அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

152

அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் மருத்துவர்கள், மற்றும் மருத்துவக் கருவிகள் பற்றாக்குறையைத் தீர்க்க பலமுறை கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, அங்குப் பணியாற்றி வந்த அரசு மருத்துவர்கள் மீது பழி சுமத்தி, அவர்களைப் பணியிடமாற்றம் செய்து தண்டிக்கும் எதேச்சதிகார போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக அரசின் அமைச்சர்கள் பொதுமக்களையும், அரசுப் பணியாளர்களையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்வது அதிகாரத் திமிரினை வெளிப்படுத்தும் ஆணவ மனப்பான்மையேயாகும்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

கடந்த நான்கு மாதங்களாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதாக அரசு மருத்துவர்களே குற்றஞ்சுமத்தும் நிலையில் அவற்றை திமுக அரசு சரி செய்யாதது ஏன்?

பெரும்பாலான கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடிந்துவிழும் நிலையிலுள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் நிலையில், அவற்றை புதிய கட்டிடங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் ஏன் எடுக்கவில்லை?

திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளின் நிர்வாக வசதிக்கு போதிய நிதியை ஏன் ஒதுக்கப்படவில்லை?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, அரசு மருத்துவர்களுக்குப் பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊதிய உயர்வு இதுவரை ஏன் வழங்கவில்லை? அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்களை ஏன் பணி நிரந்தரம் செய்யவில்லை? என்ற இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

கடந்த 55 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை முறையாகப் பேணவில்லை என்பதோடு, மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகள் வாங்கியதில் ஆளுங்கட்சியினர் செய்த ஊழல்களும், முறைகேடுகளும் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புக் குளறுபடிகளுக்கு முக்கியக் காரணமாகும். முதல்வர் முதல் மாமன்ற உறுப்பினர்கள் வரை தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனும்போது கோடிகளைக் கொட்டி தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்வதே, அவர்களால் நடத்தப்படும் அரசு மருத்துவமனைகளைத் தரமற்றதாக வைத்திருப்பதற்கான தக்கச் சான்றாகும். பொருளாதார வசதியற்ற பாமர மக்களின் உயிர் மீதான திராவிட அரசுகளின் அலட்சியமே போதிய மருந்துகள், மருத்துவக் கருவிகள் இன்றி அரசு மருத்துவமனைகளை முற்றாகச் சீரழித்துள்ளது.

எனவே, அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், மருத்துவர் – செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்யாமல், அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்க்காமல், வெற்று விளம்பர அரசியலுக்காக திடீரென அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், பணியிட மாற்றம் செய்வதும் ஏற்புடையதல்ல. அரசு தன் மீதான தவறுகளை மறைப்பதற்காக அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பலிகடா ஆக்குவது எவ்வகையில் நியாயமாகும்?

ஆகவே, வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டுமெனவும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி