தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்!

805

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் | நாம் தமிழர் கட்சி

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரித்தானிய நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார்.

ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கிக் கொண்டனர். ஒரே ஒரு மனிதர் மட்டும் கைகுலுக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டார், திகைத்து நின்ற மன்னர், ஏன் ?- என்று காரணம் கேட்டார். அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தொடக்கூடாது, நான் இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், ‘தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தாராம். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார்.

ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார். அப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என்று விழி பிதுங்க வினாத் தொடுத்தார்.

“ஆமாம்; உங்கள் ஆட்சியிலே, இந்தியாவிலே இது தான் நடைபெறுகிறது” என்று பதில் மொழி பகன்றார். மேலும், அன்று நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பேசுகிறபோது, “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டாமைக் கொடுமை ஒழியும். சட்டமன்றத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்” என்று வலியுறுத்தினார்.
அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆங்கிலயே தேசத்தில் உயர்ந்து ஓங்கி ஒலித்த அந்த குரலுக்கு சொந்தமான மாமனிதர் பெயர்தான் இரட்டைமலை சீனவாசனார்.

செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்னும் சிற்றூரில் 07.07.1859 ஆம் நாள், இரட்டைமலை-ஆதிஅம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் இரட்டைமலை சீனிவாசன்.

அவரது குடும்பம் செங்கற்பட்டு மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, பல துன்பங்கள் அடைந்தது, அதனால், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிழைக்கச் சென்றார்கள். அங்கேயும் தாழ்த்தப்பட்டவர்கள் வயலில் அடிமை வேலை செய்ய வேண்டும், முழங்காலுக்கு கீழே வேட்டி உடுத்தக் கூடாது-செருப்புப் போடக் கூடாது,மேல் சட்டை அணியக் கூடாது, உயர்ந்த வகை உணவு உண்ணக் கூடாது என்று மிருகத்தை விடக் கேவலமாக மேலாதிக்கத்தினாரால் நடத்தப்பட்டனர்; ஒடுக்கப்பட்டனர்.

திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பட்டினியும், பசியும், வறுமையும் கூடவே விரட்டியது. ஆனாலும், பெற்றோருடைய விடா முயற்சியாலும், கல்வி மீது கொண்டிருந்த பேரார்வத்தாலும் தஞ்சையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். குடும்பத்தின் வறுமையினையும் தாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களில் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.

நீலகிரியில் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1882 ஆம் ஆண்டு எழுத்தர் பணியில் சேர்ந்தார். ரெங்கநாயகி என்பவரை 1888 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக, போராட்டக்காரராக உருவாக, அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனுபவித்தக் கொடுமைகளுமே காரணமாக அமைகின்றன.
இரட்டைமலை சீனிவாசன் தன்னுடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.

இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1904 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு நேட்டால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ‘மோ.க.காந்தி’ என்று தமிழில் கையெழுத்து இடக்காரணமாக இருந்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் என்பது வரலாற்றுப் பதிவு! தென்னாப்பிரிக்காவல் 1920 ஆம் ஆண்டுவரை பணி புரிந்தார்.

இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை மெட்ராஸ் மாகாண சட்டமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றவர்களுக்குச் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங்களிலும், கட்டிடங்களிலும் நுழையவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.

தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க ‘தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம்’ எனும் அமைப்பை உருவாக்கினார். சென்னை மாகாணம் தழுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க அதிகமான விடுதிகளும், கல்வி உதவிப் பணமும், மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆரம்பக் கல்வி, இலவசமாகவும் கட்டாயமாகவும் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமெனில், தனிப் பள்ளிகள் திறக்கப்பட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை முன்வைத்து முனைப்போடு செயல்பட்டார்.

இரட்டைமலை சீனிவாசன் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ‘பறையன்’ என்ற தமிழ் மாத இதழை வெளியிட்டார். அவ்விதழ் பின்னர் வார இதழாக வெளிவந்தது. பறையன் இதழ் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாக விளங்கியுள்ளது. பார்ப்பனியத்தை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும், ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்துள்ளது.

சென்னை விக்டோரியா மண்டபத்தில் 07-10-1895- ஆம் நாள் ஓர் மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டின் மூலம், அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும் அம்மாநாட்டில், “நாங்கள் கணக்கிட முடியாத ஆண்டுகளாக கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது. எதிர்காலத்தில் எங்களது சமுதாய மக்கள் சமத்துவமாக வாழவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் இனிமேலும் குறுக்கிட்டால் நாங்கள் இனிமேலும் சகித்துக் கொள்ளமாட்டோம். நாங்கள் எந்த விதமான கொடுமைகளையும் ஏற்க மாட்டோம்”-என்ற சூளுரையை நாடு அதிரும்படி வெளியிட்டார் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார்!

மேலும், அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடவும், அரசாங்க அலுவலகங்களில் இடம் பெறவும், விமானம், கடற்படை, இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றிடவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வேண்டும் என முழக்கமிட்டார்.

சென்னை மைலாப்பூர் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்! இவை, அன்று பரபரப்பாக பேசப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள்.

கிருஷ்ணா மாவட்டத்தில் 28.04.1894 ஆம் நாள், தமது தலைமையில் நிலப் போராட்டத்தை இரட்டை மலை சீனிவாசன் துவக்கினார். இப்போராட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய அரசு நிலம் அளித்தது. இந்நிலத்திற்கு ‘பஞ்சமி’ நிலம் என்ற பெயரும் வைத்தது!

‘தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வயதை ஏனைய, வேறு சாதியினர் வயதுடன் ஒப்பிடக்கூடாது; வறுமை, ஏழ்மை ஆகிய காரணங்களால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், குறிப்பிட்ட வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத காரணத்தால், வயது வரம்பை தளர்த்திட வேண்டும்’– என்றெல்லாம் இரட்டைமலை சீனிவாசன் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

தீண்டாமையை அடியோடு ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமை புரிபவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, தண்டனை அளித்து அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று கடுமையாக சட்டமன்றத்தில் பேசினார்.

சிறையிலும் சாதிப் பாகுபாடு நிலவியதை கண்டித்ததுடன், குற்றவாளிகளில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

தமிழக சட்டமன்ற மேலவையில், “பல ஏழை மக்களின் உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்” – என்ற தீர்மானத்தை இரட்டைமலை சீனிவாசன் கொண்டுவந்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், விழா நாட்களிலும், அரசு விடுமுறையின் போதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற தீர்மானத்தையும் சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தார். ஏழை எளிய மக்கள் மதுவுக்கு அடிமையாகி, தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனரே என மனம் வருந்தினார். இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரும்பாடுபட்டார்.

தாழ்த்தபட்டவர்களின் கோயில்களில் ஏனைய சாதியைச் சேர்ந்தவர்கள் உள்ளே செல்லலாம். ஆனால், சாதி இந்துக்களின் கோயில்களில் தாழ்த்தப்பட்டவரை அனுமதிக்காமல் இருப்பது அநீதி அல்லவா? மண் சுமந்து கோயிலைக் கட்டும் சாதி மக்கள் கோயிலுக்குள் செல்ல தடைவிதிப்பது கொடுமையல்லவா? பார்ப்பனர்கள், வருமானம் பெற அனைத்துக் கோயில்களையும் கைப்பற்றிக் கொண்டது கண்டனத்துக்குரியதல்லவா? என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன்! மற்ற சாதி மக்கள் எப்படி சுதந்திரமாகக் கோயிலுக்குள் செல்கின்றார்களோ, அதைப் போல் ஒடுக்கப்பட்ட மக்களும் செல்ல உரிமை வேண்டும் என்று உரத்த குரல் கொடுத்தார்.

இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கொண்டு வந்த தனித் தொகுதி முறையை காந்தியடிகள் கடுமையாக எதிர்த்து எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.

“தனித்தொகுதி என்பது தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்படவில்லை. இந்தியக் கிருத்தவர், ஐரோப்பியர், முஸ்லீம்கள், சீக்கியர் ஆகியோர் அனைவருக்கும் அளித்துள்ளனர். ஏன் காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் பிரித்து இந்த நிலையை எடுத்துள்ளார் என்பது விசித்திரமாக இருக்கிறது”- என்றார் டாக்டர் அப்பேத்கர். இறுதியில் காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, காந்தியடிகள் விருப்பத்துக்கே விட்டுவிட்டார் டாக்டர் அப்பேத்கர். அது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது.

கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களை சுதந்திர மக்களாக்கியவர்!-மூடப் பழக்கங்களில் மூழ்கிப் போனவர்களை சிந்திக்கும் மனிதர்களாகச் செதுக்கியவர்! – இருண்ட உலகில் பயணம் செய்தவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்! ஊமைச் சமுதாய மக்களைப் பேச வைத்தவர்! – உரிமைகளைப் பெற வைத்தவர்!- ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தத்தளித்துக் கிடந்த மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர்! தான் உறங்காமல், உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பி உசுப்பியவர்! தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ‘உத்தமர் தாத்தா’! அப்பெரியவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 ஆம் நாள் தனது எண்பத்தி ஆறாம் வயதில் இயற்கை எய்தினார்.

இந்திய பெருநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் பெற்றுத்தர இருபெரும் குரல்கள் வலுவாக ஒலித்தன. வடக்கிருந்து அண்ணல் அம்பேத்கரும் , தெற்கிலிருந்து தாத்தா இரட்டைமலை சீனிவாசனாரும் வட்டமேசை மாநாடு முதல், காந்தியுடன் ஒப்பந்தம் , போராட்டங்கள், சட்டம் இயற்றும் மன்றங்களில் போர்க்குரல் எழுப்பது என இருவரின் குரல்களும் இறுதிவரை உறுதியாக பட்டியலின மக்களுக்காக பாடுபட்டன.

ஆனால் அண்ணல் அம்பேத்கர் புகழ் நாடு முழுதும் சென்று சேர்க்கப்பட்ட அளவுக்கு நாம் நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனாரின் செயல்பாடுகளை கொண்டு சேர்த்தோமா என்றால் இல்லை என்பதே விடையாக கிடைக்கும்.
தமிழ்நாட்டை தாண்டவில்லை என்பதல்ல இன்றும் தமிழர்கள் பலருமே அறியாதிருக்கிறோம் என்பதே வரலாறும் உணர்த்தும் உண்மை.

தாத்தா இரட்டை மலை சீனிவாசனினாரின் பணியைப் பாராட்டி தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்த்தென்றல் என்று பட்டம் கொண்டவர் தமிழ் மணி என்று பட்டம் வழங்குவதற்கு பதிலாக திராவிட மணி என்று வழங்கியது
வருத்தமே! தமிழரின் வரலாறு சறுக்கிய இடம் அதுதான்.

திராவிடத் தலைவர்கள் இந்த மண்ணில் பேசப்பட்டு, புகழப்பட்ட அளவுக்கு தமிழ்த்தலைவர்கள் ஏன் பேசப்படவில்லை என்ற வினாவுக்கு விடையை தேடத்தொடங்கினால் அது தமிழன் எப்படியெல்லாம் இந்த மண்ணில் இருட்டடிப்பு செய்யப்பட்டு வஞ்சிக்கப்பட்டனர் என்ற வரலாற்றை கூறும்.

இந்த துரோக வரலாற்றிலிருந்து தமிழ்த்தலைவர்களை மீட்டெடுத்து இளந்தமிழ் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கவேண்டியது நமது இனத்திற்கு நாம் செய்யவேண்டிய பெருங்கடன்.

தாத்தா இரட்டைமலை சீனிவாசனாருக்கு அவருடைய பிறந்தநாளான இன்று நாம் தமிழர் கட்சி புகழ்வணக்கத்தை செலுத்துவதில் உவகை கொள்கிறது.