இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது! – சீமான் அறிக்கை

215

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது! – சீமான் அறிக்கை

இலங்கையில் ஆளும் அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் மக்கள் ஈடுபட்டு, அதிபர் மாளிகையைப் பெருந்திரளாக முற்றுகையிட்டதால், அந்நாட்டில் நிலவி வரும் அசாதாரணச்சூழலை எதிர்கொள்ள முடியாது, அதிபர் கோத்தபயா ராஜபக்சே புறமுதுகிட்டு தப்பியோடிய செய்தியைக் கேள்வியுற்றேன். அந்நாட்டில் நிலவி வரும் அதீதப்பொருளாதார முடக்கத்தால் ஏற்பட்ட கடும் பஞ்சமும், கொடும் வறுமையும் தாள முடியாது, மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்கள் பெருவடிவமெடுத்து, மக்கள் புரட்சியாக உருமாறியுள்ளதால் கோத்தபய ராஜபக்சேவின் ஆட்சியதிகாரம் மொத்தமாக வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது எதிர்பார்த்த ஒன்றேயாகும். இரண்டு இலட்சம் தமிழர்களை இனப்படுகொலைசெய்து, தமிழினத்தை மாபெரும் இனஅழிவுக்கு ஆளாக்கி, தமிழ்மக்களை தங்களது தாயகத்திலிருந்து புலம்பெயரச்செய்து, உலகெங்கும் ஏதிலிகளாக ஓடோடி நிற்கச்செய்த மகிந்தா ராஜபக்சேவையும், கோத்தபயா ராஜபக்சேவையும் இன்றைக்கு சிங்கள மக்களே அம்மண்ணைவிட்டு துரத்தியடிக்கிற காட்சிகள் யாவும் கொடுங்கோலர்களான ஹிட்லருக்கும், முசோலினிக்கும் நடந்தேறிய வரலாற்றுச்சாட்சிகளின் நீட்சியேயாகும்.

‘இராணுவ அடக்குமுறைக்கொள்கையால் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருப்பதை, சிங்கள இனவாதம் என்றாவது ஒருநாள் உணர்ந்தே தீரும்’ எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது அறம் வாய்ந்தப் பெருங்கூற்று சமகாலத்தில் நடந்தேறும் நிகழ்வுகளால் மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒருநாட்டில் வாழும் குடிமக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையப்படுத்திய அரசியலே, அந்நாட்டுக்கு முன்னேற்றத்தைத் தரும்; உயர்வை ஏற்படுத்தும். மாறாக, சக குடிகளைப் பகையினமாகக் கட்டமைத்து, இரண்டாந்தர மக்களாக நடத்தி, அவர்கள் மீது அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் ஏவிவிட்டு, இனஒதுக்கல் செய்யும் ஒரு நாடு ஒருநாளும் வளராது; முன்னேற்றமடையாது. அதற்கான சமகாலச்சான்றாக இலங்கை திகழ்கிறது. இலங்கையின் பூர்வீகக்குடிகளான தமிழர்களை சிங்கள மக்களிடம் பகையாளிகளாகச் சித்தரித்து, அதன்மூலம் இனவெறி அரசியலைக் கையிலெடுத்து, பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் சிங்களர்களிடம் வாக்குவேட்டையாடி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி, ஆண்டு கொளுத்து வந்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நிர்வாகச்செயல்திறன் பன்னாட்டாரங்கில் சந்தி சிரித்து நிற்கிறது. நாட்டின் நலன், மக்களின் பொருளாதார மேம்பாடு, நலமிக்க பொருளியல் வாழ்வு போன்றவற்றில் துளியும் கவனம்செலுத்தாது, தமிழர்கள் மீதான இனவெறிச் செயல்பாடுகளிலும், இனஅழிப்பு வேலைகளிலுமே முழுவதுமாய் கவனம் செலுத்தி வந்த சிங்களக்கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கோர முகங்கள் இன்றைக்கு முழுவதுமாகத் தோலுரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான இனவெறுப்பையும், இனஒதுக்கல் கோட்பாட்டையும் சிங்களர்கள் மத்தியில் நாளும் விதைத்து, அதன்மூலம், அரசியல் பிரதிபயனும், இலாபமுமடைந்து, அதிகாரத்தைச் சுவைத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களை, இன்றைக்கு சிங்கள மக்களே முழுவதுமாக எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

மகிந்தா ராஜபக்சேவையும், கோத்தபயா ராஜபக்சேவையும் நாட்டின் நிர்வாகத்தைச் சீர்குலைத்த ஊழல்வாதிகளெனக்கூறி, சிங்கள மக்கள் விரட்டியடித்தாலும் அவர்கள் வெறுமனே பொருளாதாரக்குற்றவாளிகள் அல்லர்; தமிழினத்தைத் திட்டமிட்டு இனஅழிப்பு செய்திட்ட இனப்படுகொலையாளர்கள்; போர்க்குற்றவாளிகள். அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஒருமித்த மனவோட்டமாக இருக்கிறது. எனினும், ராஜபக்சேக்களின் வீழ்ச்சி மட்டுமே எம்மினத்துக்கான விடிவுமல்ல; இலங்கைக்கான தீர்வுமல்ல; தனித்தமிழீழச்சோசலிசக் குடியரசே இரண்டுக்குமான ஒற்றைத்தீர்வாக அமையும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச்சீரழிவினை நிர்வாகச்சீர்கேட்டின் விளைச்சல் எனச் சுருக்கிப்பார்க்கக்கூடாது; இந்நிலைக்குக் காரணமாக, சிங்கள ஆட்சியாளர்களின் பொருளியல் கோட்பாடுகளும், தொலைநோக்கற்ற நிர்வாகச்செயல்பாடுகளும், உலகளாவிய அளவிலான பொருளாதாரத்தேக்க நிலைகளுமெனப் பல்வேறு காரணிகள் பரந்துபட்டு முன்வைக்கப்பட்டாலும், இலங்கையின் படுவீழ்ச்சிக்கு மூலக்காரணம், அங்கு நிலவி வரும் இனச்சிக்கலேயாகும்! அந்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ்த்தேசிய இன மக்களுக்கான நீதியை நிலைநாட்டாதவரை, அந்நாடு நிலையானத் தீர்வினை ஒருநாளும் எட்டப்போவதில்லை என்பதனை இந்தியப்பெருநாடும், சர்வதேசச்சமூகமும் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.

தலைவர் பிரபாகரன் அவர்கள், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை வீழ்த்துவதையும், அழித்தொழிப்பதையும் இலக்காகக் கொண்டு ஒருநாளும் ஆயுதமேந்தவில்லை; மாறாக, தமிழீழ விடுதலைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகவும், தன்னின மக்களைத் தற்காப்பதற்கான பாதுகாப்புக் காப்பரணாகவுமே ஆயுதமேந்திய மக்கள் புரட்சி எனும் போராட்ட வடிவத்தைத் தேர்வுசெய்தார். ஒருவேளை, தமிழீழ நாட்டுக்கானத் திறவுகோல் சமாதானப்பேச்சுவார்த்தைகளின் மூலம் கிடைக்கப் பெறுமென்றால், அதற்கும் தயாராகவே இருந்தார். அதனால்தான், ‘என்றோ ஒருநாள் எதிரியானவன் சமாதானக்கதவுகளைத் தட்டுவனாக இருந்தால், நாம் நமது நேசக்கரங்களை நீட்டத்தயாராக இருக்கிறோம்’ எனப் பேரறிவிப்பு செய்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள். தமிழீழத்தாயகத்தை அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும், காக்கவுமாகப் போராடிய தலைவர் பிரபாகரன் அவர்கள், விடுதலைக்காகப்போராடுகிற ஒரு போராளி இயக்கத்தின் தலைவராக மட்டுமல்லாது, ஒரு நாட்டை அதுவும் சர்வதேசியமும், அனைத்துலக நாடுகளும் அங்கீகரிக்காத ஒரு தேசத்தை நிர்வகித்து, நல்லாட்சியை நிறுவிய நிர்வாகத்தலைவராகவும் திகழ்ந்தார். ஒருபுறம், தாயக மீட்புக்குப் போராடுகிற உலகின் ஒப்பற்ற தலைசிறந்தப் போராளியாகவும், மறுபுறம், தங்களது எல்லைக்குள் தன்னிறைவோடு கூடிய ஒரு தனி நாட்டை நிர்வகித்தப் பெரும் புரட்சியாளராகவும் விளங்கினார் தலைவர் பிரபாகரன் அவர்கள். தமிழீழத்தாயகத்திற்கு ஒரு நாட்டுக்கான சர்வதேசிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்று, தலைவர் பிரபாகரன் அவர்கள் நிர்வாகத்தலைவராகவே முழுநேரமும் இயங்கும் வாய்ப்பு மட்டும் வரலாற்றில் வாய்க்கப்பெற்றிருந்தால் உலகின் தலைசிறந்த வல்லாதிக்க நாடுகளுள் ஒன்றாக தமிழீழம் திகழ்ந்திருக்கும் என்பது எவரும் மறுக்க முடியாதப் பேருண்மையாகும். தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால், அமெரிக்காவின் மூலமாகவோ, சீனாவின் மூலமாகவோ தமிழீழ நாட்டைப்பெற்று, அதன் அதிபராகவே ஆகியிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்வதென முடிவெடுத்தால், பிறிதொரு நாட்டின் சார்போடு இயங்க வேண்டியிருக்கும்; அது பூகோள ரீதியாக இந்தியாவின் பாதுகாப்புக்கெதிராகி விடும் எனக்கருதி, அம்முடிவுகளை எடுக்காது முற்றாகத் தவிர்த்தார். ஆனால், அவருக்கெதிராக அனைத்துலக நாடுகளின் அணிச்சேர்க்கையையும்,பொருளாதாரத் திரட்டலையும், ஆயுதங்கள், படைகளை வழங்குதலையுமென அத்தனைச் சூழ்ச்சிகளையும் செய்து முடித்து, தலைவர் பிரபாகரனுக்கும், ஒட்டுமொத்த தமிழர்களுக்குமாக வரலாற்றுப்பெருந்துரோகத்தை விளைவித்தது இந்தியப்பெருநாடு. விளைவு, அருணாச்சலப்பிரதேசத்தை, ‘தெற்கு திபெத்’ எனச்சொந்தம் கொண்டாடி வடகிழக்கில் அச்சுறுத்தி வரும் சீன நாடு, தெற்கே இலங்கையிலும் நிலைகொண்டு இந்தியாவின் இறையாண்மைக்கே குந்தகம் விளைவிக்க முனைகிறது. அதனால், இந்திய ஒன்றியத்தினுடையப் பிராந்திய நலன்களுக்கு முற்றாக எதிர்திசையில் பயணித்து, சீனாவோடோ, அமெரிக்காவோடோ இணக்கமாக இருந்து வரும் இலங்கையின் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு எக்காலத்திலும் உண்மையாக இருக்கப்போவதில்லை என்பதை இந்தியாவை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.

ஆகவே, இந்திய நாட்டின் காலடியிலுள்ள இலங்கை நாட்டில் நிலவும் அசாதாரணச்சூழலும், அரசியல் நிலைத்தன்மையின்மையும் இந்தியாவின் எல்லைப்பாதுகாப்போடு தொடர்புடைய பெருஞ்சிக்கல் என்பதை உணர்ந்து, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான இனச்சிக்கலில் தமிழர்கள் பக்கம் நிற்க வேண்டுமெனவும், சிங்கள மக்களாலேயே புறந்தள்ளப்பட்டுவிட்ட மகிந்தா ராஜபக்சேவையும், கோத்தபய ராஜபக்சேவையும் போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றும் போக்கை இனியும் செய்யாது, தலையீடற்ற பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணைக்கும், ஈழச்சொந்தங்களிடம், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களிடமும் தனித்தமிழீழ நாட்டுக்கானப் பொது வாக்கெடுப்பை நடத்துவதற்குமாகப் பன்னாட்டுச்சமூகத்துக்கும், ஐ.நா. பெருமன்றத்துக்கும் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் 312ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – எழும்பூர்
அடுத்த செய்திஎண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு.