ரஷ்யாவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு இந்திய பொருளாதாரம் மேம்பட்டுள்ளதா? – சீமான் விமர்சனம்!

32

கிழக்கு மண்டல பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 3ஆம் தேதி ரஷ்யா சென்றிருந்தார். கடந்த 5ஆம் தேதி விளாதிவோஸ்டோக் நகரில் நடந்த மாநாட்டில் பேசிய பிரதமர், “மத்திய அரசின் ‘கிழக்கு நோக்கி’ கொள்கையின் அடிப்படையில் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக 7,200 கோடி கடன் அளிக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் ரஷ்யாவிற்கு கடன் அளிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்,  ரஷ்யாவுக்கு கடன் கொடுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றபிறகு  செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:

பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பும்தான் பொருட்கள் வாங்கும் திறனற்றவர்களாக மக்களாக மாற்றியுள்ளது. அதுதான் ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகள் வீழ்ச்சியடைந்ததற்கு காரணம். இதிலிருந்து எப்படி மீள்வது என்று விழித்துக்கொண்டிருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை எடுப்பது பேராபத்துக்குரியது. இதைவிட இக்கட்டான நிலையில் கூட மத்திய அரசுகள் அதனை செய்யவில்லை.

தற்போது நாம் 57 லட்சம் கோடிக்கு மேல் கடனை வைத்துள்ளோம். மிகப்பெரிய பொருளாதார இக்கட்டில் இருக்கிறோம். ரூ.2500 கோடி முதலீடுகளை தமிழகம் கொண்டு வருவதற்கு முதல்வர் நாடுநாடாக சுற்றிவருகிறார். ஆனால், பிரதமர் 7,200 கோடியை ரஷ்யாவிற்கு கடனாகக் கொடுக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார். இந்தியாவிடம் ரஷ்யா கடன் கேட்டதா? ரஷ்யாவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு இந்திய பொருளாதாரம் மேம்பட்டு இங்குள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா?

இங்கு ஆயிரம் அத்தியாவசிய பிரச்சினைகள் இருக்கும்போது மத்திய அரசு ரஷ்யாவிற்கு 7,200 கோடியை தூக்கிக்கொடுப்பது முரணானது.

இவ்வாறு அவர் விமர்சித்தார்.

நன்றி: நேர்மை – https://nermai.net/news/6296/1f264d661c72072c11383cc8408fa7db

India to Give $1 Billion Loan for Development of Russia’s Far East, Says PM Modi 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அரசர்க்கு அரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழாக் குழு
அடுத்த செய்திசெங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்-வால்பாறை