‘தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

182

‘தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க புதிய சட்ட வரைவினை (digital personal data protection bill ) கொண்டு வருவதாகக்கூறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளை நீக்க முயற்சிக்கும் இந்திய ஒன்றிய அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. அரசின் ஊழல்களையும், முறைகேடுகளையும் வெளிக்கொணர இருக்கின்ற குறைந்தபட்ச வாய்ப்பையும் தரவுகள் பாதுகாப்பு என்ற பெயரில் இல்லாதொழிக்கும் பாஜக அரசின் சூழ்ச்சியே இப்புதிய சட்ட வரைவாகும்.

‘தனி மனிதரின் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாப்பது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, அரசு அதனைப் பாதுகாப்பது அவசியம்’ என்று ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் 2017 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் அத்தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க புதிய சட்ட வரைவினை கொண்டுவரப்போவதாக மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்து, இணையதளம் வாயிலாக அதற்கான கருத்துக்கேட்பையும் நடத்தி முடித்துள்ளது.

தனி மனிதரின் தரவுகள் பாதுகாக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இப்புதிய சட்ட வரைவானது ஏற்கனவே உள்ள சட்டங்களில் தனி மனிதருடைய தகவல்களை வெளியிடக்கூடிய பிரிவுகளைத் திருத்தவோ அல்லது நீக்கவோ வேண்டும் என்று வரையறுக்கிறது. குறிப்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலுள்ள, பொதுநிர்வாகத்தில் தொடர்புடைய தனி மனிதரின் தகவல்களை வழங்கலாம் எனும் பிரிவையும், நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களுக்கு வழங்கக்கூடிய தகவல்களைத் தனிமனிதர் கோரினாலும் வழங்கலாம் எனும் பிரிவையும் நீக்க வேண்டும் என்ற இப்புதிய சட்ட வரைவின் விதிகளானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் சதித்திட்டமேயாகும்.

இதன் மூலம் ஆளும் அரசுகளின் ஆட்சி நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிய, தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் குறித்த தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரினால் அவை தனி நபரின் தனிப்பட்ட தகவல்கள் என்றுகூறி தரமறுக்க இச்சட்ட வரைவு வழிகோலுகிறது. இது அரசின் ஊழல்களை முற்று முழுதாக மூடி மறைக்கவே மறைமுக வாய்ப்பேற்படுத்துகிறது.

ஆதார் அட்டை என்ற பெயரில் தனி மனிதரின் கைரேகை, கருவிழித்திரை உள்ளிட்ட அங்க அடையாளங்கள் முதல் புகைப்படம், முகவரி, கைபேசி எண் ஆகிய அனைத்து தரவுகளும் எளிதாக எவருக்கும் கிடைக்கும் வண்ணம் செய்தாகிவிட்டது. மேலும், வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு அட்டை, வருமானவரி அட்டை, குடும்ப அட்டை, சமையல் எரிகாற்று அட்டை, முதியோர் ஓய்வூதிய அட்டை, கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட தனி மனிதரின் அனைத்து தரவுகளையும் கட்டாயப்படுத்தி ஆதார் அட்டையுடன் இணைத்துவிட்டு, தற்போது தனி மனிதரின் தரவுகளைப் பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்போகிறோம் என்று பாஜக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் மோசடித்தனமேயயாகும்.

ஆகவே, இந்திய ஒன்றிய அரசு ‘தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் சூழ்ச்சியை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்