பொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்‌செயலரைக் கைது செய்ய வேண்டும்!

40

பொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்‌செயலரை கைது செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி கண்டனம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சியில் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு நீதிகேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி வைரமுத்துவை ஊராட்சிச்‌செயலர் ஜீவஜோதி தமது ஆட்களுடன் கடுமையாகத் தாக்கி இருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. நிம்மியம்பட்டு கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்பதால், தனியாருக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றுக்கு அனுமதி வழங்கக் கூடாதென ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி தடுத்து நிறுத்தினர். ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பினையும் மீறி ஊராட்சி செயலர் ஜீவஜோதி ஆழ்துளைக்கிணற்றுக்கு அனுமதி வழங்கியுள்ளார். அதனை எதிர்த்துக் கேள்வி கேட்ட தம்பி வைரமுத்துவை ஊராட்சி செயலர் ஜீவஜோதி மற்றும் அவருடன் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியுள்ளனர். மக்கள் நலனுக்கும், மண்ணின் உரிமைக்கும் எதிராகச் செயல்படும் அரசு அதிகாரிகளை நோக்கிக் கேள்வி எழுப்புவதென்பது அரசியலமைப்பு தந்துள்ள அடிப்படை அரசியல் உரிமையாகும். எனவே, மக்களின் உரிமைக்காக அறவழியில், அமைதியான முறையில் கேள்வி கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய ஊராட்சி செயலர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

மேலும், மக்கள் பணிசெய்ய எவ்விதத் தகுதியும் இல்லாத ஊராட்சி செயலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாகப் போடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றை நிரந்தரமாக மூடவும் உத்தரவிட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால், மிகப்பெரும் மக்கள்திரள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடுமென தமிழக அரசை எச்சரிக்கிறோம்.

– நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருத்தணி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா