அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

166

அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த அன்புத்தங்கை வினோதினி அவர்கள், சின்னபோரூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்தார் என அவரது கணவர் இரு குழந்தைகளோடும் குடும்பத்தினரோடும் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். இதுகுறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும். சிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியத்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். ஈடுசெய்ய முடியாத இழப்பினால் துயருற்றுள்ள தங்கை வினோதினியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐம்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், வசதிபடைத்த ஆட்சியாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தனியார் பெருமருத்துவமனைகளில் உயர்தரமான மருத்துவம் பெறுகின்றனர். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகளில் படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியம் சிறிதுமின்றி மிகுந்த அர்ப்பணிப்புணர்வோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது மிக இன்றியமையாததாகும். ஆனால் நடைமுறையில் பல நேரங்களில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். திமுக அரசு அதனை முறையாகச் செய்யத் தவறியதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு இனியும், இதுபோன்று அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாதொரு உயிரும் பறிபோகாதவாறு காக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், தவறான அறுவை சிகிச்சை செய்து உயிரிழப்பு ஏற்பட காரணமானவர்கள் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த தங்கை வினோதினியின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும், இரு குழந்தைகளோடு பரிதவிக்கும் அவரது கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகுடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்