கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

62

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் நடப்புக்கல்வியாண்டுக்கான முதல் பருவக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமெனவும், செலுத்தத் தவறிய மாணவர்கள் 200 முதல் 500 வரை தண்டம் செலுத்த வேண்டுமெனவும் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் பெயர்கள் செப்டம்பர் 6 முதல் பதிவேட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கல்வி நிலையம் போலல்லாது, கடனை வசூல் செய்யும் நிறுவனம் போல் மிரட்டும் தொனியில் அரசு நடத்தும் பல்கலைக்கழகமே செயல்படுவதென்பது கல்வி வியாபாரமயமாக்கப்பட்டுள்ளதையே வெளிக்காட்டுகிறது.

கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலில் உலகிலேயே இந்தியா மூன்றாம் இடத்திலும், இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுப் பரவலால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகப் போடப்பட்டுள்ள தொடர் ஊரடங்கால் நாடு முழுமைக்கும் தொழில்நிறுவனங்கள் முடங்கி வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் சிறு, குறு தொழில் முனைவோர், கைத்தொழில் செய்வோர், அன்றாடம் கூலிவேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, வருமானமின்மை, மருத்துவச்செலவு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருந்துயரில் சிக்கித் தவிக்கின்றனர். நியாய விலைக் கடைகளில் அனைத்து உணவுப்பொருட்களும் இலவசமாக வழங்கினால்தான் அடித்தட்டு உழைக்கும் ஏழை மக்கள் உயிர்வாழ முடியும் என்ற சூழ்நிலையில் கல்விக்கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005ன் படி 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ, பெற்றோர்களையோ கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், 2019-20 ஆம் ஆண்டிற்கான கட்டணத்தில் ஏதேனும் செலுத்தப்பட வேண்டிய தொகை இருந்தால் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், ஏதேனும் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்குத் தண்டம் வசூலிக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கடந்த 21.04.2020 அன்று தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ள அண்ணா பல்கலைக்கழகம், உடனடியாகக் கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது குறித்து மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பல்கலைகழகத்தரப்பில் எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

ஏற்கனவே, இப்பேரிடர் காலத்தில் கைவிடப்பட்ட தேர்வுகளுக்கும் தேர்வுக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலித்தது மாணவர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகளுக்கே மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையினைச் செலவிட வேண்டியுள்ள நிலையில் மேலும் ஆய்வகக் கட்டணம், இணையக் கட்டணம், ,கணினிக் கட்டணம், விளையாட்டுக்கட்டணம் என மாணவர்கள் பயன்படுத்தாதவற்றிற்கும் சேர்த்துக் கட்டணம் வசூலிப்பது என்பது கட்டாயக் கட்டணக் கொள்ளையேயன்றி வேறில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கல்விக்கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையும் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருப்பது மாணவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினால் குடும்ப வறுமையைப் போக்க நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் அவர்களைக் கல்விக்கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது கட்டாய இடைநிற்றலுக்கு வழிவகுத்து அவர்களை உயர்கல்வியை விட்டே அப்புறப்படுத்தும் சமூக அநீதியாகும்.

ஆகவே, தமிழக அரசு, கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெறச் செய்ய வேண்டும் எனவும், இரண்டு ஆண்டிற்குக் கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதில் எவ்விதத் தடையும் ஏற்படாமலிருக்க அவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு உதவித்தொகையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி மாநிலம்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-அரியலூர் தொகுதி