உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் – சீமான் வாழ்த்து.

3740

புத்தொளி வீசும் புது நாளாம், நல்லவைப் பெருகும் பொன்னாளாம், இடர் பல விலகும் நன்னாளாம் , நன்மைகள் மேவ தவழ்ந்து வருகிற இந்த தை நாளில், நம்பிக்கைகளோடு மலர்கிறது தமிழரின் புத்தாண்டு.

கனிச்சாறு ஊறும் கரும்பும், புத்தம் புதுப் பானையில் இனிப்பிடை ஏறிய வெல்லப்பாகும், பொங்கி வழியும் பொங்கலோடு இனிமை சேர்க்க, ஆண்டு முழுக்க வயற் காடுகளில் உழைத்த உழவர் அறுவடை நாளில் உள்ளம் உவகை நிறைய ,‌ தை முதல் நாளில் கனவுகளோடு பிறக்கிறது தமிழரின் புத்தாண்டு.

இந்தப் புத்தாண்டில் தமிழர் இல்லம் தோறும், தமிழர் உள்ளம் தோறும் வளம் பெருகட்டும், நிலம் செழிக்கட்டும், நலம் நிலவட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

காலம் காலமாய் தொன்று தொட்டு வரும் பண்பாட்டு விழுமியங்கள்தான் ஒரு இனத்தின் ஆகப் பெரும் அடையாளங்கள் . எனவேதான் ‘கால நதியில் தொடர்ந்துவரும் ஒரு இனத்தின் பண்பாட்டு புள்ளிகளை அந்த இனத்திற்கான வேர் முடிச்சுகள்’ என்கிறார்கள் தேசிய இனங்களை ஆய்வுசெய்யும் அறிவியலாளர்கள்.

ஒவ்வொரு இனத்திற்கு என்று தனித்தனி அடையாளங்கள் இருக்கின்றன. வரலாற்றின் வீதிகளில் அந்த அடையாளங்களை காக்கத்தான் காலம் காலமாய் மாந்த இனம் போராடி வந்திருக்கிறது. காலம் தொட்ட அந்த அடையாளங்கள் நாளடைவில் பண்பாடுகளாக பரிணமித்து இருக்கின்றன.

“கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றிய மூத்த குடியான” தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் தாய்மொழியான தமிழ் மொழிதான் உலகில் பேசப்பட்ட முதல் மொழி என அறிஞர்கள் பலரும் நிறுவி விட்ட பெரு உண்மையாக இன்று திகழ்கிறது. தொன்ம மொழி பேசிய தொல் சமூகமாக தமிழர் என்ற மூத்த இனம் விளங்குகிறது.

உலகில் மற்ற இனங்கள் எல்லாம் நாகரீக வளர்ச்சி அடையாத காலங்களிலேயே, இலை, தழை இடுப்பில் கட்டிக்கொண்டு காட்டுமிராண்டிகளாக காடுகளில் அலைந்த காலங்களிலேயே தமிழர் என்கின்ற மூத்த இனம் தான் நாகரீக உச்சம் தொட்டு உலக மாந்த இனத்திற்கு உதாரணமாக மாறி நின்றது.

மற்ற இனங்கள் எல்லாம் சூழ்ந்து நிற்கும் விலங்கு மொழியிலிருந்து, தன் மொழி தேடி நிற்கிற காலத்திலேயே, தமிழர்கள் தன் மொழிக்கென இலக்கணம் கண்டு தொல்காப்பியம் என முது இலக்கியம் கண்டனர்.

அளவற்ற வீரமும், மாசற்ற மானமும் இரு கண்களாகக் கொண்டு, உள்ளம் நிறைந்த அறத்தோடு தமிழர் உலகை வென்று ஒரே குடையின் கீழ் ஆண்டனர். ஆண்ட வரலாறு பழங்கதையாய் மாறிட உலகை ஆண்ட தமிழன் தனக்கென உள்ளங்கை அளவிற்கு கூட நாடு இல்லாமல் உலகமெங்கும்‌ எதுவுமற்ற ஏதிலிகளாய் ஓடித் திரிகிற அவல வரலாறுதான் நம் உள்ளத்தில் அனலாய் சுடுகிறது.

கோட்டைக் கட்டி ஆண்ட இனம் கோணித்துணி போற்றி தூங்குகிறது. உலகத்திற்கே சோறு போட்ட இனம் அரிசிக்காகவும், இலவசங்களுக்காகவும் நியாயவிலை கடைகளுக்கு முன்னால் நின்றுக்கொண்டிருக்கிறது. சாதித்த தமிழன் சாதிகளால், மதங்களால் பிரிந்துக் கிடந்து, வந்தவரை வாழவைத்து, சொந்த நிலத்தில் எதுவுமற்றவனாக மாறிப் போனான். தாழ்வு மனப்பான்மையால் தாழ்ந்த தமிழன் தன் தாய் மொழியை கைவிட்டுவிட்டு, வந்த மொழிகளை எல்லாம் பெருமையாய் கொண்டாடியதன் விளைவு, இன்று நாட்டில், வீட்டில், தெருவில், அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில் என எங்குமே தமிழ் இல்லை. அகிலம் ஆண்ட தமிழ் மொழி கோவில்களில் அர்ச்சனை மொழியாக முழங்க போராடிக் கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்கு என்று இருந்த மற்றொரு தாய் நிலமான ஈழப் பெரு நிலம் சிங்களப் பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டு விட்டது.கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த விடுதலைப் போராட்டம் உலக நாடுகளின் உதவியோடு வீழ்த்தப்பட்டது. அடிமைகளாக சொந்த நிலத்தில் மாறிப்போய் தவிக்கிறார்கள் நம் உறவுகள். ஈழ தேசத்தின் விடுதலைக்காக தன் சொந்த மக்களையே ராணுவமாக உருவாக்கி உலக வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போராடி, தமிழினத்தின் முகமாக, முகவரியாக மாறிப்போனார்கள் விடுதலைப்புலிகள் என்ற நமது உடன் பிறந்தார்கள். தாழ்ந்து கிடந்த தமிழரின் தலை நிமிர்த்த துவக்கேந்தி போராடி, தமிழனுக்கு என ‌ ஒற்றைப் பெருமையாக, மங்கா பெருமிதமாக, அறம் வழி நின்ற, மறம் மொழி பேசிய, என் உயிர் அண்ணன் நம் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் விளங்குகிறார்.

அவர் வழியில் நின்று, அவர் மொழி வெல்ல இன்று இலட்சக்கணக்கான தமிழின இளையோர் நாம் தமிழர் என ‌ வெகுசன அரசியல் படை கட்டி தாயகத் தமிழக வீதிகளில் புலிக் கொடியோடு அணிவகுத்து வருகிற புரட்சிகர காலம் இது.

இந்த நம்பிக்கை மிகுந்த காலத்தில்
உலகத்தின் மூத்த குடியான தமிழர் என்ற தேசிய இனம் தனது இனத்தில் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் பண்டிகையால் பூரித்து நிற்கிறது.

கடந்தகால இன்னல்கள், துரத்தி வரும் துயரங்கள், நம்மை அழிக்க எழுந்த அழிவுகள், நம்மை நித்தம் கொல்லும் நோய்த்தொற்றுகள், நம்மை சூழ்ந்து நிற்கும் அரசியல் கேடுகள் என அனைத்தும் அகன்று
புதிதாய் மலர்ந்திருக்கும் தமிழரின் புத்தாண்டில் நன்மைகள் விளையட்டும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை ஆண்டு வரும் திராவிட அரசியல் தலைவர்களால் சீர்குலைந்த நமது தமிழர் நிலம், தமிழர் வாழ்வு எதிர் வரும் புத்தாண்டில் மீட்சி அடையட்டும். அதற்கான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு தமிழர் உள்ளத்திலும் நடக்கட்டும்.

வையகம் போற்றும் இந்த ‘தை’ திருநாளில்,

கொலை, கொள்ளை, அநீதிக்கு எதிராக, மது மத போதைகளுக்கு எதிராக, சாதிய இழிவு, தீண்டாமைக்கு எதிராக, நிலவள சுரண்டல், கனிமவள கொள்ளைகளுக்கு எதிராக , பாலியல் வன்கொடுமைகள், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக , ஊழல், லஞ்சத்திற்கு எதிராக உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்.

உலகத் தமிழர் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான உறவுகள் அனைவருக்கும், உள்ளம் கனிந்த தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்தி‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டியவர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதா? – சீமான் கண்டனம்