சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்! – சீமான் கோரிக்கை

23

சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்.

– சீமான் கோரிக்கை

கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் சில சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளது உடல்நலனும், மனநலனும் மிகவும் குன்றியிருக்கும் சூழலில் சிறைக்குள் நோய்த்தொற்று பரவினால் அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாய் முடியும் பேராபத்து இருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு சிறையில் 30வது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் எழுவரும் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் துன்பத்திற்கு ஆட்பட்டு, அவர்களது நோய் எதிர்ப்புத்திறன் மலிந்துள்ள நிலையில், எழுவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நோய்த்தொற்றின் தாக்கம் வீரியம் பெற்று சிறைக்குள்ளும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் அவர்கள் எழுவரையும் விடுப்பில் விடவேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. எழுவரின் விடுதலை என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகிவிட்டதால், விடுப்பு என்பது எளிதாக நிகழ்த்தக்கூடியதென்றால், மிகையாகாது.

எழுவரும் உயரடுக்குப் பாதுகாப்புப் பகுதியிலிருப்பினும் அங்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் மனிதநேயத்தோடு எழுவருக்கும் நீண்ட விடுப்பு தந்து அவர்களது உயிர்களைக் காக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்!
 – சீமான் கண்டனம்
அடுத்த செய்திசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு