சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ்மகள் சுபா உமாதேவன் நியமனம் – சீமான் வாழ்த்து

200

சுவிட்சர்லாந்து நாட்டின், புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ்மகள் அன்பிற்குரிய தங்கை சுபா உமாதேவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.

வீரம் விளைந்த வன்னிப்பெருநிலத்தின் கிளிநொச்சி நகரில் பிறந்து, சிங்கள இனவெறி அரசின் பெருங்கோடுமையால் குழந்தைப் பருவத்திலேயே புலம்பெயர்ந்து வாழவேண்டிய துயரங்களுக்கு ஆளானபோதும், தன்னுடைய விடாமுயற்சியாலும், அயராத உழைப்பாலும், பெற்றோர் தந்த பெரும் ஊக்கத்தாலும் அறிவுத்துறையில் சிறந்து விளங்கி, ஐக்கிய நாடுகள் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமை அமைப்பு (யுனிசெப்), செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றில் உயரிய பொறுப்புகள் வகித்து, பிறந்த தமிழீழ திருமண்ணிற்கும், தமிழ்ப்பேரினத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் திறம்படப் பணியாற்றிய தங்கை சுபா உமாதேவன் அவர்களின் அரும்பணி மிகுந்த பாராட்டுக்குரியது.

அந்த வகையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் பெருமைக்குரிய ஆலோசகர் பதவியிலும் சிறந்து விளங்கி, சாதனை புரிய தங்கை சுபா உமாதேவன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!