சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

307

சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியும், ஈரோடு மருத்துவக்கல்லூரியும் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்துக் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக எழும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வரும் நிலையில், அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த இராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியும், பல் மருத்துவக்கல்லூரியும் தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கையை 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி எனும் பெயரில் செயல்பட்டு வரும் நிலையில், அக்கல்லூரியின் கல்விக்கட்டணம் தனியார் கல்லூரியாகச் செயல்பட்டபோது இருந்த அளவிற்கே ரூ 5.44 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநலவழக்கின் மூலம், கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம் அப்போது மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் கட்டணத்தை ரூ 5.44 இலட்சமாக அதிகரித்து அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கொதிநிலையை உருவாக்கியிருக்கிறது. அதேபோல, ஈரோடு மாவட்டம், ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வரும் நிலையில், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியாகச் செயல்படும் அக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களையும், மாணவர்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

இந்த இரு மருத்துவக்கல்லூரிகளையும் அரசே ஏற்றுக்கொண்ட பிறகு, அவை அரசு மருத்துவக்கல்லூரிகளாகச் செயல்படுகின்றன. அவ்வாறிருக்கும்போது, இதர அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைத்தான் இக்கல்லூரிகளிலும் நிர்ணயித்திருக்க வேண்டும். அதனைவிடுத்து, தனியார் மருத்துவக்கல்லூரிகளைவிடக் கூடுதலாகக் கட்டணத்தை வசூல் செய்வது என்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறும் நிர்வாகச்சீர்கேடாகும். இச்செயல், வசதி படைத்தோருக்காகத் தனியாக இரண்டு மருத்துவக்கல்லூரிகளை அரசே நடத்துவது போல உள்ளது. இது சமூக நீதிக்கும், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கும் முற்றிலும் எதிரானது.

ஆகவே, அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணமான ரூ 13,670 யையே இரு அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கும் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். கடலூர் அரசு பல்மருத்துவக் கல்லூரிக்கு, அரசு பல்மருத்துவக் கல்லூரிக்கான கல்விக்கட்டணமான ரூ 11,610 யை கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். இக்கல்லூரிகளில் முதுநிலைப் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளைச் செயல்படுத்திட வேண்டுமென தமிழக அரசைக் கோருகிறேன்.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்றது போல, அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச்செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனவும், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், தொழிற்கல்லூரிகளில் பயிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவிட, தனி நிதியத்தை அரசு உருவாக்கிட வேண்டும். அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கான “போஸ்ட் மெட்ரிக்” கல்வி உதவித் தொகையை உயர்த்தி, முறையாக வழங்கிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி – கிளை கட்டமைப்பு
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்