பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு -சென்னை

374

பொதுவாழ்வில் உண்மையும், தனிவாழ்வில் எளிமையும் கொண்டு வாழ்ந்த மக்கள் தலைவர், நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2021 வியாழக்கிழமை காலை 11 மணியளவில்,  கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஊழல், இலஞ்சமற்ற, உண்மையும், நேர்மையுமாக இப்படி ஒரு அமைச்சர் இருந்தார் என்பதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடைய பெரும் பொறுப்பு. பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்கள் பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய பெருந்தகை, தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, அந்த பணியை விட்டுவிடு, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொன்னவர் நம்முடைய தாத்தா கக்கன் அவர்கள். அரசு பேருந்தில் ஒரு அமைச்சர் பயணம் செய்தார் என்று சொன்னால் இன்றைய தலைமுறை பிள்ளைகள் நம்ப மறுப்பார்கள். தமிழ்நாட்டு அமைச்சரவையிலிருந்த ஒரு அமைச்சர், அரசு மருத்துவமனையிலே அதிலும் தரையில் படுத்திருந்தார் என்பதையெல்லாம் நமப மறுக்கிறது மனம். ஒரு நேர்மையாளர் நம்முடைய தாத்தாவாக இருந்தார் என்பதை எண்ணிப் பெருமைப்பட ஒன்றாக இருக்கிறது. அந்த மகத்தான பெருமகனுக்கு எங்களுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம். அவர் எந்தப் பாதையில் உண்மையும் நேர்மையுமாகப் பயணித்து இந்த மக்களுக்குத் தொண்டாற்றினாரோ அதைப்போலவே நாங்களும் இந்த மக்களுக்குப் பாடுபடுவோம் என்ற உறுதியை ஏற்கிற நாளாக இந்த நாளினை நாங்கள் கருதுகிறோம்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் மட்டும்தான் கொடுக்க முடியும். இந்திய ஒன்றிய அரசுதான் தலையிட்டு இந்துபோன்ற செயல்கள் தொடரா வண்ணம் தீர்வுகாண வேண்டும். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை நான் அருவருக்கிறேன். கடலில் எப்படி எல்லை பிரிக்க முடியும்? கைது செய்யப்படுபவர்கள், கொல்லப்படுகிறவர்கள் தமிழர்கள் என்பதால் இந்திய ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஒரு மகாராஷ்டிரா மீனவர் கொல்லப்ப்பட்டதற்குப் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது வழக்கே தொடரப்பட்டது. ஆனால் 800 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது அத்தகைய நடவடிக்கை ஏன் இல்லை? அதிக வரி செலுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழர்களின் வரி வேண்டும், வாக்கு வேண்டும், அவர்களின் உயிரோ, உடைமையோ, உரிமையோ வேண்டாம் என்பதை எப்படி ஏற்பது? காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதே எதார்த்த உண்மையாக இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடிதம் மட்டுமே எழுதுவதாக விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது அவரும் கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார். 18 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவையில் தொடர்ச்சியாகத் திமுக அதிகாரத்திலிருந்தபோது கட்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடல் தாமரை மாநாடு நடத்தி கட்சதீவை மீட்போம் என்று சொன்ன பாஜக தற்போது அதுகுறித்து வாயே திறப்பதில்லை. கச்சத்தீவை மீட்பதுதான் மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

பெருந்தலைவருக்கு பிறகு அவரளவுக்கு ஒரு நேர்மையான முதல்வர் இல்லை என்ற கருத்தை நான் ஏற்கிறேன். நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, மஞ்சள் பை திட்டத்தைத் தமிழக முதல்வர் தொடங்கியுள்ளதை வரவேற்கிறேன். வெற்று அறிவிப்பாக இல்லாமல் அதைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.

முந்தைய செய்திசென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடமும், உரிய இழப்பீடும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
அடுத்த செய்திமொரப்பூரில் திமுக குண்டர்களின் அட்டூழியத்தைக் கண்டித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழினிசாமிக்கு நன்றி தெரிவித்த சீமான்