விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து நடக்கவிருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து

252

வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து நடக்கவிருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து

உழவர் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்து பத்து நாட்களுக்கும் மேலாக டெல்லியில் வேளாண் பெருமக்கள் ஒன்றுகூடி வரலாறு காணாத மாபெரும் புரட்சிப்போரினை முன்னெடுத்து வருவது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விவசாயச்சங்கங்கள் நாளை முன்னெடுக்கவிருக்கும் நாடு தழுவிய பொது அடைப்புப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அவர்களது பக்கமிருக்கும் நியாயத்தையும், தார்மீகத்தையும் உணர்ந்து அப்போராட்டத்தின் நோக்கம் வெற்றிபெற துணை நிற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் வரலாற்றுப்பெருங்கடமையாகும். உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அமைதி வழியில் மண்ணின் உரிமைக்காக அல்லும் பகலும் அயராது போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது போற்றுதலுக்குரியது. அதேநேரத்தில், கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது ஈவு இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மை செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இப்புதிய வேளாண் சட்டங்கள் வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளைப் பெருநிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் கொடிய சதித்திட்டமின்றி வேறில்லை. இதை எதிர்த்துத்தான், வேளாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு உழவர்கள் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர்.

ஆனால், வேளாண் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல், அலட்சியம் செய்வதுடன் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும். இதனைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள வேளாண் அமைப்புகள், சனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறையினரும் டெல்லி போராட்டக் களத்தில் நேரடியாகப் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

ஆகவே, இத்தருணத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் நாடு தழுவிய அளவில் உழவர் பெருமக்கள் நாளை முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும் எனவும், அவர்களின் நியாயமான போராட்டம் வெல்ல இறுதிவரை துணை நிற்கும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

May the Nationwide Strike in Support of the Farmers’ Protest in Delhi against Farm Laws Win! – Seeman Wishes

More than 10 days after the farmers from several States rallied in Delhi to demand the repeal of the three recent Farm Laws 2020 introduced by the ruling BJP government in support of Corporates in a bid to oust the peasantry from agriculture, an unprecedented revolutionary war has erupted across the country. In support of the struggle, I fully support the Nationwide General Strike struggle that will be launched by the Farmers’ Unions tomorrow. It is the historic duty of every citizen to realize the justice and morality on their side and to stand by the farmers’ cause of the protest to win. The unity of the farmers who have been fighting tirelessly day and night for upholding their right in a peaceful way, regardless of the life-threatening climatic conditions, is commendable. At the same time, the tyrannical act of the Modi Government, which not only made the farmers to struggle for their right in the streets who fed the entire people of the Indian Union during the COVID-19 Pandemic, but also relentlessly attacked them, is highly condemnable.

The new Farm Laws introduced by the Centre are nothing more than a deadly conspiracy to completely privatize agriculture and turn the country’s farmers into mere workers for wage under Corporate Companies. Against this, the farmers have joined hands to fight together to protect agriculture.

But ignoring the legitimate demands of the farming community and indulging in repression against struggling farmers is the culmination of authoritarianism. Condemning this, farmers’ organizations, democratic movements, and political parties across the Indian Union are taking part in this farmers’ protest in Delhi. For the past 4 days, the Naam Tamilar Katchi’s Farmers’ Wing, have been participating directly in the Delhi battlefield in support of the farmers and fighting for the repeal of the recent Farm Laws.

Therefore, in these circumstances, I declare that we, the Naam Tamilar Katchi, give our full support to the Nationwide Strike organized by the farmers tomorrow to condemn the atrocities against the ruling BJP Government against the farmers and to demand the repeal of the recent Farm Laws, and to stand with the farmers till the victory of this massive, revolutionary protest is achieved.