உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தைக் கண்டித்து, தீக்குளித்து இறந்துபோன தம்பி வெற்றிமாறன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

272

உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தைக் கண்டித்து, தீக்குளித்து இறந்துபோன தம்பி வெற்றிமாறன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உள்ளாட்சியமைப்புகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தையும், சனநாயக மறுப்பையும் கண்டித்து தமிழ்நாடு பறையர் பேரவை தலைவர் தம்பி வெற்றிமாறன் அவர்கள் நீதியை நிலைநாட்ட தீக்குளித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்குத் தெரிவிக்க உயிரையே துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட தம்பி வெற்றிமாறனின் மரணம் பெரும் மனவலியைத் தருகிறது. தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்தி, ஈடுசெய்யவியலா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

தம்பி வெற்றிமாறன் ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது சாதிவெறியர்கள் அதில் முறைகேடுசெய்து, அவரது வேட்புமனுவை நிராகரிக்கச் செய்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்டதற்கு சாதிய ஆதிக்கத்தோடு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால், மனமுடைந்த தம்பி வெற்றிமாறன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து மனுகொடுக்க வந்த நிலையில் தீக்குளித்து தன்னுயிரைப் போக்கியிருக்கிறார். அதிகாரப்பரவலும், சமூகப்பிரதிநிதித்துவமுமே உள்ளாட்சி அமைப்புகள் நிறுவப்பட்டதன் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில், அதனை முற்றிலும் குலைக்கும் வகையில் ஒரு சமூகத்தின் ஆதிக்கமும், சமூக நீதிக்கெதிரான எதேச்சதிகாரப்போக்கும், சரிசமமான வாய்ப்புகளை வழங்கா அசமத்துவமும் நிலவியதைக் கண்டித்து, சனநாயக வழியில் தனது உரிமையை நிலைநாட்டப் போராடி, எவ்விதத் தீர்வும் கிட்டாத நிலையிலேயே இத்தகைய துயரம்தோய்ந்த முடிவை தம்பி வெற்றிமாறன் எடுத்திருக்கிறார். எதுவொன்றிற்கும் உயிரை மாய்த்துக்கொள்வது ஒரு தீர்வில்லையென்றாலும், அவரை இந்த நிலைக்குத் தள்ளியது சாதிய ஆதிக்கமும், அதிகார மையங்களின் அலட்சியப்போக்குமே என்பதில் எவ்வித ஐயமிருக்க முடியாது. உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிடும் எளியவர்களைப் பணபலம், அதிகாரப்பலத்தைக் கொண்டு மிரட்டுவதும், ஆட்களைக்கொண்டு அச்சுறுத்துவதும், வலுக்கட்டாயமாக வேட்புமனுவைத் திரும்பப்பெறச்செய்வதும், பரப்புரைசெய்வதற்கும், வாக்குக்கேட்பதற்கும் இடையூறுசெய்வதுமானப் போக்குகள் மிக இயல்பாக நடந்தேறி வருகிறது. இதனையெல்லாம் கடந்து சாதிய ஆதிக்கத்தையும், அதிகார அத்துமீறலையும் எதிர்த்து, தேர்தலில் போட்டியிட்டு ஒருவர் வென்றுவந்தாலும் அவரைப் பணியைச் செய்யவிடாது இடையூறின் மூலம் முடக்குவதும், பொதுவெளியில் அவமதிப்பதுமான போக்குகள் ஏற்கவே முடியா பெருங்கொடுமையாகும். அத்தகையவர்களைச் சட்டத்தின் மூலம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, உள்ளாட்சியமைப்புகளில் சனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டியது அரசின் தலையாயக்கடமையாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் தம்பி வெற்றிமாறன் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை தந்து, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவழங்க வேண்டுமெனவும், தம்பி வெற்றிமாறன் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தி, அவரது மரணத்திற்குக் காரணமான சாதிவெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி