அசாதுதீன் ஒவைசி பரப்புரை வாகனம் மீது துப்பாக்கிச் சூடு! மதவாதிகளால் நடத்தப்பட்ட மீண்டுமொரு கோழைத்தனமான தாக்குதல்! – சீமான் கண்டனம்

133

அசாதுதீன் ஒவைசி பரப்புரை வாகனம் மீது துப்பாக்கிச் சூடு! மதவாதிகளால் நடத்தப்பட்ட மீண்டுமொரு கோழைத்தனமான தாக்குதல்! – சீமான் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பரப்புரை முடித்துவிட்டு, டெல்லி திரும்பும் வழியில், அகில இந்திய மஜ்லிஸ் ( AIMIM ) கட்சியின் தலைவரும், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய சகோதரர் அசாதுதீன் ஒவைசி அவர்களின் பரப்புரை வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சனநாயக தளத்தில் மாற்றுச் சிந்தனையாளர்களை அச்சுறுத்தல் மூலம் அடிபணிய வைக்க முயலும், மதவாதிகளின் இக்கொடூரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது

மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறித்து, இந்தியாவின் பன்முகத்தன்மையையும், இறையாண்மையையும் முற்று முழுதாகச் சீர்குலைக்கும் இந்துத்துவ மோடி அரசின், ஒற்றையாட்சி கொடுங்கோன்மைக்கெதிராக நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் வெடித்துச் சிதறும் அவரது உரத்த குரல் நாட்டின் சனநாயக மாண்புகள் மழுங்காமல் பாதுகாக்கும் காப்பரண்களில் ஒன்றாகும்.

ஒன்றிய பாஜக அரசின் குரல்வளையை நெரிக்கும் வகையிலான போர்க்குணம் மிக்க சகோதரர் ஓவைசியின் இருப்பு, தங்களது காட்டாட்சிக்கு பெரும் இடையூறாக இருக்கின்ற காரணத்தினால், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் வரிசையில் ‘மதவாதிகளால் நடத்தப்பட்ட மீண்டுமொரு கோழைத்தனமான தாக்குதலாகவே இது இருக்கக்கூடும்’என்ற ஐயமே மேலோங்குகிறது.

ஆகவே, கொலைவெறி தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய, அன்புச்சகோதரர் அசாதுதீன் ஓவைசி அவர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாகத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூழ்ந்த உயர் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், கொலைவெறியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மட்டுமல்லாது அவர்களுக்குப் பின்புலத்தில் உள்ளவர்களையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ்மகள் சுபா உமாதேவன் நியமனம் – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அவசர கலந்தாய்வு