முதியோர் ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

260

முதியோர் ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தரப்படுத்துதல் என்ற பெயரில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தை முற்றாக சீர்குலைக்க முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சமூக நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக நிறுத்தும் முயற்சியை தொடர்ச்சியாக செய்து வருவது திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கையே வெளிக்காட்டுகிறது.

1962 ஆம் ஆண்டு பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர்களும், ஆதரவற்ற முதியோர்களும் கவனிப்பாரற்று வறுமையிலும் பசியிலும் வாடுவதை தடுக்கும் பொருட்டு தொலைநோக்கு பார்வையுடன் பெருந்தலைவர் காமராசர் அவர்களால் முதியோர் ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 50 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்த அத்திட்டத்தை அடுத்தடுத்து அமைந்த திராவிட கட்சிகளின் அரசுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தன. ஆனால் தற்போதைய திமுக அரசு, வருவாய்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் புதிய விதிகளின்படி ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் 2 எரிகாற்று உருளை இணைப்பு வைத்திருக்கக் கூடாது, நியாய விலைக்கடையில் சர்க்கரையைப் பெறும் குடும்ப அட்டையை வைத்திருக்கக் கூடாது, கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்திருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் எரிகாற்று உருளை வாங்கும் திறனற்ற அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச எரிகாற்று இணைப்பு வழங்கிவிட்டு தற்போது அதையே காரணம் காட்டி ஓய்வூதியம் பெற தகுதியற்றவர் என்பது எவ்வகையில் நியாயமானதாகும்?

மேலும் நியாய விலைக்கடையில் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் நிலையில் உள்ளவர்களையும், நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கும் நிலையில் உள்ளவர்களையும் அவர்களின் வறுமை நிலையை கருத்திற்கொள்ளாமல் அவர்களையெல்லாம் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள் என்று கூறுவது அறிவுடைமைதானா? என்பதை தமிழ்நாடு அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளின்படி பார்த்தால் தற்போது ஓய்வூதியம் பெறும் ஏறத்தாழ 90 விழுக்காடு முதியோர்கள் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்படுவர். இது முழுக்க முழுக்க முதியோர் ஓய்வூதிய திட்டத்தை முற்றாக நிறுத்தும் முயற்சியேயாகும்.

அறுபதாண்டுகாலமாக தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகளின் தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், நிர்வாகத்திறமை இன்மையினாலும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றதோடு, பல இலட்சம் கோடி கடனையும் சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திராவிட ஆட்சியாளர்களின் ஊழல், இலஞ்சம் மலிந்த முறையற்ற நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியைக் காரணம்காட்டி ஏழை மக்களின் நலத்திட்டங்களை நிறுத்துவதென்பது கொடுங்கோன்மையாகும்.

ஆகவே, திமுக அரசு தரப்படுத்துதல் என்ற பெயரில் வயதான ஏழை-எளிய முதியவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நிறுத்தும் முடிவினைக் கைவிட வேண்டுமெனவும், புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு