தமிழக முதல்வருடன் சீமான் நேரில் சந்திப்பு – முழு விவரம்

212

செய்திக்குறிப்பு: தமிழக முதல்வருடன் சீமான் நேரில் சந்திப்பு – முழு விவரம் | நாம் தமிழர் கட்சி

இன்று 06-02-2020 வியாழக்கிழமை பிற்பகல் 01:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளார், இச்சந்திப்பின் போது,  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்கோட்டுதயம், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இராஜேந்திரன், இராவணன், அன்புத்தென்னரசன், மருத்துவர் சிவக்குமார், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

  1. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறைக்கெதிரான தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, மாணவர்களின் நலனுக்காக அரசின் முடிவை மீளாய்வு செய்து, அத்தேர்வுமுறையை ரத்து செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
  2. தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழர்களின் கலைநுட்பத்தை உலகுக்குப் பறைசாற்றி வரும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்திட நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அதற்கு உயர்நீதிமன்றத்தின் வழியாக ஒப்புதல் அளித்து, தமிழிலும் குடமுழுக்குச் செய்ய வழிவகைச் செய்து, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் விழாவினை வெகுசிறப்பாக நடத்தி முடித்தமைக்காக தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  3. தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் தலை நிலமான குறிஞ்சி நிலத்தின் தலைவனும், தமிழர் இறைவனுமான தமிழ்ப்பெரும் மூதாதை முப்பாட்டன் முருகனைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை (பிப்ரவரி 08, தை 20) அரசுப் பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களும் முன்வைத்திருக்கிற கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறோம்.
  4. முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தி உறுதியாக நின்றிட்ட எழுவர் விடுதலைக்குத் தமிழகச் சட்டமன்றத்தில் 161வது சட்டப்பிரிவின்படி, ஒருமித்த தீர்மானம் இயற்றி, பின்னர் அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநருக்கு அனுப்பி ஓராண்டைக் கடந்தும் அதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. எனவே தமிழக அரசு, தமிழக ஆளுநருக்கு உரிய அழுத்தம் தந்து உடனடியாக எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்தி, உலகத்தமிழர்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக கோருகிறோம்.
  1. இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் ஹைட்ரோ-கார்பன் எடுத்தல், மீத்தேன் எடுத்தல், ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய்களைப் பதித்தல் போன்ற நாசகாரத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்து, அக்கொடியத் திட்டங்களைக் கைவிட வேண்டும் எனவும், அப்போராட்டக்களத்தில் பங்காற்றிய மண்ணுரிமைப் போராளிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற மிகையில்லாப் புகழுரைக்கு இலக்கணமாய்த் திகழும், உலகின் மிக நீண்ட சமவெளி பகுதியைக் கொண்ட, தமிழகத்தின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம்’ காவிரிப்படுகையினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
  2. உலகிலேயே மூத்த மொழியான தமிழ்மொழிக்கு, தமிழகக் கோயில்களில் முழங்க இருந்துவரும் தடையை நீக்கி, தமிழகக் கோயில்களின் வழிபாட்டு மொழியாகத் தமிழையே முதன்மைத்துவம் பெறச் செய்ய வேண்டும் எனவும், ‘இந்துசமய அறநிலையத்துறை என்பதனை ‘தமிழ்ச் சமய அறநிலையத்துறை’’ எனப் பெயர் மாற்றி அறிவிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கோருகிறோம்.
  3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேராக விளங்கும் மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை அடியோடு தகர்த்து, இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவினையும், அதன் நீட்சியாக உள்ள தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் தமிழக அரசு நிராகரிக்கக் கொள்கை முடிவெடுத்து, தமிழகச் சட்டமன்றத்தில் அதற்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
  4. தாய்த் தமிழகத்தை நம்பி தஞ்சம் புகுந்திருக்கும் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம்களை மூடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களின் நல்வாழ்வினையும், வாழ்வாதாரத்தினையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் சீமான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: தைப்பூசப் பெருவிழாவையொட்டி திருமுருகன் குடில் அமைத்து வேல் வழிபாடு – மதுரவாயல்
அடுத்த செய்திசுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி