வேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம்

126

அறிக்கை: வேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 3174 ஏக்கர் வேளாண் விளை நிலங்களை
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாக தொழில் வளாகம் அமைப்பதற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 150 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வந்த விவசாயிகளை திமுக அரசு எதேச்சதிகாரப்போக்குடன் கைது செய்து சிறையிலடைத்தது. தற்போது, தாய்நிலத்தை தற்காக்க போராடிய அப்பாவி விவசாயிகளில் எழுவர் மீது சிறிதும் மனச்சான்றின்றி திமுக அரசு குண்டர் சட்டம் தொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடிவரும் வேளாண் மக்களின் உரிமைக் குரலுக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்கும் திமுக அரசின் செயல் கொடுங்கோன்மையாகும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நாடகமாடிய திமுக, ஆட்சி – அதிகாரத்திற்கு வந்தவுடன் எட்டு வழிச்சாலை திட்டத்தை பசுமைவழிச்சாலை என்ற பெயரில் மீண்டும் நிறைவேற்ற முயல்வதும், கோவை – அன்னூர், திருவண்ணாமலை – பாலியப்பட்டு, செய்யாறு – மேல்மா, கிருஷ்ணகிரி – ஓசூர் உள்ளிட்ட இடங்களில் வேளாண் மக்களின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களை அபகரித்துத் தொழில் வளாகம் அமைக்க முயல்வதும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க துணைபோவதும் நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு செய்கின்ற பச்சை துரோகமாகும்.

எந்த சிப்காட் தொழிற்சாலையும் காய், கனிகளை விளைவிக்காது, அரிசி, பருப்பினை உற்பத்தி செய்யாது என்பதனை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக பறித்து அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து இரத்தம் குடிப்பதற்கு சமமாகும்.

மேல்மா சுற்றுவட்டார விவசாய பெருமக்கள் விடுத்த அழைப்பை ஏற்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் நாம் தமிழர் கட்சி சார்பாக நானே நேரில் சென்று அம்மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்தில் பங்கேற்று, அவர்களின் மண்ணுரிமை கோரிக்கை வெல்ல எனது முழு ஆதரவினை தெரிவித்து உரையாற்றினேன். அதோடு கடந்த 6 ஆம் தேதி போராடும் விவசாயிகள் மீது திமுக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாமாக கைது செய்தபோது அதனை கடுமையாக கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தேன்.

ஓராண்டிற்கும் மேலாக மேல்மா சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தொடர்ப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வராத திமுக அரசு போராடிய ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ளது சிறிதும் மனச்சான்றற்ற அரச வன்முறையாகும்.

ஆகவே, திமுக அரசு வேளாண் பெருங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தினை உடனடியாக ரத்து செய்வதுடன், எவ்வித வழக்கும் பதியாமல் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1725212679566934387?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீது ஒடுக்குமுறை ஏவும் திமுக அரசின் பாசிசப் போக்கு! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 87ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு