வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு – தலைமையகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

73

28-08-2022 | வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2022 அன்று, கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது, “எங்களுடைய அன்பு தங்கை, செங்கொடி அவர்களினுடைய நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்துகிற நாள் இன்று. தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர் தூக்கு கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக்கொடுத்தாவது அதை தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, தன் உடலுக்கு தீயிட்டு, ஒரு புரட்சித்தீயை இந்த நிலத்தில் பற்றவைத்த பெரும் நெருப்பு தான் தங்கை செங்கொடி அவர்கள். அவளுடைய பெருங்கனவு என்பது, நீண்டநாட்களாக சிறைக்குள் வாடுகிற ஏழு தமிழர்களுடைய விடுதலை தான். 30 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்குப்பிறகு, என்னுடைய அன்பு தம்பி பேரறிவாளனுக்கு அந்த விடுதலை எட்டியிருக்கிறது. இது வேதனையும், வலியும், காயம் தோய்ந்த நீண்ட நெடிய பயணம். ஆனால், மீதமிருக்கிற ஆறு பேர் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழ் பிள்ளையினுடைய கடமையாக மாறியிருக்கிறது. அது தான் தங்கை செங்கொடி நமக்கு கையளித்து விட்டுச்சென்ற பொறுப்பும் கடமையுமாகும்.

2002 ஆம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின்போது, 11 பேர் கொண்ட கும்பல், பில்கிஸ் பானோ என்கிற 5 மாத கர்ப்பிணி தங்கையைக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, அவளின் 3 வயது பெண் குழந்தையை வீசி எறிந்து கொலை செய்து, அவள் குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் சேர்த்து மொத்தம் 17 பேரை கொலை செய்த கும்பலும், ஆசிபா என்ற சிறுமியை கோயில் கருவறைக்குள் வைத்து, அவள் கை கால்களை உடைத்து, பலபேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த கும்பல் எல்லோரும் கையில் இந்தியக்கொடியை ஏந்திக்கொண்டு ‘பாரத மாதாவிற்கு ஜே’ கூறுபவர்கள் தான். நாட்டு மக்களை இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டுக்கு வீடு கொடியேற்றுங்கள் என்று திசைதிருப்பிவிட்டு, அந்த 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இது குறித்து எந்த ஊடகமும் பொது விவாதம் நடத்தியதாகவோ, பேசுபொருளாக்கியதாகவோ ஒன்றும் இல்லை.

இதையெல்லாம் பார்க்கும்போது புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், “அதிகாரம் மிக வலிமையானது” என்று கூறியது தான் நினைவிற்கு வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வலிமையாக இருக்கின்றார்கள், நாங்கள் அதிகாரமற்ற எளிய பிள்ளைகளாக இருப்பதனால் எங்கள் குரல் எளிமையாக இருக்கிறது, எங்கள் போராட்டம் கவனிக்கப்படாமல் செல்கிறது. ஆனால், என் தங்கை எந்த நோக்கிற்காக தன் உயிரை மாய்த்தாளோ, அதை நிறைவேற்றாமல் நாங்கள் ஓயப்போவதில்லை. ஒரு நாள் அவளுக்கு வீரவணக்கம் செலுத்தும்போது, மீதமுள்ள ஆறு தமிழர்களின் விடுதலையை சாத்தியப்படுத்திவிட்டு செலுத்துவோம்.

‘நிரந்தர முதல்வர்’, ’நிரந்தர அரசு’ என்று எதுவும் இல்லை. ஆட்சிகள் மாறும், காட்சிகள் மாறும். இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் நாளை வீதிக்கு வருவார்கள், இன்று வீதியில் நின்று போராடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் ஒரு நாள் அதிகாரம் வரும். அன்று இதெல்லாம் சாத்தியப்படுத்தப்படும். அப்படிபட்ட ஒரு பெருங்கனவோடு தன் உடலை நெருப்புக்கு இரையாக்கிய என் அன்பு தங்கை செங்கொடிக்கு இந்த நாளில் நாம் தமிழர் பிள்ளைகள் பெருமிதத்தோடு அவளை நினைவுகூர்ந்து எங்கள் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று கூறினார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், “மீதமுள்ளவர்களின் விடுதலையைப்பற்றி பிற கட்சிகள் பேசாததற்கு காரணம், அவர்களுடனே கூட்டணியில் இருப்பது தான். ஒன்று எங்கள் கட்சியின் தலைவரை கொன்றுவிட்டார்கள் என்று சொல்லக்கூடிய காங்கிரசுடன் கூட்டணி, மற்றொன்று எங்கள் முன்னாள் பிரதமரைக் கொன்றுவிட்டார்கள் என்று சொல்லக்கூடிய பாரதிய ஜனதாவின் கூட்டணி. 2024 தேர்தலில் அவர்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டுமென்றால் இதைப்பற்றி பேசாமல் இருக்க வேண்டும். எங்களுக்கு கூட்டணி பற்றியெல்லாம் கவலையில்லை, அதனால் இந்த விடுதலையைப் பற்றி பேசுகிறோம். தமிழர்கள் எழுச்சிபெறக் கூடாது, ஒற்றுமை அடையக்கூடாது என்பது தான் பாஜக, காங்கிரஸ் இருவரின் ஒட்டுமொத்த நோக்கம். நாங்கள் வாக்கிற்கானவர்கள் அல்ல எங்கள் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கானவர்கள். நாங்கள் ஓட்டுக்காக நிற்கவில்லை, எம் மக்களின் உரிமைக்காக நிற்கிறோம். அதனால், நாங்கள் துணிந்து பேசுவோம். மற்ற கட்சிகள், அவர்களின் கூட்டணி தலைமையைப் பார்த்து அஞ்சுகிறார்கள். அதனால், பேச மாட்டார்கள்” என்றார்.

“என் தம்பி பயாஸ் வெளிநாட்டுக்காரர் என்பதால் அவர் விடுதலை மறுக்கப்படுகிறது என்றால், அவருக்கு ஐயா எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் சிறை விடுப்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவர் உள்நாட்டுக்காரராக இருந்தாரா? சரி, இரவிச்சந்திரன், அக்கா நளினி எந்த நாட்டுக்காரர்கள்? அவர்களின் விடுதலைக்குத் தடையாக இருப்பதே திமுக தான். தமிழ், தமிழர் என்று பேசும் திமுக, தமிழையும், தமிழரையும் அழிப்பதில் முதல் ஆளாக இருக்கும். சிங்களனைவிட ஆபத்தானவர்கள் இவர்கள். இந்த நாட்டில் சிறப்பு முகாம் என்கிற சித்திரவதை முகாமை உருவாக்கியது யார்? ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிங்களனின் முள் கம்பிக்குள் முடங்கி இருந்ததற்கும், இந்த சிறப்பு முகாமில் இருப்பதற்கும் என்ன வேறுபாடு உள்ளது? கியூ ப்ராஞ்ச் என்ற பிரிவை உருவாக்கியதே ஐயா கருணாநிதி தான். கடவுச்சீட்டு காலம் முடிந்து கூடுதல் நாட்கள் இருந்ததற்காக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை, பாருங்கள்.”

“8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை என்று அமைச்சர் பேசுகிறார். நீதிமன்ற தீர்ப்பையே விமர்சித்து ஐயா ஸ்டாலின் கொடுத்த அறிக்கை உள்ளது. அந்த பெயரிலேயே திட்டத்தைச் செயல்படுத்திவிட்டால் மக்கள் கோவப்படுவார்கள் என்று ‘பயண நேரம் குறைப்பு சாலை திட்டம்’ என்று பெயர் மாற்றி அதே 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த துடிக்கிறார்கள். இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவார்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் ஒன்று பேசுவார்கள். 5000 ஏக்கரில் விளைநிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதற்கு பதிலாக, ஏற்கனவே மீனம்பாக்கத்தில் 1500 ஏக்கரில் விமான நிலையம் இருப்பது போல, அதை உள்நாட்டு விமான நிலையமாக வைத்துக்கொண்டு, இங்கும் 1500 ஏக்கரில் உள்ள தரிசு புறம்போக்கு இடத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைத்துக்கொள்வதற்கு நாங்கள் தடையாக இல்லை. விளைநிலங்களை அழித்துவிட்டு விமான நிலையம் அமைப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கட்டிடங்களை அழித்துவிட்டு வெறும் நிலமாக்க முடியும் ஆனால், விளைநிலங்களை அழித்துவிட்டால் மீண்டும் விளைநிலமாக்க முடியாது. ஏற்கனவே, இந்த நாட்டில் விளைநிலங்களின் எண்ணிக்கை குறைவு. விளைநிலத்தில் வானூர்தி நிலையம் அமைக்கலாம், ஆனால் தேவைப்படும்போது வானூர்தி நிலையத்தை அழித்துவிட்டு விளைநிலமாக மாற்ற முடியாது. இந்த விமான நிலையத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிறார் அமைச்சர். பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் சென்னைக்குள் எப்படி போக்குவரத்து நெரிசல் குறையும்? எப்படிப்பட்ட அறிவார்ந்த ஆட்சியாளர்களை மக்கள் தேர்வு செய்துள்ளார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்” என்று தெரிவித்தார்.