சவுக்கு சங்கர் மீதான திமுக அரசின் தொடர் பழிவாங்கும் போக்கு அதிகார அடக்குமுறையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்

64

சவுக்கு சங்கர் மீதான திமுக அரசின் தொடர் பழிவாங்கும் போக்கு அதிகார அடக்குமுறையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்

தம்பி சவுக்கு சங்கர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றமே நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவரை எக்காரணம் கொண்டும் சிறையிலிருந்து விடுவிக்கக்கூடாது என்ற கொடும் மனப்பான்மையுடன் அவசர அவசரமாக மேலும் நான்கு வழக்குகளைப் பதிந்து, தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்துள்ள திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கொடுங்குற்றம் இழைத்த சிறைவாசிகளுக்குகூட வழங்கப்படுகின்ற சனநாயக உரிமையான பார்வையாளர் சந்திப்புக்குக்கூட தடை விதித்து, தம்பி சவுக்கு சங்கர் மீது அதிகார அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட திமுக அரசு, தற்போது அவரைச் சிறையிலிருந்து வெளியே விடவே கூடாது என்னும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து வழக்குக்களைத் தொடுப்பதென்பது திமுக அரசின் கொடூர முகத்தையே வெளிக்காட்டுகிறது. கருத்துச்சுதந்திரம், தனிமனித உரிமை, சனநாயக மாண்பு என மேடைக்கு மேடை பேசி, சமூகநீதியின் காவலர்களாகத் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக ஆட்சியாளர்கள், தங்களது ஆட்சியை விமர்சித்த காரணத்திற்காகவே தம்பி சவுக்கு சங்கரை சென்ற அதிமுக அரசு போட்ட வழக்குகளில் சிறைப்படுத்திக் கொடுமைப்படுத்துவதென்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.

திமுக அரசின் இத்தகைய அதிகார அடக்குமுறைகளைக் கண்டு சனநாயக பற்றாளர்களும், மனித உரிமை அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், ஊடகவியலாளர்களும் ஒரு சிறு எதிர்ப்பும் தெரிவிக்க முன்வராமல் வாய் மூடி அமைதிகாப்பது ஏன்? செய்வது திமுக அரசு என்பதற்காகவே, அதன் அத்தனை அட்டூழியங்களையும், அத்துமீறல்களையும் பொறுத்துப்போக வேண்டும் என்பது அறம் சார்ந்த அரசியல் நெறிதானா? இன்றைக்கு தம்பி சவுக்கு சங்கர் மீது தொடுக்கப்படும் அதிகார அடக்குமுறையானது, நாளை உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழாது என்று உறுதியாக கூற முடியுமா? எனவே திமுக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட அனைத்து சனநாயக சக்திகளும் முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, திமுக அரசு தனது பழிவாங்கும் போக்கினை கைவிட்டு, இனியும் கால தாமதம் செய்யாமல் தம்பி சவுக்கு சங்கர் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும், உச்சநீதிமன்ற உத்தரவினை ஏற்று அவரை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.


– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி