திட்டமிட்ட, பாதுகாப்பான பயணம் மேற்கொள்வீர்..! – நவம்பர் 1, மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகைதரும் உறவுகளுக்கு சீமான் அறிவுறுத்தல்

516

நாள்: 31.10.2022

திட்டமிட்ட, பாதுகாப்பான பயணம் மேற்கொள்வீர்..!

என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நாளை நவம்பர் 01 ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக வருகை தரவிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க பெரும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றேன்.

உறுதியாக திட்டமிட்டபடி நடைபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பெருநிகழ்வில் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள வருகை தரும் பேரன்பிற்குரிய உறவுகளும், தம்பி-தங்கைகளும் பயணத்தை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக நெடுந்தொலைவிலிருந்து பல மணி நேரங்கள் வாகனங்களில் பயணித்து வரும் உறவுகள் எவ்வித அவசரமுமின்றி, நிதானமாக வாகனங்களில் பயணித்து வரவேண்டுமெனவும், அதற்கேற்றவாறு பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தொடங்க வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன். பயணத்தின் பொழுது நம்மால் மக்களுக்கு எந்த இடைஞ்சல்களும் ஏற்படாதவாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ளவேண்டும் எனவும் கண்டிப்புடன் அறிவுறுத்துகிறேன். தலைக்கவசம் அணிதல், இடவாறு அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வருகை தந்து, பேரணியில் பங்கேற்றுவிட்டு, பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்ற செய்தியை அறிந்த பிறகுதான் என் மனம் நிம்மதி அடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம்முயிர்த் தமிழ்க்காக்க நாம் அனைவரும் உணர்வெழுச்சியோடு ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இப்பெருமைமிகு பேரணியில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை அன்பு உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

மற்றவை நேரில்…

உங்கள் அண்ணன்
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதமிழக வரலாற்று அறிஞர் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சங்கராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்