைக்கபட்ட 186 தேர்வு மையங்களில் கடந்த 25.02.21 அன்று நடைபெற்றது. காலையில் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வும், மதியம் பொதுத்தேர்வும் நடத்தப்பட்ட நிலையில் காலை 9.30 மணிக்குத் தேர்வு துவங்கி 12.30 மணி முடிய வேண்டிய தேர்வானது பல்வேறு குளறுபடிகள் காரணமாக மதியம் 1.30 வரை வரை நடைபெற்றுள்ளது.

பல மையங்களில் வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியிருந்ததால் குழப்பம் ஏற்பட்டு, தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, பின் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேர்வுக்கு முன்பே வினாக்கள் கசிந்ததோடு, தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த சில தேர்வர்கள் வினாக்களுக்கான விடைகளைக் கைபேசி மூலம் மற்றவர்களிடம் கேட்டும், இணையத்தில் தேடி தெரிந்துகொண்டும் தேர்வு எழுதியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஏற்பட்ட குளறுபடிகளால் மாணவர்கள் மிகுந்த பதற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தேர்வு எழுத முடியாத அசாதாரண சூழலும் தேர்வாணையத்தின் அலட்சியத்தால் உருவானது. அதுமட்டுமின்றி சில மாணவர்களுக்கு முன்கூட்டியும், பல மாணவர்களுக்கு மிகத் தாமதமாகவும் வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வின் சமநிலை என்பது முற்றாகச் சீர்குலைந்துள்ளது..

ஆகவே, தேர்வர்களின் நலன் கருதி, ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசு முழுப்பொறுப்பேற்று, தேர்வின் சமநிலை மற்றும் நடுநிலைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, நடைபெற்று முடிந்த GROUP-2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, விரைவில் அனைத்து தேர்வர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அரசுத் தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் ஏற்படா வண்ணம் மிகக் கவனமாக செயலாற்ற வேண்டுமென்றும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தை நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – வளையக்கார வீதி | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்