இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்!

123

இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஆய்வுக்குழுவில் தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தேசிய இனங்களின் வரலாற்றைத் திரிக்க முற்படும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

இந்திய கலாச்சாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து பெரும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு, அக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளைச் சேர்க்காது முற்றாகப் புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. வரலாற்று ஆய்வை நடத்துவதற்காக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் வெளியிட்ட 16 பேர் கொண்ட நிபுணர்குழு பட்டியலில் இவ்வாறான புறக்கணிப்புகள் நடந்தேறியிருப்பது தற்செயலானதல்ல. இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரும் சதி என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. அக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதன் மூலம் அது தெளிவாகிறது. இத்தோடு, மதச் சிறுபான்மையினர்களோ, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, பெண் ஆய்வறிஞர்களோ இடம்பெறவில்லை என்பதும் அதனை மெய்ப்பிக்கிறது. நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 16 பேரில் 3 ஷர்மாக்கள், 2 சுக்லாக்கள், 1 சாஸ்திரி, 1 தீட்சித் மற்றும் 1 பாண்டே என 14 ஆரியப்பார்ப்பனர்கள் இடம்பெற்றுள்ளனர் எனும்போதே பாஜக அரசின் உள்நோக்கமும், சதிச்செயலும் தெளிவுபட விளங்குகிறது.

இந்தியா என்பது ஒற்றைத்தேசமல்ல. பல தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதைத்தான் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் முதல் உறுப்பு வரையறுக்கிறது. எனவே, குறிப்பிட்ட ஒரு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையோ அல்லது குறிப்பிட்ட ஒரு இனத்தவரையோ மட்டுமே கொண்டு இந்நாட்டின் வரலாற்றை எழுத முனைவதென்பது திட்டமிட்டு வரலாற்றைத் திரித்து எழுத வழிவகுக்கும் கொடுஞ்செயலின்றி வேறில்லை. குறிப்பாக இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளிலேயே கிட்டதட்ட 60 விழுக்காட்டிற்கும் அதிகமான கல்வெட்டுகளையும் , அதேபோல ஓலைச்சுவடிகள், நாணயங்கள், செப்பேடுகள், வரலாற்று வாழ்விடங்கள், அரிக்கமேடு, கீழடி உள்ளிட்ட மிக மூத்த வரலாற்று தொல்லியல் களங்களையும் கொண்டுள்ள நிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், இந்தியாவின் வேறெந்த மொழிகளிலும் இல்லாத அளவிற்கு மூவாயிரம் ஆண்டுகாலப் பழமைமிக்க இலக்கண , இலக்கிய வளங்களுடைய நூல்களைக் கொண்ட மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது. வேற்று நாட்டவர்களெல்லாம் இந்திய துணைக்கண்டத்தின் மீது படையெடுத்து வந்த வரலாற்றுக்கிடையில், கடல் கடந்து அந்நியத் தேசங்கள் பலவற்றிற்கும் படையெடுத்துசென்று வென்ற வரலாறு தமிழர்களுக்கே உரித்தானது. தொழில்நுட்ப வசதி இல்லாத ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரியக் கப்பற்படையும், யானைப்படையும் தமிழர்களிடம் இருந்துள்ளது. எனவே, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்குடியான தமிழ்ப்பேரினத்தின் வரலாற்றை, தமிழ் மொழியின் தனித்துவமிக்கச் சிறப்பையும், அளப்பெரும் பெருமையையும், தமிழ் மண்ணின் செழுமைமிக்க மரபையும், பண்பாட்டையும் அறியாத, சிறிதும் தொடர்பற்ற ஒரு கூட்டம் வரலாற்றை எழுதுமாயின் அது தமிழர்களைச் சிறுமைப்படுத்தும் வரலாறாகவே அமையும். கீழடி வரலாற்றை மறைக்க முயன்றதுபோல, தமிழர்களின் பெருமைமிக்கத் தொல் வரலாறும் மூடி மறைக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான திரிபு வரலாறு உட்புகுத்தப்படும். ஒரு நூற்றாண்டாகப் பெரிய அளவில் தொல்லியல் ஆய்வு செய்து நிறுவப்பட்ட சிந்துசமவெளி நாகரீகம் ஒரு தமிழர் நாகரீகம் என்பதற்கான வரலாற்றுச்சான்றுகள் அழிக்கப்படக்கூடும். மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் இம்மண்ணிற்கு அந்நியர்கள் எனும் தொல்லியல் முடிவுகள் இனி மாற்றி எழுதப்படும். அதற்காகவே உலகப் பிரமாணச் சங்கத்தின் தலைவராக உள்ள எம்.ஆர்.ஷர்மா, ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானத்தின் துணைவேந்தர் பி.என்.சாஸ்திரி, உள்ளிட்டப் பெரும்பாலான வடமொழிப் பேராசியர்களை வரலாற்று ஆய்வறிஞர் போர்வையில் இந்த நிபுணர் குழுவில் உள்நுழைத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வக்குடிகள், இந்நாடு ஆரியர்களுடையது, ஆரிய மதமே இந்நாட்டின் பூர்வீக மதம், ஆரிய வேத, புராண, இதிகாசங்கள் கூறும் பண்பாடே இந்தியாவின் பண்பாடு என்பதை நிறுவவே மத்தியில் ஆளும் பாஜக அரசு இத்தகையப் படுபாதகச்செயலை அரங்கேற்றியுள்ளது. அவ்வாறு நிறுவுவதன் மூலம் இந்து, இந்தி, இந்தியா என்ற பாஜகவின் மனுதர்மக் கோட்பாட்டினை இந்நாடு முழுவதும் கட்டமைத்து நாட்டிலுள்ள பலவகைப்பட்ட தேசிய இனங்களின் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வரலாறு, வழிபாடு ஆகியவற்றினை முற்றாகச் சிதைக்க முற்படுகிறது. இது தேசிய இனங்கள் மீது மத்தியில் ஆளும் மோடி அரசு நிகழ்த்தப்போகும் பண்பாட்டுப்படையெடுப்பு என்றால், மிகையல்ல. ஆரியமயமாக்கலுக்கு எதிரான மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக தேசிய இனங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் பெருங்கடமையாகிறது.

ஆகவே, இந்திய ஒன்றியத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவினை உடனடியாகத் திரும்பப் பெற்று, புதிதாகக் குழு அமைத்து அக்குழுவில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள், பட்டியல் சமூகத்தவர், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்களுக்குமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு, வரலாற்றுச்சான்றுகள், தொல்லியல் முடிவுகள் அடிப்படையில் வரலாறு பதிவுசெய்யப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநீட் தேர்வை எதிர்த்து போராட்டம் (காட்டுமன்னார்கோ கோயில்)
அடுத்த செய்திநீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் – சிவகாசி