இறையன்பு, உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது – சீமான்

565

தமிழக சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மொழியின் மீட்சி, தமிழர்களின் நலன், தமிழினத்தின் தன்னுரிமை, வளக்கொள்ளைக்கெதிரான மண்ணுரிமை, சமூக நீதி, மாநிலத்தன்னாட்சி, ஏழ்வர் விடுதலை, மதவாதத்திற்கு எதிரானப் போர் போன்றவற்றில் சமரசமின்றி நின்று நிலைபெற்று தமிழகத்தின் குரலாய் ஒலிக்க வேண்டுமென விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!

தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல்கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி – அண்ணல் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்கம்