தமிழக மீனவர் ராஜ்கிரணின் இறந்த உடலையும் அவமதித்து சிங்கள இனவெறியைக் காட்டுவதா? – சீமான் கண்டனம்

236

தமிழக மீனவர் ராஜ்கிரணின் இறந்த உடலையும் அவமதித்து சிங்கள இனவெறியைக் காட்டுவதா? – சீமான் கண்டனம்

இலங்கைக்கடற்படையினரால் கொலைசெய்யப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணது உடலை அந்நாட்டு அரசு உடற்கூறாய்வு செய்தப்பின், வெறுமனே உடலைப்பொட்டலம் கட்டி, ஆடைகளின்றி அனுப்பி அவமதித்திருப்பது ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. தமிழக மீனவரின் இறந்த உடல் மீதும் இனவெறியைக் காட்டும் சிங்கள அரசப்பயங்கரவாதத்தின் இக்கோரச்செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற மீனவரது உடற்கூறாய்வுக்குப் பின்னர், சர்வதேச விதிகளையோ, நடைமுறைகளையோ துளியும் பின்பற்றாது ஆடைகளற்ற வெற்றுடலாகவே மீனவரது உடலை அனுப்பிய செய்தியானது தமிழகத்தில் நடைபெற்ற உடற்கூறாய்வின்போது தெரியவந்திருப்பது அடக்கவியலா பெருங்கோபத்தையும், உள்ளக்கொதிப்பையும் தருகிறது. இது தமிழர்கள் மீதான தீரான வன்மத்தையும், கொடும் இனவெறியையுமே காட்டுகிறது. இதுதொடர்பாக, இலங்கை அரசின் இந்தியத்தூதரகத்தையும், இந்திய வெளியுறவுத்துறையையும் கேள்விக்குள்ளாகி, அவற்றைச் சார்ந்தவர்களை நேரில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையானது உத்தரவிட்டும்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழகத்தை ஆளும் அரசும் இதுவரை வாய்திறக்காது அமைதிகாப்பது வெட்கக்கேடானது!

குஜராத் அருகே பாகிஸ்தான் நாட்டுக்கடற்படையினரால் கொலைசெய்யப்பட்ட மராத்திய மீனவருக்காக பாஜக அரசு கண்டனம் தெரிவிக்கிறது. அந்நாட்டுக்கடற்படை இராணுவத்தின் மீது குஜராத் அரசு வழக்குத் தொடுக்கிறது. அதேபோல, கேரளத்தில் இரு மீனவர்கள் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச நீதிமன்றம்வரை கொண்டு செல்ல வழிவகை செய்தது அம்மாநில அரசு. ஆனால், தமிழகத்தில் இதுவரை 850க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக்கடற்படையால் பச்சைப்படுகொலை செய்யப்பட்டும் மத்திய, மாநில அரசுகள் அதற்குப் பெரியளவில் எவ்வித எதிர்வினையுமாற்றாது அலட்சியப்படுத்துவதும், தமிழ் மீனவர்களின் உயிரைத் துச்சமெனக் கருதிக் கடந்துசெல்வதுமான வரலாற்றுத்துரோகத்தினை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆகவே, மீனவர் ராஜ்கிரண் படுகொலைக்கான நீதியை இனியும் பெற்றுத்தராது ஒன்றிய அரசும், மாநில அரசும் காலங்கடத்தினால், அதற்கான எதிர்வினைகளைக் கட்டாயமாக மக்கள் மன்றத்திலே இரு அரசுகளும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா