வெளிநாட்டவரெனக்கூறி தம்பி இராபர்ட் பயசுக்கு சிறைவிடுப்பை மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்; 31 ஆண்டுகளுக்கு பிறகும் தமிழ் நாடு அரசு இத்தகைய துரோகம் இழைப்பது நியாயமா? – சீமான் கண்டனம்

255

வெளிநாட்டவரெனக்கூறி தம்பி இராபர்ட் பயசுக்கு சிறைவிடுப்பை மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்; 31 ஆண்டுகளுக்கு பிறகும் தமிழ் நாடு அரசு இத்தகைய துரோகம் இழைப்பது நியாயமா? – சீமான் கண்டனம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கினுள் சிக்குண்டு, 31 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி இராபர்ட் பயஸ் அவர்களுக்கு சிறைவிடுப்பை மறுத்திருக்கும் திமுக அரசின் செயலானது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. ஆறுதமிழர்களது விடுதலையை விரைந்துப் பெற்றுத்தருவோமெனக்கூறி வாக்குறுதி அளித்துவிட்டு, சட்டவல்லுநர்களோடு ஆலோசனை செய்வதாக அறிவித்துவிட்டு, இப்போது வெளிநாட்டவரெனக்கூறி தம்பி பயசின் சிறைவிடுப்புக்கே முட்டுக்கட்டையிடுவது கடும் கண்டனத்திற்குரியது.

செய்யாதக்குற்றத்திற்காக அனுபவித்துக்கொண்டிருக்கிற 31 ஆண்டுகாலக் கொடுஞ்சிறைவாசத்தினால் உடல்நலிவுற்று ஒவ்வொரு நாளும் கொடும் வலியினால் அவதிப்படும் தம்பி இராபர்ட் பயஸ் அவர்கள் தனக்கும், தனது மனைவிக்குமான மருத்துவச்சிகிச்சைகளுக்காகவே சிறைவிடுப்புக்கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். இதற்கென சிறைத்துறை நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பித்திருந்தபோதிலும், அதற்கு உரியப் பதிலளிக்காது காலங்கடத்தி வந்த திமுக அரசு, ‘வெளிநாட்டைச் சேர்ந்த தண்டனை சிறைவாசிகளுக்கு விடுப்பில்லை’ எனும் அரசாணையைக் காரணமாகக் காட்டி, விடுப்புத்தராது தட்டிக்கழித்திருப்பது அப்பட்டமான மோசடித்தனமாகும். கடந்த 24-02-22 அன்று விடுப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 25-04-22 அன்றுதான் இந்த அரசாணையே வெளியிடப்பட்டிருக்கிறது என்பதன் மூலம் சிறைவிடுப்பை மறுப்பதற்கென திமுக அரசு செய்த கொடும் நயவஞ்சகப்போக்குதான் இதுவென அறிந்துகொள்ளலாம். ஒருபுறம், ஆறுபேரையும் விடுதலைசெய்வதாக அறிவிப்புசெய்துவிட்டு, மறுபுறம் மருத்துவச்சிகிச்சைக்கு விடுப்புக்கேட்டாலே அரசாணையிட்டு தடைவிதிப்பது என்பது ஏற்கவே முடியாத பச்சைத்துரோகமாகும். சிறைவிடுப்பு என்பது சட்டத்தின்படி ஒவ்வொரு சிறைவாசிக்கும் வழங்கப்பட்டிருக்கும் தார்மீக உரிமையாகும். 31 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிற சிறைவாசிக்கு மருத்துவச் சிகிச்சைக்காகக்கூட விடுப்பு வழங்க மறுப்பதென்பது துளியும் மாந்தநேயமற்ற கொடுஞ்செயலாகும்.

31 ஆண்டுகால நீண்ட நெடிய சிறைவாழ்க்கையில் அவரது மனைவி பிரேமாவை இரண்டே இரண்டு முறை மட்டும்தான் சந்தித்திருக்கிறார் தம்பி பயஸ். ஒரே ஒருமுறைதான் விடுப்பில் வெளியே வந்திருக்கிறார். தற்போது அவருக்கும், அவரது மனைவிக்குமாக மருத்துவச்சிகிச்சை செய்தேயாக வேண்டுமெனும் உடல்ரீதியான நெருக்கடி ஏற்பட்டிருப்பதாலும், அதற்கானப் பொருளாதார ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதாலுமே சிறைவிடுப்புக்கேட்டிருக்கிறார். அவரது மனைவி பிரேமா அவர்களும் 08-05-22 அன்று தமிழக முதல்வருக்கு இதனை வலியுறுத்திக் கடிதம் எழுதியிருக்கிறார். இருந்தும், விடுப்பு வழங்க மறுத்து பெரும் அநீதியை விளைவிக்கிறது ஆளும் திமுக அரசு.

‘ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்’ எனத்தேர்தலுக்கு முன்பு முழக்கமிட்டுவிட்டு, இப்போது ஈழத்தமிழரான தம்பி இராபர்ட் பயசை அந்நிய நாட்டவரெனக் கூறிக் காரணம் கற்பித்து, சிறைவிடுப்பைத் தர மறுப்பது சந்தர்ப்பவாதமில்லையா? எட்டுகோடி தமிழர்கள் உறவென தாய்த்தமிழகத்தில் இருக்க ஈழச்சொந்தங்களை அந்நியரென அடையாளப்படுத்துவது இழிசெயலில்லையா? கடந்த அதிமுக ஆட்சியின்போதே ஒரு மாதகாலம் சிறைவிடுப்புப்பெற்று வெளியே வந்த தம்பி இராபர்ட் பயசுக்கு, திமுக ஆட்சியில் எதற்கு இந்தக்கெடுபிடி? இதுதான் சமூக நீதியைக் கடைப்பிடிக்கிற இலட்சணமா? ஆளும் வர்க்கத்தினர் வெளிநாட்டவருக்குச் சிறைவிடுப்பை மறுக்கும் அரசாணையைக் காரணமாகக் காட்டுவார்களென்றால், அது மாநில அரசின் சிறைத்துறை நிர்வாகம் இயற்றியதுதானே? அதனைத் திரும்பப்பெறவும், திருத்தம் செய்யவுமான அதிகாரம் மாநில அரசின் கரங்களில்தானே இருக்கிறது? அப்படியிருக்கையில், ஈழச்சொந்தங்களுக்கு விதிவிலக்குக்கொடுத்து, திருத்தம் செய்யப்பட்ட புதிய அரசாணையை இயற்றவேண்டியதுதானே? அதனைச் செய்ய எது தடுக்கிறது? கைகளில் அதிகாரமிருந்தும் விடுப்பு வழங்குவதற்கு மனமில்லாத திமுக அரசு, ஒன்றுக்கும் உதவாதக் காரணங்களை மட்டும் அடுக்குவது எந்தவிதத்தில் நியாயம்? இதுதான் ஆறுதமிழர்கள் விடுதலையில் திமுக அரசு காட்டுகிற அக்கறையும், முனைப்புமா? பேரவலம்!

ஏழு தமிழர்களின் விடுதலைக்காக, 09-09-18 அன்று தமிழக அமைச்சரவை 161வது சட்டப்பிரிவின்படி இயற்றியத் தீர்மானத்திற்கு ஒப்புதல் தராத தமிழக ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து, 18-05-22 அன்று தம்பி பேரறிவாளனை விடுதலைசெய்ததோடு, மீதமிருக்கும் ஆறுபேரது விடுதலைக்குமான வாசலையும் திறந்து வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவரெனக்கூறி, இத்தீர்ப்பு மீதமிருக்கும் ஆறுபேருக்கும் பொருந்துமென்பதையும் உறுதிசெய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், நெஞ்சுரத்தோடும், துணிவோடும் இவ்விடுதலை விவகாரத்தைக் கையிலெடுத்து, ஆளுநருக்கு அரசியல் நெருக்கடியும், அழுத்தமும் கொடுத்து விடுதலைக்கான ஒப்புதலைப் பெற வேண்டிய திமுக அரசு, சிறைவிடுப்பு வழங்கவே மனமின்றி வக்கற்ற நிலையில் நிற்பது வெட்கக்கேடானது. இதுதான் திமுகவின் கொள்கை உறுதிப்பாடா? சமரசமற்ற நிலைப்பாடா? ஒன்றிய அரசை எதிர்க்கும் வல்லாண்மையா? ஆளுநரின் அடாவடித்தனத்தை முறியடித்து, ஆறு பேரது விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டிய இடத்திலிருக்கும் திமுக அரசு, மிக மிகக் குறைந்தபட்சமானக் கோரிக்கையாக இருக்கும் சிறைவிடுப்புக்கே தடைவிதித்து, பாஜக அரசின் குரலாய் எதிரொலிப்பது யாரைத் திருப்திப்படுத்த? விடுதலையை ஆதரிப்பதாகவும், பெற்றுத்தருவதாகவும் தம்பட்டம் அடித்துவிட்டு, இப்போது அவர்களது விடுதலைக்கான எந்த முன்னெடுப்பையும் செய்யாதுவிட்டு, சிறைவிடுப்புக்கும் இடையூறு செய்து தடுத்துக்கெடுப்பது இவ்விவகாரத்தில் திமுக அரசு பூண்டிருக்கும் இரட்டைவேடத்தையே வெளிக்காட்டுகிறது.

ஆகவே, தமிழக அரசானது, மீண்டும் மீண்டும் விடுதலைகோரி போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளாது, ஆறு தமிழர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து செய்ய வேண்டுமெனவும், தம்பி ராபர்ட் பயஸ் அவர்களது மிக நியாயமான சிறைவிடுப்புக்கோரிக்கையை ஏற்று அதற்குரியத் தடைகளை நீக்கி, உடனடியாக அவருக்கு விடுப்பளிக்கவும், உயர் மருத்துவச்சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் ஹென்றி ஜோசப் மறைவு! – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி
அடுத்த செய்திவீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு – தலைமையகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு