பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தடியடி தாக்குதல் காட்டுமிராண்டித்தனம். -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்

123

சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியது குறித்து, நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேற்று (03-07-15) காலை சுமார் 11 மணியளவில் அமைந்தகரையிலுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு பூரணமதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சார்ந்த மாணவ-மாணவிகள் போராடியபோது, அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தை கைவிடும்படி எச்சரித்திருக்கிறார்கள். மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுக்கவே மாணவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியது சகித்துக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமை. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்திருக்கிறார்கள். மாணவி ஒருவரும் மயக்கமடைந்திருக்கிறார். மாணவர்கள் மீதான இந்தக் காவல்துறையின் தாக்குதல் பொறுத்துக்கொள்ளவே முடியாத காட்டுமிராண்டித்தனம். போராடுகிற மாணவர்கள் மீதும், மக்கள் மீதும் தமிழக அரசு காவல்துறையை ஏவிவிடுவது தொடர்கதையாகிவருகிறது. கடந்த மாதம் வேலூரில் செவிலியர் கல்லூரிக்கு அருகேயிருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி போராடிய மாணவிகள் மீதும் இதேபோல தடியடி தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடந்த 15-07-15 அன்று திருச்சியில் டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி போராடிய நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையினர் மீது கொலைமுயற்சி வழக்கு தொடுக்கப்பட்டது. இப்படி மதுபானக்கடைகளுக்கு எதிராக மட்டுமல்லாது மணல் கொள்ளைக்கு எதிராகவும், மக்கள் பிரச்சினைக்காகவும் போராடுகிற மக்கள் மீதே அடக்குமுறைகள் ஏவப்படுவது நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? என்ற கேள்வியை நமக்கு எழுப்புகிறது.
பெற்றோர்கள் ஆங்கிலவழிக்கல்வியை விரும்பினார்கள் எனக் காரணம் சொல்லி தமிழ்வழிப் பள்ளிக்கூடங்களுக்கு மூடுவிழா நடத்திய தமிழக அரசு எந்தப் பெற்றோர்கள் விரும்பினார்கள் என்று மதுபானக்கடைகளைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அருகில் திறந்து வைத்திருக்கிறது? . தீர்ப்பு ஒன்றில், ‘மதுவைக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனிதவெடிகுண்டுக்கு சமம்’ என்று சொல்லி விபத்துகளுக்குக் காரணம் மதுதான் என உரைக்கிறது நீதிமன்றம். அதனைப்போலவே, அதிகம் விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது என்கிறது தேசியக் குற்ற ஆவணத்தின் அறிக்கை. இப்படி, விபத்து, கொலை, கற்பழிப்பு என எல்லா சமூகக்கேடுகளுக்கும் கருவறையாக மது இருக்கிறது என்பதை உணர்ந்து இளைய தலைமுறைப் பிள்ளைகளும், மக்களும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.
டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் தமிழகம் முழுக்க போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அரசு, எலைட் மதுபானக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிற செயலாகும். எலைட் மதுபானக்கடைகளை திறக்கும் முயற்சியை அரசு உடனே கைவிட வேண்டும். இத்தோடு, மதுவிலக்கு கோரி போராடி கைதுசெய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது எந்தவித வழக்குகளும் இல்லாது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் விருப்பத்தை உணர்ந்து அரசு உடனே மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும். அதற்குமுன் முதற்படியாக தமிழகம் முழுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் மதுபானக்கடைகளை அரசு உடனே இழுத்து மூட வேண்டும். இதனை அரசு செய்யத்தவறும் பட்சத்தில் மாணவர்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என
எச்சரிக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்
அடுத்த செய்திகருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான்