உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று, உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடிப்போம்! – சீமான் சூளுரை

200

உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பெற்றுகொடுத்த உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று அவ்வுரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடிப்போம்!
– சீமான் சூளுரை

பேரன்புகொண்டு நேசிக்கின்ற உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த வணக்கம்!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

தமிழ்மறையோன் வள்ளுவப்பெருமகனார் தந்தருளிய மறைமொழியில் உழவாண்மையின் சிறப்பையும், மேன்மையையும், பெருமையையும் இவ்வாறு போற்றிப்புகழ்கிறார். உழவு இல்லையென்றால், உணவு இல்லை! உணவு இல்லையென்றால், உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையென்றால், உலகு இல்லை! எனவேதான், உழவை மீட்போம்! உலகை காப்போம்! என்ற பெருமுழக்கத்தை முன்வைத்து தொன்றுதொட்ட நமது பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்க ஒரு புரட்சியை முன்னெடுத்து வருகிறோம்.
வேளாண் குடிமக்கள் யாவரும் இன்று எவ்வளவு துயரத்துன்பத்திற்கு ஆட்படுகிறார்கள் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். ஒரு நாட்டில் ஒரு உழவர் குடிமகன் வாழ்கிறானென்றால், அந்நாடும் வாழ்கிறது; வளர்கிறது என்று பொருள். உழவர்கள் வாழ முடியாது உயிர் இழக்கிறார்களென்றால் அத்தகைய நாடு நாடே அல்ல; சுடுகாடு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு வேளாண்குடிமகன் மரணிப்பது இன்று நமக்குச் செய்தியாக இருக்கலாம். ஆனால், அது நாளை நாம் உணவின்றி பட்டினிக்கிடந்து சாகப்போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
உலகில் வேளாண்மையைக் கைவிட்ட எல்லா நாடுகளும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்றன. வேளாண்மை என்பது வெறுமனே ஒரு தொழிலல்ல; அது நம் பண்பாடு, வாழ்வியல் முறை. அத்தகைய வேளாண்மை செழித்து வளர்ந்தோங்குவதற்கு, வேளாண் குடிமக்கள் வாழ்வதற்குப் பல போராட்டங்களை நம்மின முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். பாசனத்திற்குப் பயன்படுத்துகிற நீரினைப்பெற தேவையான மின்சாரத்திற்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி எண்ணற்ற வேளாண் குடிமக்கள் போராடியிருக்கிறார்கள்.

உலகின் எல்லாப்பொருள்களுக்கும் அதனை உற்பத்தி செய்கிறவர்களே விலையை தீர்மானிக்கிறபோது வேளாண் பொருள்களுக்கு மட்டும் வாங்குகிறவர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது அளவிட முடியா பெருந்துயரம்; பேரவலம். அதனாலேயே, உழவாண்மை நலிந்து வேளாண் குடிமக்கள் வாழ முடியாத கொடுஞ்சூழல் உருவாகிப்போனது. எனவே, அந்த வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்கு, விவசாயிகளை வாழ வைப்பதற்கு இலவச மின்சாரத்தை அரசு கொடுத்துதவ வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்கள் எழுந்தன. முதன்முதலில் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் விவசாயிகளின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் தேதியன்று மூன்று வேளாண் குடிகள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்கள். அந்தநாளை ஒவ்வொரு உழவன் குடிமகனும் தலைமுறை தலைமுறையாக வருகிற அவர்களது பிள்ளைகளும் நன்றியுணர்வோடு நினைவுகூற வேண்டிய வரலாற்று பெருங்கடமை நம் ஒவ்வொருவருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. அத்தகையப் பெரும்போராட்டங்களைச் செய்து இலவச மின்சாரத்தை அவர்கள் நமக்குப் பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால், இன்று அந்த இலவச மின்சாரமும் நீக்கப்படுகிற ஒரு அவலச்சூழல் உருவாகியுள்ளது. 1970 ல் ஓர் அலகு மின்சாரத்திற்கு 8 காசிலிருந்து 10 காசாக உயர்த்தியதை எதிர்த்து தமிழக வேளாண் குடிகள் போராடினார்கள். அதே ஆண்டில், மே 9 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள், உழவு எந்திரங்கள் பங்கேற்றுப் பேரணியாக ஒரு போராட்ட வடிவத்தை முன்னெடுத்தார்கள். கோவை நகரை மட்டுமல்லாது இதர தமிழக நகரங்களையும் ஒட்டுமொத்தமாகத் திக்குமுக்காடி திணறச்செய்தது அன்றைய விவசாயிகளினுடைய எழுச்சி மிகுந்த அப்போராட்டம். நகரங்கள், உறைந்தன; கிராமங்கள் அதிர்ந்தன. மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெறாவிட்டால், சூன் 15 ல் அரசு அலுவலங்கள் முன் மறியல் போராட்டம், சூன் 19 ஆம் தேதி நாடெங்கும் கடையடைப்பு எனப் பேரறிவிப்புச் செய்யப்பட்டது. அப்பெரும் போராட்டத்தில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் பெருமாநல்லூரைச் சேர்ந்த ஆயிகவுண்டர் (33) , மாரப்பக்கவுண்டர் (37) , பெருந்தகை ராமசாமி (25) ஆகியோர் உயிர்ப்பலி ஆனார்கள். அப்போராட்டத்தில் கொடிய அடக்குமுறை கையாளப்பட்டது. அன்றைய போராட்டத்தில் மூன்று உழவர்களின் உயிர்களைப் பறித்தது அன்றைய திமுக ஆட்சி. அதனால் ஏற்பட்ட பெரும்விளைவுகள் அரசை பணிய வைத்து ஓர் அலகுக்கான மின்கட்டணத்தை ஒரு காசு குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், கடன் வசூல் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்பலியான அந்தக் காயங்கள் ஆறுவதற்குள்ளாகவே மீண்டும் மாநில அரசு மின்கட்டத்தை 9 காசுலிருந்து 12 காசாக உயர்த்தி 01.01.1972 அன்று முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்டத்தில் மீண்டும் 1972 மார்ச் மாதம், 12 முதன்மைக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தினை வேளாண் குடிகள் முன்னெடுத்தார்கள. 15.04.1972 க்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடுவிதித்தார்கள். மே 9 அன்று மறியல் போராட்டம் தொடங்கியது. போராடிய வேளாண்குடிகள் கைதுசெய்யப்பட்டுச் சிறைபடுத்தப்பட்டனர். இதற்குப் பின்பும், அரசு பணியாததால் கோவை விவசாயிகள் 07.06.1972 ல் மாட்டுவண்டிப் போராட்டத்தைப் பெரியளவில் முன்னெடுத்தார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதியிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான மாட்டுவண்டிகள் கோவை மாநகரின் சாலைகளிலும், சிறு, பெரு தெருக்களிலும் , மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரமே உறைந்து போனது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ எனும் பன்னாட்டு இதழ் போராட்டத்தைப் பாராட்டி எழுதி இருந்தது. ‘மாட்டு வண்டிகள் இந்திய வேளாண்குடிகளின் பேட்டர்ன் டாங்குகள்’ என்று இப்போராட்டச் செய்தியை அவர்கள் பதிவு செய்தனர். போராட்டத்தின் வீச்சை அதன் வெளிப்பாட்டை உணர்ந்த அரசு பணிந்தது. பெருந்தகை நாராயணசாமி அவர்கள் தலைமையில் 1972 சூன் 13 ம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை நடந்த போராட்டத்தின் வீச்சை அதன் தாக்கத்தை உணர்ந்த அரசு பணிந்தது. பெருந்தகை நாராயணசாமி அவர்கள் தலைமையில் 1972 சூன் 13 ம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை அரசுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. அதன்படி, சூலை 19 அன்று ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு தற்காலிகத்தீர்வு மின்கட்டண உயர்விற்கு உண்டானது. அதன்படி, மின்கட்டணம் ஓர் அலகிற்கு ஒரு காசு குறைக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட வேளாண் குடிகள் விடுவிக்கப்பட்டார்கள். வேளாண்குடிகளுக்கு இலவச மின்சாரம் என்ற கோரிக்கை ஏறத்தாழ 20 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு, பல வேளாண்குடிகளின் உயிர்த்தியாகத்திற்குப் பிறகுதான் கிடைக்கப்பெற்றது. கட்டணம் இல்லாத மின்சாரத்தைப் பெறுவதற்கு ஒட்டுமொத்தமாக 67 வேளாண் குடிமக்களின் உயிர்களை நாம் ஈகம் செய்துள்ளோம். அவர்களினுடைய உயிர் ஈகத்தின் பயனாகத்தான் கட்டணமில்லா மின்சாரத்தைப் பெற்று ஓரளவுக்கேனும் நம்முடைய வேளாண் குடிமக்கள் வேளாண் தொழிலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பமைந்தது. இன்று மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசு, ‘புதிய மின் அலகு திட்டம்’ என்ற ஒன்றை கொண்டுவந்து அதையும் பறிப்பதற்கு வேலை நடக்கிறது. நாம் அதற்கெதிராக நம் முன்னார்களைப் போல மாபெரும் மக்கள் புரட்சிக்கு அணியமாக வேண்டும் என்பதுதான் உயிர்த்தியாகத்தின் மூலம் உழவுக்குக் கட்டணமில்லா மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்த நம் முன்னோர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழியாகும். ஆகவே, கட்டணமில்லா மின்சாரத்தை உழவுக்குப் பெற்றுக் கொடுத்த உழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று அவ்வுரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடித்திட உறுதியேற்போம்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி