மக்கள் விரோத கொள்கைகளுக்கு விழுந்த அடியே காங்கிரஸின் தேர்தல் தோல்வி: நாம் தமிழர் கட்சி

24

பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டதையே 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குக் காரணமாகும்.

2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிற்கான முன்னோட்டம் என்று கருதப்பட்ட இத்தேர்தலில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. உத்தரகாண்டில் இழுபறியான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலமான மணிப்பூரில் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி. இந்தியாவின் எதிர்கால பிரதமர் என்று கூறி ராகுல் காந்தியை முன்னிறுத்தியதும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களைக் கூட்டி வந்து அவருக்கு பெரும் செல்வாக்கு இருப்பதுபோல் தங்களுக்குச் சாதகமான ஊடகங்களின் மூலம் போலியான ஒரு உருவகத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சி. மக்களை மாக்களாக நினைத்து அது செய்த ராகுல் சூழ்ச்சி படுதோல்வியடைந்தது. ராகுல் போட்டியிட்டு வென்ற அமேத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா வென்ற ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளார்கள்.

 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெறும் 38 இடங்களில்தான் வென்றுள்ளது. இந்த அளவிற்கு வெற்றி பெற்றதும் கூட, மேற்கு உத்தர பிரதேசத்தில் செல்வாக்குப் பெற்ற அஜித் சிங்கின் பாரதிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டதால் கிடைத்த வெற்றியாகும். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றெல்லாம் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் அங்கு சிரோமணி அகாலிதள் தலைமையிலான கூட்டணி, கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. கோவா மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ் கட்சி.

இந்தியப் பொருளாதாரத்திற்கும், தன்னிறைவிற்கும் அடித்தளமாகத் திகழும் வேளாண்மையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிராகரித்து வருவதற்கு அத்தாட்சியே, உரத்திற்கு அளிக்கப்பட்ட மானியத்தை குறைத்தது, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக வேளாண் நிலங்களை சட்டம் போட்டு பறித்தது போன்ற நடவடிக்கைகள் ஆகும். உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களின் விலையேற்றம், தேர்தல் முடிந்தவுடன் எரிபொருட்களின் விலைகளை உயர்த்துவது, பன்னாட்டு, இந்திய பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக வரிச் சலுகைகளை வழங்குவது, மக்களையும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களையும் இருட்டில் தள்ளிவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை குறைந்த கட்டணத்தில் அளிப்பது போன்ற பிரதமர் மன்மோகன் சிங் அரசின் கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிட்டது. கடலாடி வாழும் மீனவர் சமூகத்தினரின் வாழ்வுரிமையை பறிக்க மத்திய அரசு வெளியிட்ட கடலோர ஒழுங்குமுறை ஆணைய உத்தரவிற்கு ஏற்பட்ட எதிர்ப்புதான் கோவாவில் அக்கட்சி ஆட்சியை இழக்கக் காரணமானது.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை நிராகரித்ததுபோல், பாரதிய ஜனதா கட்சியையும் மக்கள் நிராகரித்துள்ளார்கள். அங்கு ஆட்சியைப் பிடித்த முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சியும், எதிர்க்கட்சியாகியுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக் கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அளவில் தேசிய கட்சிகள் மக்கள் செல்வாக்கை பெருமளவிற்கு இழந்துவருவதையே இத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால்தான் தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இப்போது மற்ற மாநிலங்களிலும் அதன் எதிர்காலம் இருண்டு போய்விட்டது. இந்த நிலையில், 2014ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். மாநில மக்களின் உணர்வுகளை புறக்கணித்து ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்பது உறுதி. மாநில மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் எந்தக் கட்சியானாலும் இப்படிப்பட்ட முடிவையே எதிர்காலத்திலும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதும் நிச்சயம்.

முந்தைய செய்திநட நட நீ நட நட கட கட தடை கட கட: உணர்வுப் பாடல் – காணொளி இணைப்பு!!
அடுத்த செய்திதிருவள்ளூர் மாவட்டம் திருவோற்றியோர் பகுதி-பெரியார் நகரில் இன்று மாலை மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – பதாகை மற்றும் துண்டறிக்கை இணைப்பு!!