இனமானப்போராளி தம்பி பெரம்பலூர் அருளின் மறைவு நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு! – சீமான் கண்ணீர் வணக்கம்

286
இனமானப்போராளி தம்பி பெரம்பலூர் அருளின் மறைவு நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு! – சீமான் கண்ணீர் வணக்கம்

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் என்னுயிர் தம்பி வழக்கறிஞர் அருள் அவர்களது திடீர் மறைவுச்செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்து வருகிற இதுபோன்ற மறைவுச்செய்திகளால் மிகுந்த மனவலியும், பெரும் வேதனையும் அடைந்துள்ளேன். என் மீது மாசற்ற அன்பும், நாம் தமிழர் கட்சியின் மீது அளவற்ற பற்றுறுதியும் கொண்ட என்னுயிர்த்தம்பி அருளின் மறைவு என்னை இடியெனத்தாக்கி‌ முற்றிலும் நிலைகுலையச் செய்திருக்கிறது. ஆற்ற முடியாத இப்பெருந்துயரிலிருந்து எப்படி மீள்வதெனத் தெரியாது தவித்துக்கொண்டிருக்கிறேன்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகான காலக்கட்டத்தில் இன உணர்வுகொண்டு தன்னலமற்று என்னோடு கரம்கோர்த்து களத்தில் நின்ற இலட்சக்கணக்கான தம்பிகளில் ஆற்றலும், உணர்வும் ஒருங்கே நிரம்பிய துடிப்பான இளைஞனாக தம்பி பெரம்பலூர் அருள் திகழ்ந்தான். புன்னகைக்கும் முகத்தோடு இனத்திற்கான விடுதலை பாதையில் சலிப்படையாது இரவு பகல் பாராது உழைத்தவன் தம்பி அருள். குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியை உருவாக்கிக் கட்டியெழுப்பிய முதன்மைத்தளபதியாக விளங்கினான். 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக குன்னம் சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டு இனத்திற்கான அரசியலை சமூகத்தின் கடைக்கோடிவரை கொண்டு சேர்த்த கொள்கையாளன் தம்பி அருள். சமூக நலனுக்காக அயராது போராடிய போராளியாக விளங்கிய தம்பி அருளுக்கு இப்பேர்ப்பட்ட மரணம் நேருமென்று நினைக்கவில்லை. முந்தைய நாள் வரை மிக இயல்பாக இருந்தவன் திடீரென்று மரணித்திருப்பது பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.
எனது தம்பி அருளுக்கு இன விடுதலை குறித்தான பெருங்கனவு இருந்தது. தான் பிறந்த தமிழ்த்தேசிய இனம் மற்ற மொழிவழித்தேசிய இனங்களைப் போல எல்லாவித உரிமைகளையும் பெற்று மதிப்புடன் உயர்ந்து சிறந்து வாழ வேண்டும் எனும் உன்னதமான நோக்கமிருந்தது. அதற்காகவே நாளும் உழைத்தான். அவனில்லாத பெரம்பலூரை இன்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தம்பி அருளின் மறைவு நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிற ஈடு செய்ய இயலாப் பேரிழப்பு.
எந்தப் புனிதநோக்கத்துக்காக தம்பி அருள் எங்களோடு கைகோர்த்து நின்றானோ, அக்கனவை நிறைவேற்ற அவனது உடன்பிறந்தவர்களாகிய நாங்கள் உயிருள்ளவரை உண்மையும், நேர்மையுமாக உழைப்போம் என இத்தருணத்தில் உறுதியேற்கிறோம்.
என்னுருயிர் இளவல் அருள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கேற்கிறேன். நாம் தமிழர் கட்சி 3 நாட்களுக்கு துக்கம் அனுசரித்து, தம்பிக்கு இறுதி மரியாதையினைச் செலுத்துகிறது. இனமானப்போராளி தம்பி அருள் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.
முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி நினைவு நாள் சுவரொட்டிகள் ஒட்டுதல்
அடுத்த செய்திமுதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 40 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பங்குபெறமுடியும் என்ற தேர்வு வாரியத்தின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் – சீமான் வலியுறுத்தல்